October 16, 2021

மறுக்க முடியாத உண்மையை முதலில் கண்டறிந்த நிர்மலாவை மறந்தே விட்டார்கள்!

முப்பது வருடங்களுக்கு முன்னால் கொடிய ஹெச்ஐவி வைரஸ் தன்னுடைய மண்ணை அடைந்ததைக் கண்டுபிடித்தது இந்தியா.சென்னையைச் சேர்ந்த ஆறு பாலியல் தொழிலாளிகளின் ரத்த மாதிரிகளில் ஹெச்ஐவி வைரஸ் இருப்பது அறியப்பட்டது. பல சிரமங்களுக்கிடையில் கடுமையாக உழைத்து இதை நிகழ்த்திய ஒரு இளம் விஞ்ஞானியின் சாதனை நாளடைவில் மறக்கப்பட்டுவிட்டது.

Nirmala oct 12

எய்ட்ஸ் சோதனைகளை நடத்தவேண்டும் என்று முதலில் அவரிடம் கூறப்பட்ட போது பெரிதும் தயங்கினார் நிர்மலா செல்லப்பன்.அது 1985ம் ஆண்டின் இறுதிப் பகுதி. சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த 32 வயது மைக்ரோபயாலஜி மாணவியாக அவரது ஆய்வுக்காக ஒரு தலைப்பை அவர் தேடிக் கொண்டிருந்தார்.அவரது பேராசிரியர் சுனிதி சாலமன் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் இருக்கிறதா என்று சோதிக்கும் யோசனையை அவரிடம் கூறினார். எய்ட்ஸ் என்ற நோயின் பரவலைக் கண்காணிக்கும் பணியை அமெரிக்கா 1982ல் தொடங்கிவிட்டது. இந்தியாவும் அசட்டையாக இல்லாமல் இந்த விஷயத்தில் விழிப்பாக இருக்கவேண்டும் என்று அவர் கருதினார்.

ஆனால் அந்த நேரத்தில் இந்தியாவில் எய்ட்ஸ் என்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத விஷயம் என்கிறார் நிர்மலா. எய்ட்ஸ் என்பது ஒழுங்கீனமாக மேற்கு நாகரிகத்தின் வியாதி என்று பத்திரிகைகள் எழுதி வந்த காலம் அது. அங்கேதான் கட்டுப்பாடற்ற பாலுறவு, தன்பாலின உறவு ஆகியவை இருப்பதாக இந்தியர்கள் நம்பினார்கள். இந்தியர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் கடவுள் பக்தியோடு வாழும் உன்னதமான சமூகம் என்பதால் எய்ட்ஸ் என்ற நோய் இங்கே பரவ வாய்ப்பில்லை என்று நம்பப்பட்ட காலம் அது. எய்ட்ஸ் பற்றி எழுதிய சில செய்தித்தாள்கள் கூட அந்த வைரஸ் இந்தியாவை அடைவதற்கு முன்பாக அமெரிக்காவில் அதற்கு மருந்து கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நையாண்டி செய்திருந்தார்கள்.

பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட மும்பையில் இருந்து சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரத்த மாதிரிகள் புனேவில் எற்கெனவே சோதிக்கப்பட்டு ஒருவருக்குக் கூட எய்ட்ஸ் இல்லை என்று நிரூபிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மரபுகளைப் பின்பற்றும் சமூகங்கள் வாழும் பகுதிகள். எனவே நிர்மலா தன்னுடைய ஆய்வை ஒரு தயக்கத்துடனே அணுகி இருக்கிறார். “நான் டாக்டர் சாலமனிடம் எப்படியும் முடிவுகள் எதிர்மறையாகவே இருக்கும் என்று கூறினேன்” என்கிறார்.

ஆனால் சாலமன் அவரை சமாதானம் செய்து இந்த ஆய்வை செய்து பார்க்கும்படி கூறினார். அதன்படி நிர்மலா 200 ரத்த மாதிரிகளை நோய் தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ள பாலியல் தொழிலாளிகள், தன்பாலின உறவாளர்கள் மற்றும் ஆப்பிரிக்க மாணவர்கள் ஆகியோரிடமிருந்து சேகரிக்க வேண்டும். ஆனால் இது சுலபமான காரியம் அல்ல. இதற்கு முன் நிர்மலா லெப்டோஸ்பைரோஸிஸ் என்ற பாக்டீரியாவின் மூலம் பரவும் நோய் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தார். நாய்களிடம் இருந்தும் எலிகளிடம் இருந்தும் மனிதர்களுக்குப் பரவும் நோய் அது. அவருக்கு ஹெச்ஐவி பற்றியோ எய்ட்ஸ் பற்றியோ எதுவும் தெரியாது.

