September 25, 2021

தமிழகமே ‘தண்ணீர்..தண்ணீர்..’ என அலைகிறது!-ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை!

நம் தமிழ்நாட்டுல் போன 140 வருஷங்களாக இல்லாத கடும் வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாநிலத்தின் பல பகுதியிலும் மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழைகள் பொய்த்துப் போனதால்தான் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டது என்றாலும் கூட, அரசாங்கமும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதுடன் இப்பிரச்னையை பற்றி கண்டு கொள்ளாமல குழப்படி அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டை பொறுத்த வரை நெல்லை மாவட்டத்தில் உருவாகி, அதே மாவட்டத்தில் கடலில் கலக்கும் தாமிரபரணி நதியைத் தவிர, ஜீவநதி என எதுவுமே இல்லை. நம் மாநிலத்தின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வரும் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, சிறுவாணி ஆறு, நம்பியாறு, கிருஷ்ணாநதி உள்ளிட்ட அனைத்து ஆறுகளும், நதிகளும், அண்டை மாநிலங்களான கர்நாடாகா, ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து உற்பத்தியாகித்தான் இங்கு வருகின்றன.

முன்னொரு காலத்தில் மழைப்பொழிவு அதிகம் இருந்து இந்த ஆறுகளும், நதிகளும் எப்போதும் வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும். 1980களின் இறுதி வரை இந்நிலை நீடித்தது. அதன் பிறகு, ஆண்டுக்கு ஆண்டு, பருவ மழையில் மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் கூட தென்மேற்குப் பருவ மழை ஏமாற்றினால், வடகிழக்குப் பருவ மழை கை கொடுக்கும். இரண்டும் கைவிட்டாலும் கூட நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடல் மாதா கைகொடுக்கும். மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பேய் மழையோ, பெருமழையோ புயல் மழையோ பெய்யும். அதன் மூலம் அதிக சேதங்கள் ஏற்பட்டாலும் கூட, ஆறு, குளங்கள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி அடுத்தத்து தண்ணீர் பஞ்சமோ, குடிநீர் தட்டுப்போடோ இன்றி காப்பாற்றப்படுவோம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்து தீவிரமாக அமல்படுத்திய மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் மூலம் ஓரளவு நிலத்தடி நீர் அதிகரித்தது. அதை தொடர்ந்து நீர் நிலைகளை சீரமைத்து, பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தால் கடந்த இருபது ஆண்டுகளில் தமிழகம் தண்ணீர் பிரதேசமாக காட்சியளித்திருக்கும். ஆனால், அதை அவரும் செய்யவில்லை. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் கண்டு கொள்ள வில்லை. விளைவு, இன்று தமிழகமே தண்ணீர்…. தண்ணீர்… என அலைந்து கொண்டிருக்கிறது.

மேலும் தமிழகத்தில் 58.89 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலப்பரப்பு உள்ளது. இதில், மழை, நிலத்தடி நீர், கிணற்று நீர், ஆற்று நீர் பாசனத்திற்கு ஏற்ப விவசாய பயிர் சாகுபடி நடக்கிறது. நீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியால் விவசாய பயிர் சாகுபடியில் மாற்றம் காணப்படுகிறது.பொதுப்பணித்துறை சார்பில் மாநில அளவில் 25,534 குளம், 17,112 சிறு குட்டை, தடுப்பணை பராமரிக்கப் படுகிறது. ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறைகளின் கட்டுப்பாட்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு குளம், கசிவு நீர் குட்டை உள்ளது. 60 சதவீத விவசாய நிலங்கள் குளம், குட்டை, ஆற்று நீர் பாசனத்தை நம்பியே இருக்கிறது. இதர விவசாய நிலங்களில் ஆழ்குழாய், கிணற்று நீர் பாசனம் மற்றும் மழை நீர் மூலமாக பயிர் சாகுபடி நடக்கிறது. கடந்த சில ஆண்டாக விவசாய பயிர் சாகுபடியில் சொட்டு நீர் பாசன திட்டம் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. ஆனால், மாநில அளவில் 12.54 சதவீதம் விவசாயிகள் மட்டுமே சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு மாறியுள்ளனர். குறு விவசாயிகளுக்கு, குறிப்பாக 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு மானிய ஒதுக்கீடு இல்லாததால் சொட்டு நீர் பாசன திட்டம் எட்டாக்கனியாக இருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆண்டுக்கு ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு மட்டும் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் கிடைக்கிறது. மழை நீர் சேகரிப்பு, குளம், குட்டை சீரமைப்பு பணி நடக்காத காரணத்தாலும், நிலத்தடி நீர் இல்லாத காரணத்தாலும், மாநில அளவில் கடந்த 3 ஆண்டுகளில், 1.7 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் தரிசாக மாறி விட்டது. மாநிலம் முழுவதிலும் 15,89,216 கிணறு இருந்தது. இதில் கடந்த 3 ஆண்டில் 1,16,479 கிணறு நீரில்லாமல் மண் மூடி அழிக்கப்பட்டு விட்டது. அரசுக்கு சொந்தமான இடங்களில் இருந்த 1,60,607 ஆழ்குழாய் கிணறுகளில் பெரும்பாலானவை நீரின்றி முடங்கி கிடக்கிறது. மாநில அளவில் குளம், கசிவு நீர் குட்டை, நீர் வாய்க்கால் போன்றவற்றை ஆக்கிரமித்து 1.67 லட்சம் வீடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குளம், குட்டைகள், நீர் தேக்க தகுதியை இழந்து, சமவெளியாக, மைதானமாக மாறி வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும், விவசாயமும் குறைந்து வருவதால் காய்கறி விலை உயர்ந்து வருகிறது.

சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகளும், காய்கறி வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.நடப்பு தென்மேற்கு பருவ மழை சீசனில் இதுவரை 28% குறைவாக மழை பெய்துள்ளது. குடிமராமத்து திட்டம், வண்டல் மண் அள்ளி பணம் குவிக்கும் திட்டமாக மாறிவிட்டது. ஷட்டர், வாய்க்கால் பராமரிப்பில்லாததால் நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து முற்றிலும் முடங்கிவிட்டது. 17,000 பொதுப்பணித்துறை குளம், 10,000 குட்டை, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறையின் கசிவு நீர் குட்டை,சிறு தடுப்பணை என எல்லாம் நீரின்றி காய்ந்து கிடக்கிறது. ‘குப்பை தொட்டி’ கிணறுகள்: பொதுஇடங்களில் உள்ள பயனற்ற திறந்தவெளி கிணறுகளில் மக்கள் தவறிவிழும் அபாயம் இருப்பதால், கிணறுகளை மூடி வருகின்றனர். பயன்பாடில்லாத கிணறுகள் குப்பை தொட்டிகளாக மாறி வருகிறது. கிணறுகள் அழிக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் சரிகிறது என்கிறார்கள் பொதுப்பணித்துறையினர்.

இதனிடையே  கடந்த 3 ஆண்டில் மாநில அளவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய கட்டுமானம் உருவாக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சிகளின் அனுமதி பெற, ‘டம்மி மழை நீர் தொட்டி’ உருவாக்கி அனுமதி பெற்று வருகிறார்கள். அரசு துறை கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டப்படவில்லை. மழையால் நகர், புறநகர், கிராமங்கள் வெள்ளக் காடாக மாறுகிறது. ஆனாலும், மழைநீர் சேகரிக்க, நீர்வழிப்பாதை அடைப்பை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் இல்லை என்பதுதான் சோகம்!.