September 24, 2021

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே என்ற குரல் ஒலிக்கும்! – வைகோ நம்பிக்கை!

சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பங்கேற்று வைகோ பேசியதாவது: “அண்ணன் கலைஞர் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிற வேளையில் நான் உறையாற்றி இருக்கிறேன். தற்போதும் கலைஞர் மேடையில் அமர்ந்திருப்பதாக மானசீகமாகக் கருதிக்கொண்டு பேசுகிறேன். கோபாலபுரத்திலுள்ள அந்த குரல் ஒருநாள் மேடையில் ஒலிக்கும். என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே என்ற குரல் ஒலிக்கும். அந்த நம்பிக்கையில் என் உரை காற்றைக் கடந்து அவரின் செவிகளிலே விழுந்து இதயத்தை ஊடுருவும் என்ற நம்பிக்கையோடு பேசுகிறேன்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் முரசொலி விழா நடைபெறுகிறது. 1954 ஜூலை 15 மும்முனை போராட்டத்தை நினைவூட்டும் நாள். கலைஞர் எழுதிய கட்டுரைக்கு சேரன் செங்குட்டுவன் தீட்டும் சிலப்பதிகாரம் என்று அண்ணா தலைப்பிடுகிறார். அப்படி அண்ணாவின் எல்லையற்ற அன்பைப் பெற்றிருந்தவர் கலைஞர். முரசொலியை கலைஞர் நாளேடாக்குகிற நாள் செப்டம்பர் 17, தந்தை பெரியார் பிறந்த நாள். இப்படி வரலாற்றுச் சிறப்புகள் கொண்டது முரசொலி.

நெருக்கடி நிலை பிரகடன சமயத்தில் திமுக செயற்குழுவில் கலைஞர் நிறைவேற்றியது போல எந்த தீர்மானமும் எந்த அரசியல் கட்சியும் நிறைவேற்றியதில்லை. நம்பூதிரி பட் ‘இந்தியா ஓர் அடிமை நாடு, இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறதென்று இந்த தீர்மானத்தை படித்துவிட்டு’ சொன்னார்.

தம்பி வா தலைமை ஏற்க வா என்று அண்ணா எப்படி நாவலரை அழைத்தாரோ அதேபோல கோவையில் நடைபெற்ற மாநாட்டில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்கள் பேசும்போது, ‘அண்ணாவின் தூங்காத இதயமே வா’ என்று அழைத்தார். அதுதான் மாநாட்டின் உச்சக்கட்ட உரை. நெருக்கடி நிலையில் நாங்கள் சிறையில் இருந்தபோது எங்களுக்கு முரசொலி பத்திரிகை ஆறு நாள்கள் கழித்துதான் வரும். எமர்ஜென்சியின்போது அண்ணாவை பற்றி ‘என் அன்னையை விட அண்ணா அவர்கள் என்னிடம் அன்பை பொழிந்தார்கள்’ என்று எழுதியதை அனுமதிக்க தணிக்கை அதிகாரிகள் திமிராக மறுத்துவிட்டனர். உடனே அவர்களை எதிர்த்து சென்சார் அலுவலகம் எதிரே போராட்டம் அறிவித்தார்.

வீட்டிலிருந்தபடியே துண்டு பிரசுரங்கள் தயாரிக்கிறார். மறுநாள் அந்த துண்டு பிரசுரங்களை தேனாம்பேட்டையில் விநியோகிக்கிறார். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்குதான் ‘ஜனநாயகம் வாழ்க, சர்வாதிகாரம் வீழ்க’ என்று முழக்கம் எழுப்பினார். மொரார்ஜி தேசாய் உள்பட பலரை கைது செய்ய அஞ்சாத இந்திரா காந்தி அரசு, கலைஞரை கைது செய்ய அஞ்சிய காரணத்தால் காலையில் கைது செய்து மாலையில் விடுதலை செய்தது”

பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக இருந்த போது என் உடல்நலக் குறைவு அறிந்து உடனடியாக வேலூர் சி.எம்.சி மருத்துவ மனையில் ஒன்றரை மாதம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டதோடு, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேனா இல்லையா என்பது மருத்துவர் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது நான் அவருக்கு 10 பக்க கடிதம் எழுதினேன். உடல் நலம் சரியாகி வந்த போது நான் தான் உன்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தேன் என்பது உனக்குத் தெரியுமா? என்று கேட்டார். 10 பக்க கடிதம் எழுதியதைக் கூறினேன். அண்ணனாக இருந்த நான் வைகோவுக்கு தாயும் ஆனேன். அதற்கு காரணமான நோய்க்கு நன்றி என்றார் கருணாநிதி.

நான் பொடா சிறையில் இருந்து வெளியே வந்த போது பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியே வா என்று முரசொலியில் எழுதியவர் கருணாநிதி. ஆக.. முரசொலிக்கு நூற்றாண்டு விழா நடக்கும் போதும் உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்கள் வந்து வாழ்த்துவார்கள். அப்போது கருணாநிதி நூறாண்டுகள் கடந்து பல நூறாண்டுகள் வாழ்வார். முரசொலி வாழ்க” என்று வைகோ பேசினார்.