அது மட்டுமல்ல, இந்த மாதிரிகளை எங்கு சேகரிக்கவேண்டும் என்பது பெரிய சவாலாக இருந்தது. மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற நகரங்களில் பாலியல் தொழில் நடக்கும் சிவப்பு விளக்குப் பகுதிகள் தனியாக இருந்தன. சென்னையில் அப்படி எந்த முகவரியும் இல்லை. எனவே அவர் சென்னை அரசு மருத்துவமனையில் பாலியல் நோய்களுக்காக சிகிச்சை எடுக்க வரும் பெண்களை சந்திக்கத் தொடங்கினார்.

“அங்கே நான் சில பாலியல் தொழிலாளிகளை அறிமுகம் செய்து கொண்டேன். அவர்கள் எனக்கு வேறு சிலரை அறிமுகம் செய்தார்கள். அவர்களது படிவத்தைப் பார்த்தபோது “வி ஹோம்” என்று எழுதி இருந்தது. அது பற்றி விசாரித்தபோது அது ‘விஜிலன்ஸ் ஹோம்’ என்று தெரியவந்தது. பாலியல் தொழில் செய்பவர்களைக் கைது செய்து அடைக்கும் இடம் அது.”

பாலியல் தொழிலுக்கு அழைத்தல் என்பது இந்தியாவில் இப்போதும் சட்ட விரோதம். அதற்காக கைது செய்யப்படும் பெண்கள் ஜாமீன் பணம் கொடுக்க வழி இல்லாமல் சிறையில் அடைக்கப்படுவது வழக்கமான விஷயம். எனவே வேலைக்குப் போகும் முன்பாக ஒவ்வொரு நாள் காலையும் நிர்மலா அங்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். நிர்மலா ஒரு சிறிய கிராமத்தில் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு சிறு குழந்தைகளின் தாய். “நான் தமிழில் மட்டுமே பேசக்கூடிய கூச்ச சுபாவமுள்ள பெண், ஒரு அமைதியான வாழ்க்கையையே நான் என்றும் விரும்பினேன்” என்கிறார்.

ஆனால் அவருக்கு தைரியம் சொல்லி அவருக்கு ஒவ்வொரு படியிலும் ஊக்கம் அளித்தவர் அவரது கணவர் வீரப்பன் ராமமூர்த்தி. இந்த ஆய்வுக்கென்று செலவளிக்க அவர்களிடம் பணம் இல்லை. எனவே தனது ஸ்கூட்டரில் மனைவியைக் காவல் நிலையத்தில் கொண்டு விட்டு மீண்டும் அழைத்துப் போகும் வேலையை ராமமூர்த்தி செய்தார். இதன்மூலம் பஸ் கட்டணத்தையாவது மிச்சம் பிடிக்கலாம் என்று கருதினர் அந்தத் தம்பதியினர்.

இப்படியாக மூன்று மாதங்களில் 80 ரத்த மாதிரிகளை சேகரித்தார் நிர்மலா. அவரிடம் கையுறைகளோ எந்தப் பாதுகாப்புக் கருவிகளோ இல்லை. பாலியல் தொழிலாளர்கள் தங்கள் ரத்தம் எதற்காக சோதிக்கப்படுகிறது என்பதை அறிந்திருக்கவில்லை.

“அது எய்ட்ஸ் சோதனை என்று நான் சொல்லவில்லை” என்கிறார். “அவர்கள் படிப்பறிவில்லாதவர்கள், அப்படியே சொன்னாலும் அந்த நாட்களில் அவர்களுக்கு எய்ட்ஸ் என்றால் என்னவென்று புரிந்திருக்காது. பாலியல் வியாதிகளுக்காக தாங்கள் சோதிக்கப்படுவதாக அவர்கள் நினைத்தார்கள்.”

சாலமனின் கணவர் இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர். அவரிடம் இருந்து சில சோதனைக் கருவிகளை இரவல் வாங்கி சாலமனும் நிர்மலாவும் ரத்த மாதிரிகளில் இருந்து சீரத்தைப் பிரித்து எடுக்கும் வேலையைச் செய்து முடித்தார்கள். எய்ட்ஸ் பரிசோதனையில் இது ஒரு முக்கியமான கட்டம். இவற்றைச் சேமித்து வைக்க சரியான வசதிகள் இல்லாமல் தனது வீட்டின் குளிர்பதனப்பெட்டியில் வைத்துக் காத்திருக்கிறார் நிர்மலா.

