December 4, 2022

இது இரண்டாவது இந்திய சுதந்திரப்போர்!

விவசாயிகள் போராட்டத்தை வழக்கம்போல இழுத்தடித்து பிசுபிசுக்க வைக்கும் வேலைகளை மத்திய அரசு. ஒரு புறம் செய்கிறது. மறுபுறம் விவசாயிகள் எழுச்சியோடு போராடி வருகின் றனர். டெல்லியின் கடுங்குளிர், வயது மூப்பு காரணமாக இதுவரை 6 விவசாயிகள் மரண மடைந்து உள்ளார்கள்.தன்னுடைய மகள் திருமணத்தில்கூட கலந்து கொள்ளாமல் போராட்டக் களத்தில் நிற்கிறார் பஞ்சாப் விவசாயி சுபாஷ் சீமா.

குர்சிம்ரத் கவுருக்கு 11 வயதாகிறது. ஆறாம் வகுப்பு படிக்கிறாள். தன் பெற்றோரோடு போராட்டக் களத்துக்கு வந்திருக்கிறாள். விவசாயிகள் எப்படி உணவுப் பொருட்களை வண்டியில் ஏற்றி வந்திருக்கிறார்களோ? அப்படி இச்சிறுமி மட்டுமில்லை, பல சிறுவர்கள் புத்தகங்களோடு களத்தில் நிற்கிறார்கள்.

ஏன் இத்தகு வீரியமான போராட்டம்? ஏனென்றால் இது விவசாயிகளின் வாழ்வா? சாவா? போராட்டம். விவசாய மசோதாக்களை ராகுல் காந்தி அம்பானி, அதானி சார்பு சட்டங்கள் என்கிறார். மகாத்மா காந்தி அந்நியப் பொருட்களை பகிஷ்கரிக்கச் சொன்னார்.விவசாயிகளோ அம்பானி, அதானி பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

இது இன்னொரு சுதந்திரப் போராட்டம்!

வெள்ளைக்கார முதலாளிகள் பிறநாடுகளின் வளங்களைக் கவர அவற்றை காலனி நாடு களாக்கினார்கள். அம்பானி, அதானி & கோ, தங்கள் கொள்ளைக்கு வசதியாக இந்திய மாநிலங்களையே காலனிகளாக்கி இருக்கின்றன.

இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வேளாண் விளை பொருட்களை விற்க ஒவ்வொரு விதமான சட்டங்கள் இருக்கின்றன. ‘ஒரே நாடு – மூன்று மசோதாக்கள்’ ஏகபோகமாக இவர்கள் இந்திய விவசாயிகளைக் கொள்ளையடிக்க , மோடி அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கார்ப்ரேட்டுகளுக்கும் விவசாயத்துக்கும் என்ன சம்மந்தம்? ஏன் விவசாயிகள் அம்பானி , அதானி பொருட்களை புறக்கணிக்க வேண்டுகிறார்கள்? என்கிற சந்தேகம் தோன்றலாம்.

சில ஆண்டுகட்கு முன்பே, தகவல் தொடர்பில் ஜியோ தனது சாதனைகளை எட்டிவிட்டது. இந் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பிஸினஸ் சாம்ராஜ்யத்தை வேளாண்மை, கல்வி, ஹெல்த் கேர் திசையில் விரிப்பதற்கான முயற்சிகளில் களம் இறங்கியுள்ளது.

வேளாண்மைக்கு குறைந்த வட்டிக்கு (4%) கடன் வழங்க வேண்டும் என்பது ஆர்பிஐ யின் கொள்கைகளுள் ஒன்று. ஆகவே விவசாயத்திற்கு அது 18% நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த விவசாயக் கடனை ரிலையன்ஸ் ஃப்ரஷ் போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வாங்கி உள்ளன. இந்தவகையில் 2015 ஆம் ஆண்டு 604 பேருக்கு 86 கோடி ரூபாய் வீதம் 52143 கோடி ரூபாய் விவசாயக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்திய அரசின் வேளாண்துறை நடவடிக்கைகள் யாருக்கு சாதகமானது என்பதை புரிந்து கொள்ளலாம்.

அம்பானி போலவே அதானியும் சுரங்கம், தாதுப்பொருட்கள், விமானம், எரிசக்தி துறைகளை அடுத்து, உணவு மற்றும் வேளாண்மைத் தொழிலில் தங்களது எல்லைகளை விரிவு படுத்து கின்றனர். மத்திய அரசு , உணவுப் பொருட்கள், தானியங்களை பதப்படுத்தவும் சேமித்து வைக்கவும் உபோயோகிக்கும் பல கிடங்குகள் அதானியுடவையே.

பெரும்பாலானோர் உபயோகிக்கும் ‘ஃபார்ச்சூன் ஆயில்’ அதானியுடையதுதான்.

இவ்வாறு இவர்களின் தொழில் சாம்ராஜ்யத்தை அடுத்த கட்டமாக உணவுப் பொருட்களிலும், வேளாண் வர்த்தகத்திலும் விஸ்தரிக்க தோதாகவே, மோடி அரசு விவசாய மசோதாக்களைக் கொண்டுவந்துள்ளது.

இனி அரசாங்க மண்டி என்பது பெயரளவிலேயே இருக்கும். வேளாண் உற்பத்திப் பொருட்கள் விவசாயிகள் கையில் இருக்கும்போது அதற்கு மதிப்பு குறைவு. அவை இத்தகைய கார்ப்ரேட் களால் பதுக்கப்படும்போது விலை பல மடங்கு உயரும்.

இம்மசோதாவால் ஒரே சமயத்தில் விவசாயிகள் நஷ்ட்டம் காரணமாக விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தப் படுவார்கள். விலைவாசி உயர்ந்து நாட்டில் பஞ்சமும் பட்டினியும் தலை விரித்து ஆடும். இப்போது நடைபெறும் போராட்டம் விவசாயிகளுடையது மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்க்கைக்கான போராட்டம்.

வெள்ளையனை எதிர்த்து நடந்தது முதல் இந்திய சுதந்திரப்போர். உள்நாட்டு கொள்ளையர்களை எதிர்த்து நடக்கிறதே, இது இரண்டாவது இந்திய சுதந்திரப்போர். விவசாயிகளோடு இணைந்து தேசம் மீட்போம்!

கவிஞர் கரிகாலன்