February 6, 2023

‘தி வாரியர்’? திரைவிமர்சனம்!

மிழ் சினிமாவில் தன்னை மருபடியும் நிரூபிக்க வேண்டிய ஒரு டைரக்டர் லிங்குசாமி. அவர் தெலுங்கில் சூப்பர் ஹீரோ லெவலில் வளர்ந்து வரும் ஒரு இளம் நாயகனை வேறு கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்துகிறார். இதற்க்காக கொஞ்சமும் மெனக்கெடாமல் இது வரை தான் எடுத்த படங்களில் இருந்தே பல சீன்களை எடுத்து கோர்வையாக்கி அதை கொடுத்து ஏமாற்றி விட்டார்.

அதாவது மதுரையில் மக்களை பயமுறுத்தி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரு தாதா கும்பலை மருத்துவரான ராம் பொத்தினேனி எதிர்க்க வேண்டிய நிலை உருவாகும். இதனால் ராம் பொத்தினேனியை தாதாவான ஆதி கடுமையாக தாக்கி அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுவார். பின்னர் ஊரை விட்டு தப்பி செல்லும் மருத்துவர் ராம் பொத்தினேனி 2 ஆண்டுகள் கழித்து காவல்துறை அதிகாரியாக அதே ஊருக்கு வருவார். தாதா ஆதியை காவல்துறை அதிகாரி ராம் பொத்தினேனி என்ன செய்தார் என்பது தான் தி வாரியர் திரைப்படத்தின் கதை.

ராம் போத்னேனி இடைவேளை வரை டாக்டராக இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் ஹீரோவாகி போலீஸ் தோற்றத்துக்கு மாறி ரவுடி கூட்டத்தை துவன்சம் செய்கிறார். இதுதான் ஹீரோயீசம் என்று நம்புகிறார்,.சில இடங்களில் ஆதியின் நடிப்பு ரசிக்க வைத்தாலும் பெரும்பாலும் அந்த கதாப்பத்திரத்திற்கான கெத்து குறைவாக இருப்பதாகவே தோன்றுகிறது.. அவரது கேரக்டர் ஸ்கெட்ச் போதுமான அளவு திருப்திகரமாக இல்லாததால், பல காட்சிகளில் என்ன செய்வது என தெரியாமல் தேமே என்று விழித்துக்கொண்டிருக்கிறார். அவரை ‘கெத்தான வில்லனாக’ படைத்திருந்தால் படம் வேற லெவலுக்குப் போயிருக்கும். நாயகனின் அம்மாவாக வரும் நதியா, மருத்துவமனை டீனாக வரும் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ற இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ‘புல்லட்’ பாடல் ஏற்கெனவே சூப்பர் ஹிட். அதைத் தவிர மற்ற பாடல்கள் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. பின்னணி இசை சுமார் ரகம். சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளையும், ஆக்சன் காட்சிகளையும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது.

வழக்கமான ரவுடி, போலீஸ் கதையை சற்று மாற்றியமைத்து எடுத்துள்ளார் லிங்குசாமி. ரவுடி, தாதா, வில்லன் என்று சொன்னதும் மதுரையில் மட்டும் தான் அவர்கள் இருக்க வேண்டும் என்கிற தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றாமல் அப்படியே லிங்குசாமியும் இந்த படத்தில் கடைபிடித்துள்ளார். நானும் மதுர காரன் தான் என்கிற வசனம் மட்டும் இந்த படத்தில் மிஸ்ஸிங்.நிறைய லாஜிக் மீறல்கள். இப்போதெல்லாம் இயக்குனர்களைவிட ரசிகர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்; லாஜிக் பார்க்கிறார்கள்; அவர்களை முன்பு போல் சுலபமாக ஏமாற்ற முடியாது என்ற விவரம் பழம்பெரும் இயக்குனரான லிங்குசாமிக்குத் தெரியாமல்போனது வருத்தத்துக்கு உரியது. அப்டேட் ஆகுங்க லிங்குசாமி…!

மொத்தத்தில் ’தி வாரியர்’ – தமிழ் ரசிகர்களின் ஆர்வத்தை அறியாதார் & மதியாதார்

மார்க் 2.25/5