April 2, 2023

அமீரகம் ஏவிய விண்கலம் – செவ்வாய் கிரகத்தை நோக்கி பாய்ந்தது! -வீடியோ

மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற கிரகமாக செவ்வாய் கிரகம் கருதப்படுவதால், அந்த கிரகம் பற்றி ஆய்வு செய்வதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட 8 நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நாடுகளின் வரிசையில் ஐக்கிய அரபு அமீரகமும் சேர்ந்துள்ளது. ஆம் .. ஜப்பானின் தானேகஷிமா செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய் கிரக ஆய்வுக்கலம் இன்று காலை தனது பயணத்தை துவங்கியது.7 மாத காலம் விண்ணில் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து புள்ளி விவரங்களை அந்த செயற்கைக்கோள் பூமிக்கு அனுப்பும். ஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய்க் கிரக ஆய்வுகளுக்கு நம்பிக்கை ஆய்வுக்கலம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்கலத்தை செலுத்தி வருகின்றன. அந்த வரிசையில் ஜூலை மாதம் 14 ஆம் தேதி அமீரக ஆய்வுக்கலம் விண்ணில் அனுப்பப்பட இருந்தது. ஆனால் 2 முறை ஆய்வுக் களத்தை விண்ணில் அனுப்ப தேதி நிர்ணயிக்கப்பட்டு தாமதமானது . இறுதியாக ஜூலை மாதம் 20ம் தேதி நம்பிக்கை ஆய்வுகலம் விண்ணில் தனது பயணத்தை மேற்கொண்டது.

புவி வட்டப் பாதையில், 7 மாதங்கள் பயணிக்கும் இந்த விண்கலம், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் காலநிலை, பருவநிலைகள், ஆக்சிஜன் ஆகியவற்றை ஏறத்தாழ 675 நாட்கள் ஆய்வு நடத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. 6 மாதங்களில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், வெற்றி பாதையில் பயணித்து வருவது, ஐக்கிய அரபு அமீரகம் அரசுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.