October 6, 2022

திருச்சிற்றம்பலம் பட விமர்சனம்!

சினிமாவில் பேமிலி படம் என்றால் சில ஃபார்முலா வைத்திருக்கிறார்கள். அம்மா. அப்பா, பங்காளி, பகையாளி, உறவாளி என்று பெருங்கூட்டத்தை இணைத்து ஒரு மெசெஜ் சொல்ல முயன்றிருப்பார்கள்.. அதில் மூன்று சண்டை, முப்பத்தாறு பஞ்ச் டயலாக் எல்லாம் இடம் பெறும்.ஆனால் அவை சகலத்தையும் தள்ளி வைத்து விட்டு பெண்ணே இல்லாமல் வாழும் மூன்று ஆண்கள் வாழும் குடும்பத்துடன் இணையும் ஒற்றை உறவின் பின்னணியில் ஒரு கதையை உருவாக்கி லல்வி மூவி என்ற ஃபீலுடன் வந்திருக்கும் படமே ‘ திருச்சிற்றம்பலம்’ .

ஒட்டு மொத்தக் கதையும் தாத்தா பாரதிராஜா, அப்பா பிரகாஷ்ராஜ், மகன் தனுஷ், அதே அப்பார்ட்மெண்டில் வசிக்கும் பால்ய சிநேகிதி நித்யா மேனன்- இவர்களை சுற்றியே வலம் வருகிறது..அதாவது போலீஸ் ஆபீசரான தன் அப்பா பிரகாஷ் ராஜ் செய்யும் ஒரு சிறு தவறு காரணமாக தனது தாய் மற்றும் தங்கையை தனுஷ் இழந்து விடுகிறார். இதனால் பல ஆண்டுகளாக தனது தந்தையிடம் பேசாமல் இருக்கும் தனுஷ் தாத்தா பாரதிராஜா அரவணைப்பில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். தாயின் இழப்பால் பயந்த சுபாவமாக மாறும் தனுஷ்க்கு சிறு வயது முதல் தோழியாக இருக்கும் நித்யா மேனன் எல்லா நேரங்களில் உறுதுணையாக உள்ளார். உணவு டெலிவரி செய்யும் வேலை செய்யும் தனுஷ் உயர் அந்தஸ்தில் இருக்கும் ராசி கண்ணாவை காதலிக்கிறார். அதற்கு நித்யா மேனன் உதவி செய்கிறார். ஆனால் அவரின் காதல் தோல்வியில் முடிகிறது.அதேபோல் கிராமத்து பெண்ணான பிரியா பவானி சங்கரை திருமணம் செய்ய நினைக்கிறார். அதும் நடக்கவில்லை. இதனால் முழு மூட் அவுட்டாகிப் போன தனுஷுடம் உன் பால்ய தோழி நித்யா மேனன்தான் உனக்கு பொருத்தமான ஜோடி என தாத்தா பாரதிராஜா போட்டுக் கொடுக்க அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ஃபுட் டெலிவரி செய்யும் இளைஞனாக நடித்திருக்கும் தனுஷ், அப்பா பிரகாஷ்ராஜ் மீது காட்டும் கடும்கோபத்திலும், தாத்தா பாரதிராஜா மீது காட்டும் பாசத்திலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். கண் முன்னே நிற்கும் காதலை மறந்து, எங்கேயோ காதலை தேடிச்சென்று சங்கடத்தில் சிக்கித்தவிக்கும் போது தனுஷின் இயல்பான நடிப்பும், ரியாக்‌ஷனும் அவர் மீது பரிதாபப்பட வைக்கிறது. அடிதடி என்றால் பயம் என்று கூறி அமைதியாக போகும் தனுஷ் கேரக்டர் கொஞ்சம் புதுசு என்றாலும், அதற்கான காரணமும், அதற்கு ஏற்ப தனுஷ் வெளிப்படுத்திய நடிப்பும் அடடே சொல்ல வைக்கிறது.

காவல்துறை அதிகாரியாகவும் தனுஷின் தந்தையாகவும் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகன் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் தந்தையாக தன்னுடைய கடமையை அவர் செய்யும் விதம் சிறப்பாக உள்ளது. குறிப்பாக தந்தை மகனுக்கான காட்சிகளை இயக்குனர் மித்ரன் சரியாக காட்சிப்படுத்தியுள்ளார்.

பாரதிராஜா பேசும் வசனங்களும், அவரின் நடிப்பும் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக தனுஷ் எழுதும் கவிதைக்கு அவர் கொடுக்கும் Counter வசனத்திற்கு எழுந்த சிரிப்பலை இன்னமும் கேட்கிறது.இதன் மூலம் நகைச்சுவை நடிகர் இல்லாத குறையை பாரதிராஜா பூர்த்தி செய்து விடுகிறார். கூடவே அந்த காலத்து காதல் முதல் இந்த காலத்து காதல் வரை பாரதிராஜா விளக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. அதேபோல் நித்யா மேனன் போன்ற கேர்ள்ஃபிரண்ட் இருந்தால் நன்றாக இருக்கும் என 90கிட்ஸ் ஃபீல் பண்ண வைத்து விடுகிறார். அதிலும் கிளைமாக்சுக்கு முன்பாக நித்யாமேனன் பொங்கி அழும் காட்சிகள் காதலில் விழுந்த ஒவ்வொருவரையும் கண்ணீரில் மூழ்க வைத்து விடும். ஒரு நேஷனல் அவார் வின்னர் நடிகரையை மிஞ்சிய நித்யாமேனன் ஆக்டிங் நினைத்துப் பார்க்க முடியாத பர்ஃபார்மென்ஸ்..

அனிருத் இசையில் வரும் படங்கள் வெற்றிப்பெற்று விடும் என்பதை மீண்டும் இந்த படத்தின் மூலம் நிரூபித்து விட்டார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பின்னனி இசையும் படத்தில் மூழ்க வைத்து விடுகிறது.

ஆக்ரோஷமும், அடி தடி வெட்டு வெட்டுதான் வாழ்க்கை என்று வாழ்ந்த ஹீரோ தனுஷ் மூலம் காதல் என்பது என்ன மிக நளினமாக காட்சிப்படுத்தியதோடு, இளைஞர் என்றால் யார்? என்பதை பெரியவர்களுக்கும் புரிய வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘திருச்சிற்றம்பலம்’ ஃபேமிலியோடு பார்ப்பதற்கான படமாக மட்டும் இன்றி லவ்வர்ஸின் ஆட்டினாகவும் இருக்கிறது.

மார்க் 3.5/5