October 24, 2021

திருப்பரங்குன்றம் தொகுதி ; அறிவாலய அறிவிப்பு..! வேட்பாளர் மேக்கப்பு…?1

தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வழக்கம்போல அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் வேலைகளில் பிசியாகிவிட்டது. திமுக விருப்ப மனு வாங்கி வந்த நிலையில் திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளராக டாக்டர் சரவணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த சரவணன் யார்…. மதுரை நகர வீதிகளில் முஷ்டியை மடக்கி கொண்டு ஆளுயர போஸ்டர்களில் அவ்வப்போது போஸ் கொடுப்பவர்தான் டாக்டர் சரவணன். எம்.பி.பி.எஸ் பட்டம் படித்த டாக்டர் சரவணன் வைகோ மீது கொண்ட பற்று காரணமாக மதிமுகவில் இணைந்தார். மதுரையில் பூமிநாதன் மதிமுகவின் முகமாக பார் க்கப்பட்ட காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். ஒரு கட்டத்தில் அனைவரும் படிப்படியாக மதிமுகவை விட்டு விலகி சென்ற பின்னர் இவர் ஒருவர் தான் மதுரை மதிமுகவின் முகம் என்பதாக மாறிப் போனார். வைகோவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். இதன் காரணமாக, 2014 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் மதிமுக என்ற கட்சி ஒன்று இருப்பதை மதுரை மக்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தி கட்சியை அப்டேட்டாக வைத்து அதற்காக பணத்தை தண்ணீராக வாரி இறைத்தார் சரவணன்.

dmk oct 21

அரசியல் களத்தில் வாரி இறைத்தது எதிர்கால அரசியலுக்கு உதவும் என்று காத்திருந்த சரவணனுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியும் சீட் கிடைக்கும் என்று நம்பியிருந்தார். ஆனால், மக்கள் நலக்கூட்டணி தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் அப்செட் ஆன சரவணன் மதிமுகவிலிருந்து வெளியேறினார். அதோடு, விஜயகாந்துடன் கூட்டணி அமைத்ததால் வெளியேறினேன் என பகீரங்கமாக அறிவித்தார். அதே வேகத்தில் பொன்னாரை சந்தித்து பாஜகவிலும் இணைந்து கொண்டார். அங்கே சேர்ந்த ஒரே மாதத்தில் பாஜக கசந்துவிட அதே நேரத்தில் மதுரை மத்தி மாவட்ட செயலாளர் தளபதி வலை விரிக்க அதில் வசமாக சிக்க… திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்த சூழலில் இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் சரவணன் அறிவிக்கப்பட்டார். சமீபத்தில் கட்சியில் சேர்ந்த டாக்டருக்கு சீட் கிடைத்தது எப்படி என்று யோசிப்பதற்கு முன்பு ஏற்கனவே, கடந்த தேர்தலில் அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வேட்பாளரும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறனின் வாய்ப்பு தட்டிப்போய் உள்ளது.

சரி… திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் என்று அறிவாலயம் அறிவித்த நேரத்தில் டாக்டர் சரவணன் கின்னஸ் சாதனைக்காக 10 மணிநேரத்தில் உருவாகிக் கொண்டிருந்த ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ படத்தில் மேக்கப் போட்டு ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். பொதுவாக அரசியல்வாதிகள் அதிலும் இதுபோல தேர்தல் சீட்டுக்கு காத்திருப்பவர்கள் கட்சி தலைமையே கதி என பழியாக கிடப்பார்கள். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம் தலைமையை சந்தித்து வாழ்த்து பெற்று தொகுதிக்கு போவது வழக்கம்.

ஆனால், இந்த டாக்டர் சரவணன் அதற்கு நேர்மாறாக அறிவிப்பு வந்த காலையில் தான் நடிக்கும் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். 11 மணிக்கு அறிவாலயத்தில் இருந்து அழைப்பு வரவும்… போட்ட ஹீரோ மேக்கப்பை கலைக்காமல் காஸ்டியூம்களை மட்டும் அரசியல்வாதி கெட்டப்புக்கு மாற்றிக் கொண்டு அறிவாலயம் போய் சேர்ந்தார். 12 மணிக்கு வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார். தலைமையோடு மற்ற வேட்பாளர்களோடு நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த கையோடு மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து மிச்சமிருந்த காட்சிகளை நடித்துக் கொடுத்தார்.

பொதுவாக அரசியல்வாதிகள் நடிகர்களை மிஞ்சி நடிப்பில் பல நேரம் அசத்துவார்கள்… ஆனால் இவர் அரிதாரம் பூசிய அரசியல்வாதியாக்கும்!…

கோடங்கி