August 15, 2022

திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்!- கோலாகலம்- வீடியோ

லக பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

திருவாரூரில் தியாகராஜர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். சைவ தலங்களில் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். சைவ மரபில் பெரிய கோவில் என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு சொந்தமான தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர். ஆசியாவிலேயே மிகவும் பழமையான இந்த தேர் கடல் போன்ற மக்கள் வெள்ளத்திற்கு இடையில் ஆடி அசைந்து வருவதால் ஆழித்தேர் என சமயக் குறவர்களால் அழைக்கப்படுகிறது. ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.

இவ்வளவு சிறப்புக்களையும் பெற்ற இந்த திருத்தேர் சிதிலமடைந்து ஓடாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் வழிகாட்டுதல்படி ரூ. 86 லட்சம் செலவில் தேர் புதுப்பிக்கும் பணி துவங்கப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து இன்று காலை ஆழித்தேர் திருத்தேரோட்டம் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

அதனை தொடர்ந்து பச்சைக்கொடி காட்டியவுடன் ‘‘ஆரூரா! தியாகேசா!!’’ என் கோஷம் விண்ணதிர முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.