August 14, 2022

கொரோனா பல தொழிலதிபர்களின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளி விட்டது!

கடந்த 15 வருஷத்துலே சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளின் எல்லா இடங்களிலும் கிளை களைப் பரப்பி 1800 ஊழியர்களோடு இயங்கும் அந்த நிறுவனத்தின் அதிபரும் என் நெருங்கிய நண்பரிடமிருந்து இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அவர் பேச பேச அதைக் கேட்டு நான் வாயடைச்சுப்போனேன். அவர்களது முன்னேற்றத்தை ஆரம்ப நாட்களில் இருந்து நன்கு அறிந்தவன். நண்பரின் தந்தையார் ராஜஸ்தானிலிருந்து பிழைப்பு தேடி சென்னை வந்து ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்து அதில் சமோசா, ஜிலேபி, பக்கோடா, மிக்ஸர் போன்றவற்றை அவரே தயாரித்து விற்பனை செய்தார். அவருக்கு சென்னை வந்தபிறகு பிறந்த நான்கு ஆண்குழந்தைகளையும் இங்கேயே படிக்கவைத்தார். ஒரே கடையில் வரும் வருமானத்தை வைத்து நன்றாகவே வாழ்ந்தது அந்தக்குடும்பம்.

பிள்ளைகள் வளர வளர அவர்களுக்கு இந்த பிசினசில் ஆசையும் வளர்ந்தது. பிள்ளைகள் பிசினசை வேறு கோணத்தில் சிந்தித்து பார்த்து ஏராளமான பொருட்செலவில் இன்ட்டீரியர் எல்லாம் செஞ்சு ஒரு கடையை முக்கியமான மார்க்கெட் பகுதியில் ஆரம்பிச்சதுல பிசினஸ் பிச்சுகிட்டு போக ஒரு கடை என்பது இரண்டு நான்கு எட்டு என வருடம் தோறும் வளர்ந்து இன்றைக்கு சென்னையில் மட்டுமில்லாம புறநகர்ப்பகுதிகளிலும் சேர்த்து அந்த நிறுவனத்திற்கு 42 கிளைகள் இருக்கு. கோடிக்கணக்கில் வர்த்தகம்.

இந்த கிளைகளுக்கெல்லாம் ஒரே இடத்தில் அனைத்துவகையான இனிப்புகள் மற்றும் கார வகைகள் தயாரிப்பதற்கு சென்னையின் புறநகர்ப்பகுதியில் மிகப்பெரிய பரப்பளவில் ஒரு தொழிற்சாலையும் அமைக்கப்பட்டது. அதில்ஏகப்பட்ட முதலீடு. இனிப்பு காரம் தயாரிக்க ஏராளமான பணியாளர்கள். ஒவ்வொரு பிரான்சுக்கும் டெலிவரி செய்வதற்கு வாகனங்கள், விஐபிக்கள் இருக்கும் பகுதியில் இடம் வாங்கி 8 பெட்ரூம் கொண்ட பிரம்மாண்டமான மாளிகை ஒன்றை கட்டி, கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்த அந்த குடும்பத்தில் வியாபாரத்தை அண்ணன் தம்பிகள் அனைவரும் டிபார்ட்மென்ட் வாரியாக பிரிச்சு பார்த்துக்கிட்டாங்க.

வருஷத்துல இரண்டு பிராஞ்ச் திறப்பாங்க. மற்ற பிரான்ச்சுல கிடைக்கற வருமானத்தை எல்லாம் இந்த புதிய பிரான்ச்சுகள் திறக்கறதுக்கான முதலீடா அந்த வருமானம் இருக்கும். மற்ற நிறுவனங்களுக்கு இணையாக போட்டி போடவேண்டும் என்ற வெறி. வருமானத்தை வேறு எதிலும் முதலீடும் செய்யாம இருந்துட்டாங்க. எல்லா கடைகளும் வாடகை கட்டிடங்கள்லதான் செயல்படுது.

கொரோனா வந்த பிறகு இவர்களின் அனைத்து பிரான்ச்சுகளும் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் வியாபாரத்தில் மிகப்பெரிய இழப்பு. 1800 தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் மூன்று கோடி சொச்ச ரூபாய். இது போக கட்டிடங்களுக்கான வாடகை பல இலட்சங்கள். ஆக ஒரு மாதத்திற்கு சம்பளம், வாடகை, மின்சாரம் மற்றும் இதர செலவுகளுக்கு குறைந்த பட்சம் 6 கோடி ரூபாய் தேவைப்படுது.

