September 25, 2021

அம்மையாருடைய சிறப்புகள் எத்தனையோ ..!- ஜெயலலிதா குறித்து மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று, ‌அவை கூடியதும், கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, ‌தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா ‌உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்.

mk stalin jan 24

இரங்கல் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு தி.மு.க. சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அரசியல் வாழ்வில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, குறிப்பாக அவருடைய மறைவிற்குப் பிறகு, அவருடைய இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தியதோடு, அந்த இயக்கத்தை ஆளும் கட்சியாகக் கூடிய வகையில் வெற்றி பெறச் செய்தவர் ஜெயலலிதா. அவருடைய ஆட்சிகால சட்டங்களும், திட்டங்களும் மக்கள் நலனுக்கு உகந்தனவா, அல்லவா என்பதன் அடிப்படையில், தி.மு.க. சில நேரங்களில் வரவேற்று இருக்கின்றது. சில நேரங்களில் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வரும், அதேபோல நானும் 1989-ம் ஆண்டு ஒரே கால காட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்று, இந்த பேரவைக்குள் காலடி வைத்திருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். அன்றைக்கு ஆளுங்கட்சி வரிசையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். அவர் எதிர்க்கட்சித் தலைவராக உரையாற்றக்கூடிய, பணியாற்றக் கூடிய காட்சிகளை நான் எண்ணிப் பார்க்கின்றேன்.

தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட நேரத்தில், அந்த பேரழிவிற்கு நிதி திரட்டப்பட்ட நேரத்தில், தி.மு.க.வின் சார்பில் நிதியளிப்பதற்காக, 2005-ம் ஆண்டு முதன் முதலில் அன்றைய முதல்-அமைச்சராக இருந்த அவரை நான் சந்தித்து 21 லட்ச ரூபாய் நிதி வழங்கினேன். அப்போது அவர், ‘தலைவர் கலைஞர் எப்படி இருக்கிறார், அவருக்கு எனது நன்றியை சொல்லுங்கள்’ என்று அவர் என்னிடத்தில் கேட்டுக் கொண்டார்.

சட்டமன்றத்தில் அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும், நான் துணை முதல்-அமைச்சராகவும் இருந்து பணியாற்றி இருக்கிறோம். அதேபோல் அவர் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில், நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பும் கிடைத்ததில் உள்ளபடியே பெருமையாகத்தான் அமைந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில், பதவியேற்பு விழா நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவிற்கான அழைப்பு எதிர்க்கட்சிக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

நானும் அதை ஏற்றுக் கொண்டு எதிர்க்கட்சி என்ற முறையில் நானும், எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் அந்த விழாவிற்கு சென்றிருந்தோம். விழாவிற்கு சென்ற நேரத்தில் 11-வது வரிசையில் எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது, அதில் அமர்ந்து, விழா முடிந்த பிறகு தான் நாங்கள் கிளம்பி சென்றோம். நான் அதைப்பற்றி பெரிது படுத்தவில்லை, பொருட்படுத்தவில்லை, எங்கும் அதுபற்றி நான் விமர்சிக்கவும் இல்லை.

ஆனால் சில ஊடகங்களில் அது செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. அந்த செய்தியை அறிந்த ஜெயலலிதா மிகுந்த வருத்தப்பட்டு, ஒரு அறிக்கையை கூட வெளியிட்டு இருந்தார். ’என்னையோ, தி.மு.க.வையோ அவமதிக்கும் நோக்கத்தில் அது அமைந்திடவில்லை, அதற்காக நான் வருத்தப்படுகிறேன்’ என்று அவர் சொன்னது மட்டுமல்ல, ’மாநில நலனுக்கு இணைந்து பாடுபடுவோம்’, என்ற அந்த செய்தியையும் அவர் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார். உள்ளபடியே அதில் எனக்கு மகிழ்ச்சி.

அதுமட்டுமல்ல, அவர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, ’அவர் உடல்நலம் பெற்று விரைவில் திரும்பிட வேண்டும்’ என்று எங்களுடைய தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அறிக்கை வெளியிட்டது மட்டுமல்ல, என்னையும், எங்களுடைய துணைத் தலைவர் மற்றும் பொன்முடி, வேலு போன்றவர்களை எல்லாம் மருத்துவமனைக்கு அனுப்பி, உடல் நலம் விசாரித்து விட்டு வருமாறு உத்தரவிட்டார்.

நாங்களும் சென்று விசாரித்து விட்டு வந்தோம். அவர் நலம் பெற்று திரும்புவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால், எதிர்பாராத நிலையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி அதிர்ச்சியாக அமைந்தது. காவேரி மருத்துவமனையில் எங்களுடைய தலைவர் கலைஞர் அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்தில் இந்த செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சிக்கு ஆளாகி, உடனடியாக, “நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வாருங்கள்’ என்று எங்களுக்கு உத்தரவிட்டு, அதன் பிறகு தி.மு.க.வின் சார்பில் நாங்களும் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தோம்.

அம்மையாருடைய சிறப்புகள் எத்தனையோ இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரையில் பாராட்டப்படக்கூடிய, பெருமைப் படக்கூடிய ஒரு சிறப்பு என்னவென்று கேட்டால், எதற்கும் அஞ்சாமல், கவலைப்படாமல் எதையும் சந்திக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவராக அவர் விளங்கினார் என்பது தான் உண்மை. நாம் அவரை இன்றைக்கு இழந்திருக்கிறோம். ஆகவே, தி.மு.க.வின் சார்பில், குறிப்பாக தலைவர் கலைஞரின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அமைகிறேன்” என்று
அவர் பேசினார்.