October 16, 2021

உலகில் 110 கோடி மக்கள் குளிரூட்டல் உபகரணங்களை வாங்க வசதி இல்லை!

அண்மைக் காலமாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் கடும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் நாடுகளில் ஏற்பட்ட பயங்கர வெப்ப அலைகளுக்கு 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதே நிலை நீடித்தால் வரும் 2100-ம் ஆண்டில் இந்தியாவில் உயிர்வாழ்வது கடினம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது பூமியில் நிலவும் வெப்ப நிலையை ஈரப்பதம் சேர்ந்தது மற்றும் சேராதது என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை ஆவியாக்கிய பிறகு கிடைக்கும் குறைந்தபட்ச வெப்பநிலை, ஈரப்பதம் சேர்ந்த வெப்பநிலையாக கூறப்படுகிறது. இந்த வெப்பநிலை 2100-ம் ஆண்டில் இந்தியாவில் 35 டிகிரி செல்சியசாக அதிகரிக்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அந்த காலத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தால் மனித உடல் தகுதி இழந்து நோய்களும், மரணமும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இப்படி புவி வெப்பமயமாதலால் சுற்றுச் சூழலுக்கும் மனித சுகாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், வெப்பத் தணிப்பு (குளிரூட்டல்) சாதனங்களை வாங்க வசதியில்லாமல் கஷ்டப்படும் அதிக மக்கள் தொகை கொண்ட 9 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்று   உள்ளது. அதாவது ஐ.நா. சார்பில்,வெப்பத் தணிப்பு வாய்ப்புகள்: அனைவருக்கும் குளிரூட்டல் வசதி வழங்குதல் என்ற பெயரில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. புவி வெப்ப மயமாதலால் அதிகரிக்கும் பிரச்சினைகளை அளவிடவும் சர்வதேச வெப்பத் தணிப்பு சவாலை எதிர் கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் முதல் முறையாக ஆய்வு நடத்தப்பட்டது.

அதிக வெப்பம் நிலவும் 52 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளில், “புவி வெப்ப மயமாதலால் சுற்றுச் சூழலுக்கும் மனித சுகாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் ஏசி, ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்டவை சொகுசு சாதனங்கள் என்ற நிலையிலிருந்து அத்தியா வசியமானவையாகிவிட்டன.

உலகம் முழுவதும் 110 கோடி மக்கள் இதுபோன்ற குளிரூட்டல் உபகரணங்களை வாங்க வசதி யில்லாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இந்தியா, வங்க தேசம், பிரேசில், பாகிஸ்தான், நைஜீரியா, இந்தோனேசியா, சீனா, மொசாம்பிக் மற்றும் சூடான் ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கிராமப்புறங்களில் வசிக்கும் 47 கோடி ஏழைகள் பாதுகாப்பான உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, வறுமை காரணமாக வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஏ.சி., மற்றும் ரெப்ரிஜிரேட்டர்களை வாங்க வசதி இல்லாமல் பலர் உள்ளனர். இதனால் வெப்பத்தால் ஏற்படும் பல்வேறு நோய்களால் பாதிக் கப்படுகின்றனர். முக்கியமான தடுப்பு மருந்துகளைப் பாதுகாக்க முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். இது ஒருபுறம் இருக்க, உலகில் 100 கோடி மக்கள் இன்னமும் மின்சார வசதியே இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.

எனவே, அரசுகள், தொழிலதிபர் கள், பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து, அனைவருக்கும் வெப்பத் தணிப்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புவி வெப்பமயமாதல் காரணமாக வீட்டு பயன்பாட்டு சாதனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளை விக்காத, மின் சிக்கனத்தை தரக் கூடிய நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இத்தகைய சாதனங்களை தயாரிக்க உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும்”எனத் தெரிவிக்கப்படுள்ளது