என்னை சிறையில் தள்ளி நிர்வாணமாக்கவே போலிசார் திட்டம்! – கார்ட்டூனிஸ்ட் பாலா தகவல்!

அதே சமயம் ஜாமீனில் சென்னை திரும்பிய பாலா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “நெல்லையில் நின்றெரிந்த குழந்தை என் இரண்டாவது குழந்தை போலவே இருந்தது. பலரையும் பாதித்தது போலவே என்னையையும் பாதித்தது. ஒரு கார்டூனிஸ்டாக இதைக் கண்டிக்கும் வகையிலயே அந்தக் கார்டூனை வரைந்தேன்.
எரிந்து இறந்த அக்குழந்தை நிர்வாகத் திறனற்ற அரசை அம்மணமாக்கிவிட்டு இறந்தார் என்பதே அதன் கருத்து. மற்றபடி அதில் ஆபாசம் இல்லை. கிளர்ச்சியூட்டும் படமே ஆபாசம். இந்தப்படத்தைப் பார்த்தால் கிளர்ச்சியா வரும்? நான் மட்டுமல்ல வேறு கார்டூனிஸ்டாக இருந்தால் இன்னும் ஆக்ரோஷமாக வரைந்திருப்பார்.
ஒரு பெண்ணை இப்படி வரைவீர்களா என்று கேட்பதே அபத்தம். பெண்ணாக இருந்தால் வேறு வகையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பார். பெண்களை இப்படி ஒருபோதும் நான் வரைந்தது இல்லை. என் படத்தை மார்ஃபிங் செய்து நிர்வாணமாக வெளியிட்டார்கள் அதற்காக மூக்கை சிந்திக்கொண்டு புகார் கொடுக்கவில்லை.
அரசை யாரும் விமர்சிக்கவே கூடாது என்று அச்சுறுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னை சிறையில் தள்ளி நிர்வாணமாக்கவே போலிசார் திட்டமிட்டிருந்தனர். சமூக ஊடகத்தினர், அரசியல் தலைவர்கள், ஊடகத்தினர், மக்கள் அனைவரும் என்னை காத்து மீட்டு்ள்ளனர்.
கருணாநிதியை கடுமையாகவே விமர்சனம் செய்து கார்டூன் வெளியிட்டிருக்கிறேன் ஆனால் அவர் ஒரு பத்திரிகையாளர், கார்டூனிஸ்ட் என்பதால் என்னை இதுபோன்று நடத்தியது இல்லை. டாஸ்மாக் தொடர்பாக ஜெ., வை மிக கடுமையாக விமர்சித்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் தலைவர்கள் என்பதால் இதுபோன்று கிடையாது. ஆனால் இவர்கள் தலைவர்கள் அல்ல” இவ்வாறு பாலா கூறினார்.