November 29, 2022

87வது மான் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியது இதுதான்!

டந்த 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல், ‘மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில், பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசினார்.

இன்று மோடி பேசியது:

இந்தியா கடந்த வாரம் 400 பில்லியன் டாலர் (30 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இது நாட்டின் ஆக்கத்தையும், திறனையும் குறிக்கிறது.

ஒரு காலத்தில் 100 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. சில நேரம் 150 பில்லியன், 200 பில்லியன் என மாறியது தற்போது 400 பில்லியன் என்ற அளவுக்கு உயர்ந்தது.

நாட்டின் அனைத்து பகுதியிலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிநாடுகளை சென்றடைந்துள்ளன.

சவுதியில் தமிழக வாழைப்பழங்கள்

அசாமில் இருந்து லெதர் பொருட்கள், ஓஸ்மானாபாத்தில் இருந்து கைவினை பொருட்கள், பிஜாபூரில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள், சந்தவுலியில் இருந்து கருப்பு அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், வாழைப் பழங்கள் சவுதியில் கிடைக்கிறது. ஆந்திராவில் இருந்து மாம்பழங்கள் தென்கொரியாவுக்கும், திரிபுராவில் உற்பத்தியாகும் பலாப்பழங்கள் லண்டனுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வெளிநாடுகளில் இந்திய பொருட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய பொருட்களின் தயாரிப்புகள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முன்பை விட தற்போது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிநாடுகளில் அதிகளவில் காண முடிகிறது. ஒவ்வொரு இந்தியனும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு கொடுக்கும்போது, உள்ளூர் பொருட்கள் உலகை எட்டுவதற்கு வெகு நேரமாகாது.

ஒரு காலத்தில் பெரிய நிறுவனங்களே அரசுக்கு பொருட்களை விற்று வந்தன. தற்போது, அந்த முறை மாறி வருகிறது. சிறிய கடைக்காரர்கள், தங்களிடம் உள்ள பொருட்களை அரசிடம் விற்க முடியம். இது தான் புதிய இந்தியா. நாடு முழுவதும் உள்ள 1.25 லட்சம் சிறிய தொழில்முனைவோர், தங்களிடம் உள்ள பொருட்களை அரசிடம் விற்றுள்ளனர்.

நமது பாரம்பரியத்தில் ஒவ்வொருவரும் நூறாண்டு வாழ விரும்புகின்றனர். தூய்மையுடன் ஆரோக்கியம் நேரடியாக தொடர்பு பெற்றுள்ளது. 126 வயதில் பத்ம விருது பெற்ற பாபா சிவானந்த்தின் உடல் ஆரோக்கியம் குறித்து அனைவரும் விவாதித்து வருகின்றனர். அவரின் வாழ்க்கை, அனைவருக்கும் முன்மாதிரி, அவர் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். யோகா மீது ஆர்வம் கொண்டுள்ள அவர், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் ஊக்கமளிக்கும் போக்குகளில் ஒன்று, ஆயுஷ் துறையில் பல ஸ்டார்ட் அப்கள் மற்றும் நிறுவனங்களின் எழுச்சி மற்றும் வெற்றியாகும்.

ஏக் பாரத், ஸ்ரேஷ்டா பாரதத்தின் உணர்வின் வெளிப்பாடான குஜராத்தின் கடலோரப் பகுதியில் நடக்கும் கண்காட்சியைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்!

டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புடைய பஞ்ச தீர்த்தங்களுக்குச் சென்றதை நான் பெருமையாக உணர்கிறேன். இந்த எழுச்சியூட்டும் இடங்களைப் பார்வையிடுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

பெண் குழந்தைகளின் கல்வியை மேலும் மேம்படுத்தி, பெண்கள் அதிகாரத்தை வலுப்படுத்துவோம்.

“சில தனிநபர்கள் இயற்கை நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர். நாசிக்கில் கோதாவரி ஆற்றைச் சுற்றி குப்பை கொட்ட வேண்டாம் என சந்திரகிஷோர் மக்களை ஊக்கப்படுத்துகிறார். பூரியில் உள்ள ராகுல் மஹாரானா, மத வழிபாட்டு தலங்களில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்கிறார்” என்றார்.

சென்னை அருண்

சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி, தான் வசிக்கும் பகுதியில், குளங்கள் மற்றும் ஏரியை தூய்மைபடுத்துவதற்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 150க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்களை தூய்மைபடுத்தும் பணியை பொறுப்பாக எடுத்து கொண்டு அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார். இவ்வாறு பிரதமர் பேசினார்.