March 26, 2023

இந்தியாவை நாசம் செய்த கோட்பாடுகளும், சிந்தனையாளர்களும்!

தீன தயாள் உபாத்யாய் பற்றிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசுகையில் கவர்னர் ஆர் என் ரவி ‘இறையியல், ரூசோவின் சமூக ஒப்பந்த தியரி, மார்க்சிய தியரி, மற்றும் டார்வின் கோட்பாடு ஆகியவை இந்தியாவை நாசம் செய்து விட்டன,’ என்று பேசி இருக்கிறார். இதில் கார்ல் மார்க்ஸ்சை குறிப்பிட்டதை மட்டும் வைத்துக் கொண்டு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். மற்றதை எல்லாம் விட்டு விட்டார்கள். நாம் எடுத்துக் கொள்வோம்.

முதலாவதாக, மேற்கத்திய இறையியல் கோட்பாடுகள் என்பதை ஆபிரகமிய கோட்பாடுகள் என்றுதான் சொல்ல வருகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆபிரகமிய மதங்கள் மீது குற்றம் சாட்டுவதை ஒரு வகையில் புரிந்து கொள்கிறேன். உலகெங்கும் எங்கெல்லாம் இவை பரவினவோ அந்தந்த பிராந்தியங்களின் ஒரிஜினல் கலாச்சார விழுமியங்களை இவை மொத்தமாக அழித்து ஒழிக்கவே செய்திருக்கின்றன. மத்திய கிழக்கில் பண்டைய பேகன் மதத்தின் ஒரே ஒரு கலாச்சார சின்னம், ஒரே ஒரு கட்டிடம் கூட இப்போது இல்லை. ஐரோப்பாவில், ஆப்பிரிக்காவில், தென், வட அமெரிக்காக்களில் இல்லை. ஒரே ஒரு புத்தகம், ஒரே ஒரு சின்ன கல் கூட மிஞ்சவில்லை. இந்தியாவிலும் வட இந்தியா பெருமளவு பாதிப்புற்றாலும் பண்டைய மரபுகள் ஓரளவு தப்பிப் பிழைத்தன என்பது மாபெரும் உலக அதிசயம்தான்.

எனவே மேற்கத்திய இறையியலை குறிப்பிட்டதில் கொஞ்சமே கொஞ்சம் நியாயம் இருக்கிறது. ஆனால் அடுத்த விஷயங்கள்தான் ஹைலைட். ரவி மார்க்ஸ் மீது புகார் வைக்கிறார். நடைமுறையில் கம்யூனிசம் நவீன உலகில் சொல்லொணா நாசங்களை செய்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் மார்க்ஸ்சின் சித்தாந்தங்கள் புரட்சிகரமான மாற்றங்களை விவசாயிகள், தொழிலாளர்கள் போன்றோர் வாழ்வில் ஏற்படுத்தி இருக்கிறது. அவர் வரும் வரை உலகெங்கிலும் தொழிலாளர்கள் ஏறக்குறைய கொத்தடிமை முறையில்தான் நடத்தப்பட்டு வந்தனர். இன்று இந்தியா உட்பட உலகெங்கும் தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கொடுத்திருக்கும் சலுகைகள், வாழ்வியல் உறுதிகள் போன்றவை எல்லாமே மார்க்ஸ் வந்த பின்னர்தான் சாத்தியப்பட்டது, என்று Homo Deus எனும் புத்தகத்தில் யுவல் நோவா ஹராரி கூறுகிறார்.

அடுத்ததாக ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தை சேர்ந்த ழான் ழாக் ரூசோவின் சமூக ஒப்பந்த தியரி நவீன உலகை பெரிதும் பாதித்த ஒன்று. குடிமக்களுக்கு உரிமைகள் இருக்கின்றன. அரசுகள் அந்த உரிமைகளைக் கொடுத்து பின் அவர்களின் கடமைகளைப் பெற வேண்டும் என்று முதன் முதலில் வாதிட்ட தத்துவவாதி ரூசோ. அதுவரை குடிமக்களுக்கு எல்லாம் உரிமைகள் இருக்கின்றனவா என்றெல்லாம் யாரும் யோசித்ததே இல்லை. இன்று கூட பாசிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட பாஜக போன்ற கட்சிகள் அதை நம்புவதில்லை. குடிமக்களின் கடமைகள் பற்றி வாய் கிழியப் பேசும் பாஜகவினர் அரசுக்கு இருக்கும் கடமைகள் பற்றி மூச்சு விடுவதில்லை. இது பற்றி நான் முன்பே எழுதி இருக்கிறேன்👉 . ++ கடைசியாக நம்ம favourite தலைப்புக்கு வருவோம்! டார்வின் கோட்பாடு!

முந்தைய பெயர்களை விட ரவியின் உரையில் என்னை அதிகம் ஈர்த்தது சார்லஸ் டார்வின் பெயரை சேர்த்ததுதான். காரணம் பரிணாம வளர்ச்சி கோட்பாடு குறித்து இந்துத்துவர்களுக்கு பெரிய ஆட்சேபம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களில் சிலர் தசாவதாரம்தான் டார்வின் கோட்பாடு என்று நியாயப்படுத்த வேறு செய்கிறார்கள். ரொம்பவே மொக்கையாக இருந்தாலும், சரி அந்த தியரியை ஏற்றுக் கொள்ளவாவது செய்கிறார்களே என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். இந்த பிரபஞ்சத்தை ஆறேழு நாட்களில் கடவுள் உருவாக்கினார், அது ஆறாயிரம் வருஷம்தான் பழையது போன்ற நம்பிக்கைகள் இந்து மரபுகளில் கிடையாது. ஆபிரகமிய மதங்கள்தான் இந்த விஷயத்தில் வீக். டார்வின் கோட்பாடு அவர்களின் பிரபஞ்ச உருவாக்க தத்துவங்களில் மாபெரும் ஓட்டையை போடுகிறது.

