August 15, 2022

சென்னை மவுண்ட்ரோடு @ அண்ணாசாலையிலுள்ள அண்ணாசிலையின் கதை!

🦉ண்ணா சாலையில் அண்ணா சிலையின் இன்றைய நிலை ! – ஆட்சியாளர்களுக்கு காண நேரமில்லை போலும். அது சரி இந்த சிலை உருவான கதையையாவது இப்போ தெரிந்து கொள்வோமா? இதோ நம் கட்டிங் கண்ணையாவின் ஸ்பெஷல் ரிப்போர்ட் இதோ;

அண்ணாவின் அரசியல் வாழ்வு 1937இல் தொடங்கி 1969இல் அவரது மறைவுக்குப் பிறகும் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களத்தில் பல ஆண்டுகள் வலுப்பெற்றிருந்த தேசிய கட்சியான காங்கிரஸின் மொத்த வீழ்ச்சிக்கு வித்திட்டு, 1967-ம் ஆண்டு மாநிலக் கட்சியான தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது, அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதே உற்சாகத்தில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக செயலாற்ற தொடங்கினார் அண்ணா. பல நாட்களாக அண்ணாவிற்கு சிலை வைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், அதற்கு இது தான் சரியான தருணம் என்று திட்டம் தீட்ட தொடங்கினார். அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்.ஜி.ஆர் இந்த ஆசையை அண்ணாவிடமே சென்று கூறினார். ஆனால் அதை வலுக்காட்டாயமாக மறுத்துவிட்டார் அண்ணா. ஆனால் அண்ணாவிற்கு சிலை வைப்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்த எம்.ஜி.ஆர் மவுன்ட் சாலையில் தான் சிலை வைப்பது என்று இடத்தையும் தீர்மானம் செய்து வைத்திருந்தார்.

ஒரு முடிவு எடுத்தால் அதில் மாறுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் அண்ணா தனக்கு சிலை வைப்பதை அனாவசியமான செயலாக கருதினார். ஆனால் பிடிவாதம் கொண்ட எம்.ஜி.ஆர் அண்ணாவிற்கு பல அன்புத் தொல்லைகளை கொடுக்க ஆரம்பித்தார். கடைசியில் ஒருவழியாக அண்ணாவும் சிலை வைப்பதற்கு ஒப்புதல் தந்தார்.

அண்ணாவின் சில புகைப்படங்களை வைத்து சிலை வடிக்கத் தொடங்கினர் சிற்பிகள். அண்ணாவின் சிலை தத்ரூபமாக வரவேண்டும் என்று சிற்பிகளுக்கு கட்டளையிட்டு கடிந்து கொண்டார் எம்.ஜி.ஆர். அதற்க்கு ஒரு சிற்பி நீங்கள் எதிர்பார்ப்பது போல சிலை வர வேண்டுமென்றால் அண்ணாவே மாடலாக வந்து அமர்ந்தால் தான் சாத்தியம் என்று கூற, அதையும் நடத்திக்காட்டுவதாக முடிவெடுத்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் அண்ணாவிடம் சென்று அன்புத்தொல்லை கொடுக்க ஆரம்பித்து, அவரை கட்டாயப்படுத்தி சிலைக்கு மாடலாக அமர வைத்தார்.

எம்.ஜி.ஆரின் பிடிவாத குணத்தால் மட்டுமே இந்த சிலை சாத்தியமானது என்று கூறுவது என்றும் மிகையாகாது. 1–1–1968 அன்று உலகத்தமிழ் மாநாட்டையொட்டி, எம்.ஜி.ஆர். வழங்கிய இந்த அண்ணா சிலையை, சர்.ஏ.ராமசாமி முதலியார் திறந்து வைத்தார். இந்த சிலைதான் இன்று அண்ணா சாலையை அலங்கரித்து நிற்கிறது.

அப்படியாப்பட்ட சிலையை அதிமுகவினராவது சுத்தப்படுத்தலாம்