ஆறாம் நிலம் – திரைப் பார்வை
ஐபிசி தமிழின் தயாரிப்பில், ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கிய முழுநீளத் திரைப்படமிது. ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் முகமாக ஆறாம் நிலம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலோ இதுவரை தொடப் படாத ஒரு களம் இதில் பேசப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் போருக்குப் பிந்திய பத்தாண்டுகளின் பின்னும்கூட முற்றிலும் அகற்றப்படாத சூழல் நிலவுகின்றது.அந்த வகையில் அந்நாட்டில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல் போனோரைத் தேடும் போராட்டம், முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஆகியவற்றைச் சுற்றி கதை நகர்கிறது. இவற்றை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திய விதமும் நகர்த்திய விதமும் சமகாலப் பிரதிபலிப்பும் கொண்டுள்ளது.
முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நவயுகா மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கணவனைத் தேடும் பெண்ணாக, பிள்ளைக்குத் தாயாக, போருக்குப் பின்னான வாழ்வின் அத்தனை நெருக்கடிகளுக்கும், சமூக அழுத்தங்களுக்கும், மனப்போராட்டங்களுக்கும் முகம் கொடுக்கும் பெண்ணாக மிகத் தேர்ந்த நடிப்பின் மூலம் அந்தப் பாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கின்றார் நவயுகா.
முன்னாள் போராளியாக, கண்ணிவெடி அகற்றும் குழுவின் பொறுப்பாளனாக பாஸ்கியினுடைய நடிப்பு இயல்புத் தன்மையுடன் வெளிப்பட்டிருக்கின்றது. ஏனைய பாத்திரங்களும் தமது பங்கினைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
கண்ணிவெடி அகற்றும் பணிக்குரிய அந்த நிலம், அதற்குரிய தொழில்நுட்ப நுணுக்கங்களுடன் படமாக்கப்பட்டிருக்கின்றமை இதன் அதீத சிறப்பு. அந்தப் பணி இடம், அதற்கான பணியாளர் ஒருங்கிணைப்பு, உடை என்பன கச்சிதமான சித்தரிப்பினை வெளிப்படுத்துகின்றது.
கதையின் முடிச்சுகளுக்கு இறுதியில் முடிவு சொல்லாமல் விட்டதால் யதார்த்தம் மிளிர்கிரது.
சமரசங்களுக்கு இடம் கொடுக்காமல் அந்தக் கதைக்களம் எதனைக் சுட்டிக் காட்ட நேரிட்டதோ அதற்குரிய இயல்பான கவனம் மற்றும் பொறுப்போடு உருவாக்கப்பட்டுள்ள ‘ஆறாம் நிலம்’ திரைப்படம் ஐபிசி யூ டியூப் சேனலில் ரிலீஸ் ஆகிறது.,.