October 16, 2021

சரஸ்வதி நதி இருந்தது உண்மையே!- தொடரும் ஆய்வு முடிவுகள்!

மிகப் பழமையான இந்த மத நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது ரிக்வேதம் ஆகும். அதில் சரஸ்வதி நதியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நதி யமுனை நதிக்குக் கிழக்கிலும், சட்லெஜ் நதிக்கு மேற்கிலும் இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக இவ்விரு நதிகளுக்கும் இடையே சரஸ்வதி நதி இருந்தது இதன் மூலம் நிரூபணமாகிறது. அதிலும்  ரிக்வேதத்தின் நான்காவது பாதம் தவிர பிறவற்றில் சரஸ்வதி நதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரிக் வேதத்திற்குப் பிந்தைய நூல்கள் பல சரஸ்வதி நதியின் மறைவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

river oct 16

யஜூர் வேதத்திலும் சரஸ்வதி நதி பற்றிக் கூறப்பட்டுள்ளது. சரஸ்வதியை நோக்கி ஐந்து நதிகள் பாய்வதாகவும், பின்னர் நிலத்தில் ஐந்து மடிப்புகளோடு கூடிய சரஸ்வதி நதியாக அவை ஆகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கையும் யமுனையும் சந்திக்கும் இடம் ‘திரிவேணி சங்கமம்’ என்றழைக்கப்படுகிறது. திரிவேணி என்றால் மூன்று என்று பொருள். அப்படியானால் கங்கை மற்றும் யமுனை நதிகளைத் தவிர வேறொரு நதியும் அங்கு சங்கமமாகி இருந்தால் மட்டுமே அது திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்பட்டிருக்கும்.

அப்படியானால் அந்த இன்னொரு நதி எது? நிச்சயமாக அது தற்போது காணாமல் மறைந்து போயிருக்கும் சரஸ்வதி நதி என்றே நம்பப்படுகிறது. இதனிடையே இஸ்ரோ நடத்திய ஆய்வுகளும் சரஸ்வதி நதி இருந்திருப்பதை உறுதிப்படுத்தத்தான் செய்கின்றன. அந்தப் பகுதியில் தொன்மை காலத்திய நதிப்படுகைகள் இருக்கின்றன என்றும், அவை பெரும்பாலும் சரஸ்வதி நதியின் படுகைகளாகவே இருக்க வேண்டும் என்றும் உறுதியாகத் தெரிவிக்கிறது இஸ்ரோ.

ஆய்வுகளும் வேதங்களும் சரஸ்வதி நதி பற்றிக் கூறினாலும், அது பூமிக்கடியில் தற்போது பாய்ந்தோடிக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டாலும் இவை எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் சரஸ்வதி நதி இமயத்தில் தோன்றி, ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் வடக்கு குஜராத்தில் பாய்ந்து, மேற்கு கடலில் கலந்தது உண்மை தான்’ என, மத்திய அரசிடம் வல்லுனர் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பேராசிரியர் கே.எஸ்.வால்டியா தலைமையிலான வல்லுனர் குழு கடந்த ஆறு மாதங்களாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் மத்திய அரசிடம் நேற்று தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், ‘சரஸ்வதி நதி இருந்தது உண்மையே என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இமயத்தில் தோன்றி, கட்ச் பாலைவனம் வழியாக மேற்கு கடலில் கலக்கும் முன்பாக, பாகிஸ்தானின் சில பகுதிகளையும் கடந்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அதன் நீளம் சுமார் 4,000 கிமீ.

நதியின் மூன்றில் ஒரு பகுதி தற்போதைய பாகிஸ்தானிலும், மூன்றில் இரு பகுதியான, 3,000 கிமீ இந்தியாவிலும் இருந்துள்ளது. இந்நதியின் கரையோரத்தில் சுமார் 1,700 சிறு மற்றும் பெரிய நகரங்களும், கிராமங்களும் அமைந்திருந்தன. அவை 5,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும்‘ எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்பதால், இவ்விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

இது இது குறித்து பேராசிரியர் வால்டியா, “சரஸ்வதி நதி இமயமலையில் உருவாகி பாகிஸ்தான் வழியாக இந்தியாவில் ஊருவி மேற்கு கடல் வளைகுடாவில் கலந்ததாக முடிவுக்கு வந்துள்ளோம். இந்த நதி அரியானா, ராஜஸ்தான் மற்றும் வடக்கு குஜராத் வழியாக ஓடியுள்ளது. இதன் நிலப் பகுதியை எங்கள் குழு ஆய்வு செய்தது. சரஸ்வதி ஆற்றுக்கு மேற்கு மற்றும் கிழக்கே இரண்டு கிளைகள் இருந்தது. தற்போதுள்ள கக்கார், பட்டியாலிவாலி ஆறுகள்தான் அதன் மேற்கு கிளைகள். ஹரப்பா நாகரீகத்தின் போது சரஸ்வதி நதி ஓடிய பகுதியில்தான் 1700 சிறிய மற்றும் பெரிய நகரங்கள் உருவாகியுள்ளன. சில நகரங்கள் 5 ஆயிரத்து 500 ஆண்டுகளாக இருந்துள்ளன. தண்ணீர் இல்லாமல் இந்த நகரங்கள் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. எனவே இங்கு நிச்சயம் ஒரு ஆறு ஓடியிருக்க வேண்டும். அது எந்த ஆறு? அதன் பெயர் என்ன? என்பதை கண்டறியும் பணியில்தான் நாங்கள் ஈடுபட்டோம்.

மணலில் உள்ள தாதுக்கள் மற்றும் ரசாயணங்களை ஆய்வு செய்ததில் சர்சுதி, கக்கார்-ஹர்கா ஆகிய ஆறுகளின் வழியாக ஓடிய நதி இமயமலையில் உருவானதை தெரிவிக்கிறது. இதன் கிழக்கு மற்றும் மேற்கு கிளைகள் பாட்டியாலாவில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள சத்ரனா என்ற இடத்தில் சங்கமித்து கட்ச் பகுதியில் உள்ள ராண் பாலைவனப் பகுதியை கடந்து மேற்கு கடல் வளைகுடாவில் கலந்துள்ளது. சரஸ்வதி நதியின் மொத்த நீளம் சுமார் 4 ஆயிரம் கி.மீ. இதில் 3ல் ஒரு பகுதி தற்போதுள்ள பாகிஸ்தானில் உள்ளது. 3 ஆயிரம் கி.மீ நீளத்துக்கு இந்தியாவில் ஓடியுள்ளது”என்று அவர் தெரிவித்தார்