இந்த லாக்டவுன் சமயத்தில் இவ்வளவு பணத்தை எப்படி சமாளிப்பது? வேலைபார்க்கும் ஊழியர்கள் நாங்க எங்க சொந்த ஊருக்கு போகனும் சம்பளம் வேனும்னு கேட்கறாங்க. எல்லாம் வட மாநிலத்தவர்கள். கட்டிட உரிமையாளர்கள் நீங்க வாடகை கொடுத்தா தான் நாங்க வங்கிக்கு இஎம்ஐ கட்டமுடியும், எங்களுக்கு வாழ்வாதாரமே இந்த வாடகை தான் என்கின்றார்கள். ஒவ்வொரு கடைக்கும் இலட்சக்கணக்கில் வாடகை நிலுவை. இதனிடையே இவர்களின் ஒவ்வொரு கடையிலும் இலட்சக்கணக்கில் விற்பனைக்காக வைத்திருந்த இனிப்பு காரவகைகள் எல்லாம் கெட்டுப்போய் அதனை கடையிலிருந்து அப்புறப்படுத்த ஆயிரக்கணக்கில் பணம்கொடுத்து லாரிகளை ஏற்பாடு செஞ்சு வெளியே கொட்டியிருக்காங்க.

லிக்விட் கேஷ் சில இலட்சங்கள் கூட கையிலே இல்லே. எல்லாமே வியாபாரம் செஞ்சுதான் செலவினங்களை மாதம் தோறும் சமாளிச்சுட்டு வந்திருக்காங்க. வங்கிகள்ல ஆல்ரெடி ஓவர் ட்ராஃப்ட். ப்ராப்பர்ட்டிகள் மேல வங்கிக் கடன். இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது, வாடகை மற்றும் ஊழியர்களின் சம்பளம் மின்சார கட்டணம் வங்கிக் கடன்கள் இவற்றிற் கெல்லாம் கையில் பணம் இல்லை. நான் ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே எச்சரித்தேன். டேய் நீங்க மத்தவங்களை பார்த்துட்டு ரொம்ப அகல கால்வைக்கறீங்க, பாத்துக்கோங்கன்னு சொல்லியிருந்தேன். அதை இப்போ சொல்லி புலம்பித் தீர்த்துட்டாரு.

அவர் நிலையைச் சொன்னதோடு இவருக்கு போட்டியாக உள்ள மற்றவர்களோடு தொடர்பு கொண்டு கடந்த சில நாட்களா இவர் பேசறப்போ அவர்களின் கண்ணீர் கதையும் சொன்னாரு. சென்னையில் இந்த ஃபுட் இன்ட்ஸ்ட்ரீஸ்ல ஒரு பத்து நிறுவனங்களுக்குள்ள ரேஸ் போட்டிகள் நடந்துகிட்டுஇருக்கு. நீ எத்தனை பிரான்ச் இந்த வருஷம் திறந்த, அவர் எத்தனை திறந்தாருன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் ரன்னிங் ரேஸ் போல எல்லா இடங்கள்லயும் தங்கள் நிறுவன கடைகளை திறக்க ஆரம்பிச்சாங்க. இவங்களுக்குள்ள கடந்த 15 வருஷமா பலத்த போட்டி இருந்துகிட்டு இருக்கு.

ஒரு ஹோட்டல் விஸ்தாரமா சகல வசதிகளோட திறக்கனும்னா இன்னைக்கு 2 கோடி ரூபாயாச்சும் தேவைப்படுது. அதுவும் அந்த ஹோட்டல் மக்களிடைய பிரபலம்னா இன்னும் கூடுதலா செலவு பண்ணி திறக்கறாங்க. அப்படித்தான் அந்த பிரபல ஹோட்டலும் தமிழ்நாட்ல மட்டும் இல்லே, இதர மாநிலங்கள் வெளிநாடு என ஏகப்பட்ட கிளைகள் கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் திறந்திருக்கு. இந்த ஹோட்டல் நிறுவனம் பால் பாக்டரி வச்சுருக்கு. அதுல பால், தயிர், வெண்ணைய், நெய், கோவா, காஃபி எஸ்டேட் வாங்கி காஃபி பவுடர் தயாரிச்சு அதைத்தான் அவங்களோட எல்லா பிரான்சுலயும் பயன்படுத்துது. இதுபோக நிலங்களை வாங்கி காய்கறிகள் பழங்கள் என பயிர் செய்து அவற்றை ஹோட்டலுக்கு பயன்படுத்து கின்றது. ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீடு. இவர்களும் இதே ஒட்டம் தான். கையில் லிக்விட் கேஷ் இல்லே. மாசத்துக்கு ஆகற செலவு 30 கோடியாம். எந்த நிறுவனத்தை சொல்றேன்னு நிறைய பேருக்கு தெரியும். ,

