தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு திருமண உரிமை!

தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு திருமண உரிமை!

‘தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதற்காக திருமணம் வேண்டிக் கிடக்கிறது? அவர்கள்தான் இப்போது சட்டபூர்வமாக இணைந்து வாழலாமே?’ என்று கேட்கிறார்கள். என்னைப் பொருத்தவரை, திருமணம் என்பது பண்டைய விவசாயப் பழங்குடிகளின் உருவாக்கம். நவீன உலகிற்கு பொருத்தமற்ற ஒரு விஷயம். ஆதி மனிதன் வேட்டைக்கு கல்லை செதுக்கி உருவாக்கிய Handaxe போன்ற ஒரு கருவிதான் திருமணம். அந்தக் காலத்துக்கு ஏதோ வகையில் பிரயோசனமாக இருந்த விஷயம், ஆனால் நவீன உலகுக்கு, மனித உரிமைகள், பெண்ணுரிமைகள் பேசும் சமூகத்துக்கு தேவையில்லாத ஆணி என்பதுதான் என் நிலைப்பாடு.

இன்னும் 50-75 ஆண்டுகளில் மத அடிப்படைவாதங்களை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் ஓரிரு சமூகங்களைத் தவிர மீதி அனைத்து அறிவியல் பூர்வ சமூகங்களிலும் திருமணம் என்ற சிஸ்டம் வழக்கொழிந்து போய் விடப் போகிறது என்றுதான் எதிர்பார்க்கிறேன். எனவே, திருமணம் என்ற ஒன்றே தேவையில்லை, எல்லா வித தம்பதியரும் இணைந்து வாழ முயற்சி செய்யுங்கள் என்று யாராவது வாதாடினால் அதை என்னால் புரிந்து கொள்ள முடியும். இவர்கள் என்ன செய்கிறார்கள்? தன்பாலின ஈர்ப்பாள தம்பதியர்களுக்கு மட்டும் திருமணம் தேவையில்லை என்று வாதிடுகிறார்கள். ஆனால், இவர்களைப் பொருத்தவரை ஆண்-பெண் தம்பதியருக்கு கண்டிப்பாக திருமணம் தேவை. திருமணம் செய்து கொள்ளாமல் அவர்கள் ஒருவர் இன்னொருவரின் சுண்டு விரலைத் தொட்டுக் கொள்வதைக் கூட அனுமதிக்க மாட்டார்கள். அப்படி திருமணம் ஆனவர்களும் ஏதோ காரணத்துக்காக பிரிய விரும்பினால் அதையும் ஏற்றுக் கொள்ளாமல் முரண்டு பிடிப்பார்கள். அய்யோ, குழந்தைகள் என்ன ஆகும்? நம் கலாச்சாரம் என்ன ஆகும்? நம் கடவுளுக்கு கோபம் வராதா? என்றெல்லாம் உருட்டு உருட்டென்று உருட்டுவார்கள்.

ஆனால் தன்பாலின ஈர்ப்பு தம்பதியர் திருமணமே செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்வதை ஏற்றுக் கொள்ளாவிடிலும், வேறு வழியின்றி கண்டு கொள்ளாமல் கடப்பார்கள். ஏன் சார்? அப்போ மட்டும் உங்களின் கலாச்சாரத் தூய்மைவாதம் உங்களை தொந்தரவு செய்யவில்லையா?

பதில்: இல்லை என்பதுதான். ஏனெனில் ஆண்-பெண் தம்பதியினர் மத்தியில் பெண்ணின் கற்பு எனும் வஸ்து ஒன்று வந்து விடுகிறது. அது இவர்களுக்கு முக்கியம் அல்லவா? எனவே அதைக் காப்பாற்ற அரும்பாடு படுகிறார்கள். தன்பாலின ஈர்ப்பு விஷயத்தில் அந்தப் பிரச்சினை இருப்பதில்லை; எனவே திருமணம் பற்றிய கவலை அங்கே இவர்களுக்கு இல்லை. அதுவுமின்றி ஆண்-பெண் திருமணத்துக்கு கடவுளின் மற்றும் மதங்களின் அங்கீகாரம் இருப்பதால் அதை போற்றிப் பாதுகாக்க வேண்டும். பண்டைய இறைவனுக்கும், அவனது தூதர்களுக்கும் தன்பாலின ஈர்ப்பு பற்றிய விழிப்புணர்வு இருந்திருக்கவில்லை என்பதால் அவற்றுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. எனவே அந்தப் பண்டைய இறைவனின் பின்பற்றாளர்கள் நவீன காலத்திலும் அதை ஒதுக்குகிறார்கள்.

இப்படி நாம் சொன்னால், சரி, திருமணம்தான் பண்டைய சிஸ்டம் ஆயிற்றே, நவீன தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அது மட்டும் எதற்கு என்று இன்னொரு வாதத்தில் கேட்கிறார்கள். அவர்கள்தான் சீர்திருத்தவாத சமூகப் போராளிகள் ஆயிற்றே என்கிறார்கள். திருமணம் பற்றி நான் மேலே குறிப்பிட்ட கருத்துகள் எனது தனிப்பட்ட கருத்துகள்தான். இந்த உலகமே அப்படி யோசிக்கத் துவங்குவதற்கு இன்னும் 20-30 வருடங்கள் ஆகும்.

ஆனால் தன்பாலின ஈர்ப்பாளர்கள் அப்படி அல்ல. அவர்களில் பெரும்பலானோர் சமூகப் போராளிகள் எல்லாம் கிடையாது. அவர்களும் நம் அனைவரைப் போலவும் சாதாரண மனிதர்கள், மனிதிகள்தான். அவர்களுக்கும் ஆசா பாசங்கள், காதல்கள், குடும்பமாக வாழும் உத்வேகங்கள் இருக்கின்றன. அவர்களில் பெரும்பாலோனோருக்கு கடவுள் நம்பிக்கை அல்லது மதத்தின் மீது பற்று இருக்கின்றன. நீங்கள் எப்படி முறைப்படி கல்யாணம் செய்து கொண்டு, கணவன் மனைவியாக வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொள்வதை சரியான வாழ்வு முறையாக நம்பி பின்பற்றுகிறீர்களோ அதே போல அவர்களும் செய்ய விரும்புகிறார்கள்.

அதைத்தான் இன்றைய சட்டம் தடுத்துக் கொண்டு இருக்கிறது. அதைத்தான் மத்திய அரசும் தடுக்க முயல்கிறது. அதை நீக்கவும் ஆண்-பெண் தம்பதியினருக்கு இருக்கும் அனைத்து சமூக உரிமைகளும் தன்பாலின தம்பதியருக்கும் கொடுக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தும்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கை அதிமுக்கிய ஒன்றாக நான் பார்க்கிறேன். சுப்ரீம் கோர்ட்டும் அப்படியே பார்க்கிறது. இது பற்றி குறிப்பிடுகையில் ‘Any decision on the subject would have a huge bearing on society,’ எனவே ‘it’s a matter of seminal importance,’ என்று சொல்லி இருக்கிறது. அதையொட்டி இந்த வழக்கின் விசாரணைகள் நேரலையில் உச்ச நீதிமன்ற இணைய தளத்திலும், யூடியூபிலும் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிகிறது.

அப்படிப்பட்ட ஒரு அதிமுக்கிய வழக்கில் மனித உரிமைகளை நிலைநாட்டும் விதமாக தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு திருமண உரிமையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அந்த நம்பிக்கையுடன் நவீன மனித உரிமைகளைப் போற்றும் அனைத்து இந்தியர்களுக்கும் all the best.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!