ஆயினும் டார்வின் மீது பொதுவாக மதவாதிகளுக்கு கோபம் வருவதை புரிந்து கொள்ள முடியும்தானே? காரணம் டார்வின் வரும் வரை கடவுள் நம்பிக்கைகளை மறுதலிக்கும் குழுக்களுக்கு சித்தாந்த ரீதியாக எந்த வலுவும் இருக்கவில்லை. இந்த அழகிய உலகம், மனிதர்கள், விலங்குகள் எல்லாமே இத்தனை திறன்பட செயல்படுகின்றனவே? யாராவது உருவாக்காமல் இதெல்லாம் எப்படி வந்திருக்க இயலும், என்ற கேள்விக்கு நாத்திகர்களிடம் பதில் இருக்கவில்லை. ஒரு கடிகாரம் இருந்தால் அதை உருவாக்கிய கடிகாரக்காரன் இருக்கத்தானே வேண்டும்? A watch should have a watchmaker.

ஆனால் டார்வின் வந்து ஆட்டத்தை கலைத்துப் போட்டார். உயிரினங்கள் எப்படித் தோன்றின, இயற்கை ரீதியான தேர்ந்தெடுத்தல் மூலம் உருவான பரிணாம வளர்ச்சி எப்படி மரம், செடி, கொடி, விலங்குகள், மற்றும் மானுடர்களை உருவாக்கியது என்பதை மிகவும் நேர்த்தியாக அறுதியாக இந்தத் தியரி விளக்கியது. A very elegant explanation. உருவாக்கத் தத்துவத்துக்கு மாறான வலுவான விளக்கம். A powerful alternative to creationism.

இதற்குப் பின் நாத்திகர்களுக்கு இறக்கை முளைத்தது. பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். புனித நூல்களில் இருந்த உருவாக்க விளக்கங்கள் எல்லாமே அம்புலிமாமா கதைகள்தான் என்று தெளிவானது. பரிணாம வளர்ச்சி தியரி வெறும் கோட்பாட்டு அளவில் நின்று விடாமல் நடைமுறை பயன்பாட்டில் பல்வேறு வகைகளில் உதவ ஆரம்பித்தன. தடுப்பு ஊசிகள் வந்து நோய்களை போக்கின. மரண தண்டனை என்று அறியப்பட்ட கான்சர் நோய்க்கு மருந்துகள் உருவாகின. கலப்பின பயிர்கள் வந்து பட்டினி பஞ்சங்களை போக்கின. இன்றைக்கு மரபணுகளை நோண்டி நொங்கெடுத்து பிறக்கும் குழந்தையிடமே மாற்றங்களை உருவாக்கும் அளவுக்கு பரிணாம உயிரியல் துறை முன்னேறி இருக்கிறது. Evolutionary Biology is one of the most revolutionary fields in the modern era. சும்மா அம்புலிமாமா கதைகளை வைத்து மக்களை கட்டுப்படுத்திக் கொண்டு தௌலத்தாக சுற்றிக் கொண்டிருந்த மதவாதிகள் டார்வின் வந்த பிறகு பம்ம வேண்டிய நிலை தோன்றி விட்டது. அதனால்தான் இன்றைக்கும் மத நம்பிக்கையாளர்களுக்கு டார்வின் மேல் இத்தனை காண்டு இருக்கிறது. தங்களது காமிக் புக்ஸ் கடவுளின் அடிப்படையையே ஆட்டி விட்ட ஒருவரின் மீது கடுங்கோபம் வரத்தானே செய்யும்?

அதே கோபத்தைத்தான் இன்னொரு மதவாதியான கவர்னரும் காட்டி இருக்கிறார். மதவாதிகளுக்கே பொதுவாக அறிவுக் கூர்மை கொஞ்சம் மொண்ணையாகத்தான் இருக்கும். அதையே தானும் நிரூபித்து இருக்கிறார். அதில் எல்லாம் விட பெரிய காமெடி என்னவென்றால் தீன தயாள் உபாத்யாய் குறித்த ஒரு நிகழ்வில் இதையெல்லாம் பேசி இருக்கிறார் என்பதுதான். இந்துத்துவ சிந்தனையாளர்களில் இருப்பவர்களிலேயே ஆகப்பெரிய மொண்ணை சிந்தனையாளர் உபாத்யாய். வாழ்க்கையிலேயே மொத்தம் இரண்டு மூன்று புத்தகங்கள்தான் எழுதி இருக்கிறார். அந்தப் புத்தகத்தை இந்துத்துவர்களே முக்கால்வாசிப் பேர் படித்திருக்க மாட்டார்கள். படித்தாலும் ‘அதில ஒண்ணும் இல்ல, கீழ போட்ரு,’ என்ற அளவில்தான் அது இருக்கும். அப்படிப்பட்ட ஒரு மனிதர் பற்றிய நிகழ்வில் உலகின் ஆகப்பெரிய சிந்தனையாளர்களை விமர்சித்து இருக்கிறார் ஆர் என் ரவி. டி ராஜேந்தருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி அதில் ஒரு பேச்சாளர், ‘ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், சத்யஜித் ரே, அகிரா குரோசோவா இவங்கல்லாம் வேஸ்ட் கும்பல்கள். இவங்கள்லாம் இயக்குனர்களா என்ன?’ என்று பேசினால் எப்படி இருக்கும்?

– ஸ்ரீதர் சுப்ரமணியம்