அமைச்சர் நிதானமாகப் பதிலளிப்பதைக் குலைக்கிறார்கள்!

அமைச்சர் நிதானமாகப் பதிலளிப்பதைக் குலைக்கிறார்கள்!

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்த முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்குப் பிறகு, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஊடகங்களிடம் பேசுகிறார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தெளிவாக எடுத்துரைத்துவிட்டு கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கேள்வி கேட்டு, அமைச்சர் நிதானமாகப் பதிலளிப்பதைக் குலைக்கிறார்கள். ஒரே கேள்வி மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் கேட்கப்படுகிறது. அதுவும் அமைச்சர் பதிலளிப்பதற்குள் அடுத்த கேள்வியை எழுப்புகிறார்கள்.

பிரச்சினை குறித்த எந்தவித முன் தயாரிப்பும் இன்றி களத்துக்கு வந்துவிடுகிறார்கள், முன்களப் பணியாளர்களாக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் ஊடகக்காரர்கள். இப்போது மட்டுமில்லை, பொதுவாகவே. இரவு ஒரு மணி வரை விழித்திருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் வந்திறங்குவதை பார்க்கப்போகிறேன் என்று சொல்லும் அமைச்சரிடம், பாய்ந்து, பாய்ந்து கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்கள். சிலர் அவர்கள் அலுவலகங்களிலிருந்து “வாட்ஸப்” வாயிலாக அனுப்பப்படும் கேள்விகளைக் கேட்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. நடைமுறைச் சூழலிலின் சாத்தியம் புரியாமல், வித்தியாசமாக கேட்க வேண்டும் என்பதற்காக இந்த ஆங்கில ஊடகக்காரர்கள் எழுப்பும் கேள்விகள், வேறு ரகம்.

தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் அத்துமீறல்களை இதே ஊடகங்கள் அப்படியே வெளிப்படுத்த முடியுமா? முடியாது. வாழ்வாதாரப் பிரச்சினை. எல்லோருக்கும் புரிகிறது.அரசு மற்றும் அரசு நிறுனங்களுக்கு எதிராக மட்டும் எளிதாகக் கேள்விகளை, புகார்களை எழுப்பும் மனநிலை ஊடகங்களில் இறுகிப்போயிருக்கிறது. ஏனெனில், பிரச்சினை வராது. வந்தாலும் “மீடியா” என்ற முத்திரையில் ஒளிந்துகொள்வார்கள். (எல்லோரும் அல்ல. நெறிகளின்படி, மனசாட்சியின்படி முடிந்தவரை செயல்படும் ஊடகத்தினரும் இருக்கிறார்கள் என்பதை ஒப்பக்கொள்ள வேண்டும்.)

உயிரிழந்த பிரபலங்களை, கண்ணாடிப் பேழைக்குள் கேமிராவை விடுவது போல “குளோஸ்-அப்” எடுப்பதிலிருந்து, பாதிக்கப்பட்டவர்கள் நலிந்தோராக இருந்தால் அவர்களின் தனியுணர்வை மதிக்காமல் அத்துமீறி காட்டுவது வரை ஊடகங்களின் மீறல்களை அன்றாடம் கவனிக்கிறோம். கலைஞர், பத்திரிகையாளர்களிடம் இலகுவாகப் பேசுவார் என்பதற்காக அவரது தோளை உரசும் அளவுக்கு நெருங்கியிருந்து குறிப்பெடுத்த காட்சியைக்கூட பார்த்திருக்கிறோம். அதே பத்திரிகையாளர்கள், அரிதாக நடந்த ஜெயலலிதாவின் ஊடக சந்திப்பில் எத்தகைய அங்க மொழியுடன் இருந்தார்கள் என்பதை யாவரும் அறிவோம். ஊடகங்களின் இந்த இருமுனை அணுகுமுறைதான் வெவ்வேறு நிலைகளில் இன்றும் தொடர்கிறது.

ஊடகங்களை விமர்சனப் பார்வையில்கூட பேசுவது கூடாது என்ற மனநிலைக்குப் பழகிவிட்ட சமூகத்தில் வாழ்கிறோம். இப்போதுள்ள சவாலை எதிர்கொள்வதில் எல்லோருக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. கேள்விகளை எழுப்பும் ஊடகங்களுக்கு, சாத்தியமான பதில்களைக் கண்டறிவதிலும் பங்கிருக்கிறது.

இளையபெருமாள் சுகதேவ்

error: Content is protected !!