June 23, 2021

வைகை ஆற்றில் தெர்மாகோல் – பி டபிள்யூ டி இன்ஜினியர் ட்ரான்ஸ்ஃபர்!

வைகை அணையில், தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் ராஜு தெர்மாகோல் அட்டைகளை தண்ணீரில் மிதக்க விடும் திட்டத்தை துவக்கினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசனையின்படி, அமைச்சர் மிதக்க விட்ட தெர்மாகோல் அட்டைகள், உடனே காற்றில் கரை ஒதுங்கின. இதனால் அட்டைகள் மிதக்கவிடப்பட்டதன் நோக்கம் தோல்வியடைந்தது. அமைச்சர் செயல்பாட்டை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ், “பெரியாறு, வைகை அணைகளில் நேற்றைய நிலவரப்படி, 25 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கும். வைகை அணையை மட்டும் எடுத்து கொண்டால், 12 நாட்களுக்கு மட்டுமே மதுரைக்கு தண்ணீர் கிடைக்கும். இதில் தினமும் பெருமளவு தண்ணீர் ஆவியாவது, பொதுப்பணித் துறை ஆய்வில் தெரிய வந்தது. இதை தடுக்க பொதுப்பணித் துறையினர் சோதனை முயற்சியாக, தெர்மாகோல் அட்டையை மிதக்க விட்டனர். தற்போது அணையில், 30 ஏக்கர் பரப்பில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில், 5 சென்ட் பரப்பில் தான், தெர்மாகோல் அட்டைகள் மிதக்க விடப்பட்டன. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவானது. தெர்மாகோல் அட்டை ஒன்றுகூட தண்ணீருக்குள் இல்லை. கரையில் இருந்து, 100 அடி துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டிருந்தன. வைகை அணை உதவி செயற்பொறியாளர் மேற்பார்வையில் பணியாளர்கள், நேற்று அட்டைகளை ஒன்று விடாமல் சாக்கு மூட்டைகளில் சேகரித்தனர்.” என்று அவர் கூறினார்.

mad ther apr 23

முன்னதாக வைகை அணையில் இருந்து தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் மிதக்க விடும் திட்டம் நேற்று முன்தினம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப் பட்டது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெர் மோகோல்களை அணையில் மிதக்க விட்டார். நிகழ்ச்சியில் ஆட்சியர்கள் கொ.வீரராகவராவ் (மதுரை), என்.வெங்கடாச்சலம் (தேனி), மதுரை மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆனால் அணைப்பகுதியில் வீசிய பலத்த காற்றால் மிதக்கவிடப்பட்ட தெர்மாகோல் ஒரு மணி நேரத்தில் கரை ஒதுங்கின. அணைப் பகுதியில் இருந்து அமைச்சர் புறப்படும் முன்பே தெர்மாகோல் திட்டம் தோல்வியடைந்தது உணரப்பட்டது. இதனால், திட்டச் செலவு ரூ.10 லட்சம் வீணானதாகவும், அமைச்சர் செல்லூர் ராஜூவின் தவறான யோசனையால்தான் இந்நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இது பொதுப்பணித் துறை உட்பட அரசுத் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்திட்டம் உருவானதன் பின்னணி குறித்து மதுரை பொதுப்பணித் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, “ வைகை அணையில் 162 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே தற்போது உள்ளது. இதில் இருந்து மதுரைக்கு குடிநீருக்காக தினமும் 3.5 மில்லியன் கனஅடி தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆனால், அணையில் தினமும் தண்ணீர் குறையும் அளவு 6 மில்லியன் கனஅடியாக உள்ளது. இதில், கடும் வெயிலால் 1.28 மில்லியன் கனஅடி அளவுக்கு தண்ணீர் தினசரி ஆவியாவது தெரிந் தது. 3 நாள் ஆவியாகும் தண்ணீர், மதுரையின் ஒரு நாள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாக இருந்ததால் அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என பல வழிகளில் சிந்தித்தோம். இணையதளம் மூலம் சில விஷயங்களைத் தேடினோம். இதில், தெர்மாகோல் , பிளாஸ்டிக் சீட், கருப்பு நிற பந்துகளை தண்ணீ ரில் மிதக்க விடலாம். இதனால் சூரிய ஒளி நேராக தண்ணீர் மீது படாது என்பதால் ஆவியாகிற அளவு 40 சதவீதத்துக்கும் மேல் குறையும் என தெரிந்தது.

செலவு மிகக் குறைவு என்ப தால் தெர்மாகோலை தேர்வு செய்தோம். மீன் வளர்ப்புப் பண்ணைகள், சிறிய ஊரணிகள் போன்ற இடங்களில் தெர்மோகோலை நேரடி யாகவும், பலகைகளில் ஒட்டியும் பயன்படுத்தி ஆவியாவது தடுக்கப் படுவதை கண்டறிந்தோம். இந்த முறையை வைகை அணையிலும் செய்து பார்த்தால் என்ன என மதுரை ஆட்சியர் யோசனை தெரிவித்தார்.

இதனால் சோதனை அடிப்படையில் 200 சதுர மீட்டர் அளவுக்கு மட்டும் தெர்மாகோல் மிதக்க விட ஏற்பாடு செய்தோம். ஒரு தெர்மோகோல் சீட் ரூ.27-க்கு வாங்கினோம். இதை செயல்படுத்த மொத்த செலவு ரூ.6 ஆயிரம் ஆனது. இதை பொதுப்பணித் துறை அலுவலர்களே தங்கள் சொந்த பணத்தில் பகிர்ந்து கொண்டனர்.

ஏற்பாடுகள் தயாரானதும் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் தெரிவித்தோம். நல்ல யோசனை என கருதிய அவர் தொடக்கி வைக்க வருவதாக ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டார். 80 ஏக்கர் பரப்பு வரை தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் அணையின் மையப் பகுதியில் தெர்மாகோல் சீட்களை அமைச்சர், ஆட்சியர்கள் மிதக்க விட்டனர். காற்று பலமாக வீசியதால் ஒரு மணி நேரத்தில் அனைத்து சீட்களும் கரை ஒதுங்கின. இத் திட்டம் செயல்பாட்டுக்கு உகந்த தல்ல என்பதை நேரடியாக அறிந்த தால் கைவிடப்பட்டது. சோதனை முயற்சியே தோல்வியில் முடிந்ததால், இதுகுறித்த விவரங்களை மட்டும் அரசுக்கு அனுப்பியுள்ளோம். ஒரு ரூபாய் கூட அரசுப் பணத்தை செலவழிக்க வில்லை. சோதனை முயற்சிக் கான செலவு ரூ.6 ஆயிரமும் பொதுப் பணித் துறை அலுவலர்களின் சொந்த பணம் என்றார்.

இதனிடையே தெர்மோகோல் மிதக்கவிடும் திட்டத்தை முன்னின்று செயல்படுத்தியவர் மதுரை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன். இவர் நேற்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அருப்புக்கோட்டை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றும் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தெர்மாகோல் சோதனை பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதால்தான் அவர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து முத்துப்பாண்டியன் கூறும்போது, ‘‘நான் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறேன். தற்போதைய மாற்றத்துக்கும், தெர்மாகோல் சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் ஓய்வுபெறும் வரை மதுரையிலேயே பணியாற்றவும் அனுமதித்துள்ளனர்’’ என்றார்.