சென்னையில் எலிசா சோதனை செய்ய அப்போது வசதிகள் இல்லாத காரணத்தால் டாக்டர் சாலமன் மாதிரிகளை வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் மிஷன் (சிஎம்சி)யில் சோதிக்க எற்பாடு செய்தார். இது சென்னையில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது. “1986 பிப்ரவரி மாதத்தின் ஒரு நாளில் நானும் எனது கணவரும் ரத்த மாதிரிகளை ஒரு ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்துக் கொண்டு காட்பாடிக்கு ரயில் ஏறினோம். அங்கிருந்து ஒரு ஆட்டோ ரிக்‌ஷா மூலம் சிஎம்சியை அடைந்தோம். அங்கே வைராலஜி துறையின் இயக்குனர் ஜேக்கப் டி ஜான் இரண்டு மருத்துவர்களை நிர்மலாவுக்கு உதவ நியமித்திருந்தார். காலை 8:30 மணிக்கு சோதனையைத் தொடங்கினோம். மதியவேளையில் மின்வெட்டு ஏற்பட்டதால் டீ சாப்பிடச் சென்றோம். நானும் டாக்டர் ஜார்ஜ் பாபுவும் லேபுக்கு முதலில் திரும்பினோம். அவர்  மூடியைத் திறந்து பார்த்துவிட்டு உடனே வேகமாக மூடிவிட்டார். ‘டோண்ட் ப்ளே’ என்று கூவினார். ஆனால் அதற்குள் நானும் பார்த்துவிட்டேன். ஆறு மாதிரிகள் மஞ்சள் நிறத்துக்கு மாறி இருந்தன. நான் உறைந்துவிட்டேன். இதுபோல் நான் எதிர்பார்த்திருக்கவில்லை.”

சிறிது நேரம் கழித்து சிமியோஸ் வந்தார். முடிவுகளை சோதித்த அவர் “சில மாதிரிகளில் பாசிடிவ் முடிவு வந்துள்ளது” என்று சொல்லிவிட்டு அவசரமாக இயக்குனர் ஜானை அழைக்கச் சென்றார். செய்தி கேட்ட அவர் அறைக்குள் ஓடி வந்தார்.ஆனால் மறுப்பதற்கு அங்கே எதுவும் இல்லை. முடிவுகள் எங்கள் முகத்தில் அறைவது போல் அங்கே தெளிவாக இருந்தன. “இந்த மாதிரிகளை எங்கே சேகரித்தீர்கள்” என்று விசாரித்தார் ஜான். சென்னைக்குத் திரும்பும் முன்னாக நிர்மலாவும் அவரது கணவரும் இந்த முடிவுகளை ரகசியமாகப் பராமரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.“இது மிகவும் சென்சிடிவான விஷயம் என்று சொன்னார்கள். யாரிடமும் சொல்லவேண்டாம் என்று எங்களிடம் கூறப்பட்டது” என்கிறார் ராமமூர்த்தி. சென்னைக்குத் திரும்பிய பிறகு சாலமனின் அலுவலகம் சென்று அவரிடம் இந்த செய்தியைக் கூறினார் நிர்மலா.

மீண்டும் விஜிலன்ஸ் ஹோம் சென்றார் நிர்மலா. ஆனால் இந்தமுறை சாலமன், பாபு மற்றும் சிமியோஸ் உடன் இருந்தார்கள். அந்த ஆறு பெண்களிடம் மீண்டும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. சிமியோஸ் அந்த மாதிரிகளுடன் அமெரிக்கா பறந்தார். அங்கே செய்யப்பட்ட வெஸ்டர்ன் ப்லாட் டெஸ்ட் கொடூரமான ஹெச்ஐவி வைரஸ் இந்தியாவில் நுழைந்துவிட்டதை உறுதி செய்தது. இந்த சோகமான செய்தி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் தெரிவிக்கப்பட்டது. பிறகு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியிடமும் தமிழகத்தின் சுகாதார அமைச்சர் ஹெச்வி ஹண்டேவிடமும் தெரிவிக்கப்பட்டது. ஹண்டே இந்தக் கெட்ட செய்தியை சட்டசபையில் மே மாதம் அறிவித்தபோது நிர்மலாவும் சாலமனும் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தார்கள்.