மைசூர்பாகிற்கு பெயர் பெற்ற நிறுவனத்தின் தற்போதைய நிலையும் இதுதான். சம்பளம் கொடுக்க கட்டிடங்களுக்கு வாடகை தர கையில் பணம் இல்லே. நதியின் பெயரைக்கொண்ட அந்த இனிப்புக்கு பெயர்போன நிறுவனமும் எண்ணற்ற கிளைகளை திறந்து தற்போது ஒண்ணும் பண்ணமுடியாம பொருளாதார சிக்கல்ல மாட்டிகிட்டு முழிக்குது. அண்ணாச்சி ஹோட்டல் நிலைமை இன்னும் மோசமாய் போய்டுச்சாம்.

கீதம் பேர் கொண்ட அந்த ஹோட்டல் நிறுவனமும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் வாடகை, இபிபில் கட்டமுடியாம மாட்டிகிட்டு தவிக்குதாம். சிப்ஸ் பெயரை பின்னாடி வச்சுகிட்டு ஏகப்பட்ட கிளைகளோட வியாபாரம் பண்ற அந்த ஹோட்டல் நிறுவனத்திற்கும் சிக்கல். எல்லார்கிட்டயும் ஃபோன்ல பேசி ஒருத்தரோட கண்ணீர்கதையை இன்னொருத்த ருகிட்ட பகிர்ந்துகிட்டோமே தவிர வேற எப்படி இந்த நிலைமைய சமாளிக்கறதுங்கறது புரிய மாட்டேங்குது. எங்க ஃபுட் இன்ட்டஸ்ட்ரீ இந்த நிலையிலிருந்து மீண்டு இந்த செட்பேக் எல்லாம் சரிசெய்யறதுக்கு குறைந்த பட்சம் ரெண்டு வருஷமாச்சும் ஆகும். அதுவரை எப்படித் தாக்குப்பிடிப்பதுன்னும் தெரியலைன்னார். எத்தனை நிறுவனங்கள் இதுல தாக்குபிடிக்க முடியாம ஓட்டம் பிடிக்குமோன்னு தெரியலே. எத்தனை பேர் மன உளைச்சல் ஏற்பட்டு வேற விபரீத முடிவுகளுக்குப் போயிடப் போறாங்களோன்னும் தெரியலன்னார். இத்தனையும் சொன்னபோது நான் என்ன அவருக்கு ஆறுதல் சொல்றதுன்னு தெரியாம உன்னால சமாளிக்க முடியும்டா முயற்சியை கைவிட்டுடாதேன்னு சொல்லி ஃபோனை வச்சுட்டேன்.

இந்த போட்டியாளர்கள் அனைவருக்கும் ஏன் இப்படி ஒரு மாபெரும் சரிவு. இவர்கள் இத்தனை வருடங்களில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணம் எல்லாம் எங்க போச்சு? இதை கூர்ந்து கவனித்தால் இவர்கள் செய்த மாபெரும் தவறு நமக்கு நல்லாவே புரியும். ஆங்காங்கே புதிய கிளைகளை திறக்கறதுக்கு ஏற்கெனவே உள்ள கிளைகளில் வந்து கொண்டிருந்த வருமானத்தை எடுத்து முதலீடு செஞ்சு செஞ்சு ஊழியர்களின் எண்ணிக்கையை கூட்டி செலவுகளை மாதம்தோறும் அதிகப்படுத்திக்கொண்டே சென்றுவிட்டனர்.

இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் வாடகைக்கட்டிடங்கள்ல தான் இயங்கிட்டு வருது. இலட்சக்கணக்கில் வாடகை கொடுத்தாக வேண்டும். கரன்ட் பில் கட்டியாகனும். எல்லா கிளைகளிலும் வியாபாரம் பிச்சுகிட்டு போகும்னு சொல்ல முடியாது. அந்த செலவுகளை சமாளிக்க வேற கிளைகள்ல வர்ற லாபத்தை அதுக்கு போடனும். எல்லாமே கெளரவ பிரச்சனை. ஒருகிளையை திறந்து சரியாப்போகலேன்னு மூடிட்டா போட்டி நிறுவனங்கள் ஏளனம் செய்யும். அதனாலேயே சில கிளைகள்ல வியாபாரம் இல்லேன்னாலும் தொடர்ந்து நடத்தற சூழல். இவங்களோட வருமானத்தோட இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் புதுசா திறக்கற கிளைகளுக்கு முதலீடா போய்டுச்சு. இருக்கறது போதும், வர்ற வருமானத்துல ப்ராபர்ட்டீஸ் வாங்கிப்போடலாம்னு பெரும்பாலான நிறுவனங்கள் நினைக்கலே. அந்த இன்ட்டஸ்ட்ரீக்கு தேவையானதுக்கு மட்டும் இன்வெஸ்ட் பண்ணாங்களே தவிர வேற எதையும் பண்ணிக்காம போய்ட்டாங்க.

கோடிக்கணக்கான வர்த்தகம் நடக்கறப்போ எதுக்கும் கையில் சேவிங்க்ஸ் இருக்கனும்னு யாரும் பெரிசா நினைக்கலே. இந்த கொரோனா பாதிப்பு அவங்களுக்கு ஒரு பெரிய இழப்பை தந்து இருக்கு. மிகப்பெரிய பாடத்தையும் கத்துக்கொடுத்து இருக்கு. இனி இந்த நிறுவனங்கள் எல்லாம் தலைதூக்கறதுக்கு குறைந்த பட்சம் ரெண்டு வருஷமாச்சும் ஆகும். அதுவரை எத்தனை நிறுவனங்கள் தாக்குப்பிடிக்கும்னு சொல்றதுக்கு இல்லே. புத்திசாலித்தனமா ஒண்ணு ரெண்டு பிரான்ச்சுகளோட இந்த போட்டிக்கே வராத நிறைய நிறுவனங்களுக்கு இந்த கொரோனா பெரிய பாதிப்பை தரலே.

நீயா நானா யாரு முன்னாடிப்போறதுன்னுங்கிற போட்டியிலே இவங்க எல்லாம் சம்பாதிச்ச காசுல தங்களுக்கு தாங்களே சூன்யம் வச்சுகிட்ட கதையாப்போய்டுச்சு. இதே நிலைதான் மற்ற துறைகளில் உள்ள நிறைய நிறுவனங்களுக்கு ஏற்பட்டு இருக்கு. ஆம்னி பேருந்துகள், மொபைல் விற்பனை செய்யும் நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் போன்றவற்றிற்கெல்லாம் கொரோனா நிறையபேருக்கு பல வாழ்க்கைப் பாடங்களை கத்துக்கொடுத்து இருக்கு.

விரலுக்கேத்த வீக்கம்னும், சிறுகச்சேர்த்து பெருக வாழ்ன்னும் பழமொழிகள் இருக்கு.. அதை பின்பற்றியவங்க வாழ்க்கைல ஜெயிச்சாங்க. ஆசையும் போட்டியும்தான் இவ்வளவுக்கும் காரணம். போட்டிக்கு தயாரானவங்க போட்டிகள்ல நம்மோட பலம் என்ன பலவீனம் என்னென்னு புரிஞ்சுக்காம போனதின் விளைவுதான் இது.

கொரோனாவிற்கு பின்னர் எத்தனை நிறுவனங்கள் இப்போது ஏற்பட்டுள்ள பெரிய நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் இழுத்து மூடும் நிலை வருமோ? தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு அந்த மனஉளைச்சலில் எத்தனை பேர் வேற என்ன மாதிரியான முடிவுகளுக்கு தள்ளப் படுவாங்களோ தெரியலே. இதிலிருந்து மீள்பவர்கள் இனியாவது இந்த ஓட்டப்பந்தயத்தையும் நிறுத்திக்கொள்வது நல்லது. கொரோனா பல தொழிலதிபர்களின் பொருளாதாரத்தை அதளபாதாளத்திற்கு இழுத்துச் சென்றுவிட்டது. இந்த பேரிழப்பை சமாளித்து மீள்பவர்கள் சமயோசிதமாக சிந்தித்து‍ வரும் வருமானத்தை எப்படி எங்கே முதலீடு செய்யவேண்டும் என்பதை புரிந்து நடந்துகொள்வது நல்லது.

உதயகுமார்