இந்த செய்தியை முதலில் கேட்டதும் மக்கள் நம்ப மறுத்தார்கள். சோதனையில் தவறு இருக்கலாம், மருத்துவர்கள் தவறிழைத்திருக்கலாம் என்று பலர் விவாதித்தார்கள். சமீபத்தில் காலமான சாலமன், வெளிமாநிலமான மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதால் இந்த விஷயத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தார்.

“தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர், ஒரு வட இந்தியப் பெண் நம்மை அசுத்தமானவர்கள் என்று சொல்கிறார் என்று குற்றம் சாட்டினர். ஆனால் அனைவருமே அதிர்ச்சியில் இருந்தார்கள். என் அம்மா உட்பட.” என்கிறார் அவரது மகன் சுனில் சாலமன். அதிகாரிகளும் அரசும் அதன் பிறகு அவசர அவசரமாக திட்டங்களை வகுக்கத் தொடங்கினார்கள்.
“இது வெறும் ஆரம்பம்தான் என்றார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் டைரக்டர். நாம் அதிவிரைவில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று என்னிடம் கூறினார்” என்கிறார் நிர்மலா.

அதன் பிறகு அரசு மிகப்பெரிய அளவில் ஹெச்ஐவி சோதனை மற்றும் தடுப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இன்று ஹெச்ஐவி-எய்ட்ஸ் என்பது இந்தியாவில் ஒரு பெரிய தொற்று நோயாக வளர்ந்து நாட்டின் எல்லா மூலைகளிலும் பரவி இருக்கிறது. சாலமன் மற்றும் நிர்மலாவின் முயற்சி இல்லாவிட்டால் இன்னும் சில வருடங்களுக்கு இந்தியாதான் உலகின் ஒழுக்கமான நாடு என்றும் ஹெச்ஐவி இந்திய எல்லைக்குள் நுழையாது என்றும் நம்பி பல லட்சம் உயிர்களைப் பலி கொடுத்திருப்போம்.

அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு இந்தியாதான் உலகிலேயே ஹெச்ஐவி தொற்று அதிகம் உள்ள நாடாக நம்பப்பட்டது. 52 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதினார்கள். ஆனால் 2006ல் இந்த எண்ணிக்கை பாதியாக மதிப்பிடப்பட்டது. ஆனால் இன்றும் 21 லட்சம் மக்கள் இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இன்று வரை மருந்து இல்லை. சாவுதான் முடிவு.

நிர்மலா மீண்டும் தனது ஆய்வுக்குத் திரும்பினார். அவரது ஆய்வை முடிக்க இன்னும் 100க்கு மேல் மாதிரிகள் தேவைப்பட்டன. அடுத்த சில வாரங்கள் அவர் சிறைச்சாலைகளுக்குச் சென்று பாலியல் தொழிலாளர்களிடமும் தன்பாலின உறவாளர்களிடமும் மாதிரிகளை சேகரித்தார். மார்ச் 1987ல் அவர் “சர்வைலன்ஸ் பார் எய்ட்ஸ் இன் தமிழ் நாடு” என்ற தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். தனது தேர்வுகளை எழுதித் தேர்ந்து சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் ஆப் ப்ரிவெண்டிவ் மெடிசினில் நோய்த் தடுப்புத் திட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 2010ல் ஓய்வு பெற்றார்.
இந்தியாவில் ஹெச்ஐவி-எய்ட்ஸ் இருப்பதை உறுதிப்படுத்திய சாதனையை நிர்மலா நிகழ்த்தி முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரை முற்றிலுமாக மறந்துவிட்டது உலகம்.

அப்போதைய சூழலில் வந்த சில செய்திகளைத் தவிர அவருக்குப் பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைத்திருக்கவில்லை. எப்போதாவது உங்களுக்கு வேண்டிய அங்கீகாரம் தரப்படவில்லை என்று வருத்தப்பட்டதுண்டா என்று கேட்டபோது, “நான் கிராமத்தில் வளர்ந்தவள். அங்கே இதைப் பற்றிப் புரிந்து மகிழ்ச்சி கொள்ளவோ வருத்தப்படவோ யாருமில்லை. எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கும் என்னால் முடிந்ததை இந்த சமுதாயத்துக்கு செய்ய இயன்றதற்கும் நான் மகிழ்ச்சியே அடைகிறேன்.” என்கிறார் நிர்மலா.

 ஆங்கிலத்தில் – கீதா பாண்டே – பிபிசி இணையதளம்

## தமிழில் – ஷான் கருப்பசாமி