August 17, 2022

இது மிக மிக மோசமான ஒரு ஊடகவியல் சூழல்!

சமீபத்தில் ஒரு யூ ட்யூப் சேனலுக்காக ஒரு இளைஞர் என்னை பேட்டி கண்டார். கேள்விகள் அத்தனையும் நாம் தமிழர் ஃபேஸ் புக் ஃபாக்டரியிலிருந்து உருவான அனுமானங்களிலிருந்து பிறந்தவை. அவருக்கு நான் சில அடிப்படையான விஷயங்களை புரிய வைக்க முயற்சித்தேன். அவர் அக்கறை பதில்களில் இல்லை. அடுத்தடுத்து முன் தீர்மானமான கேள்விகளில் இருந்தன. பேட்டி முடிந்ததும் சொன்னேன். ‘’ உங்கள் சார்பு நிலைகள் எனக்கு முக்கியம் அல்ல. ஆனால் நீங்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளனாக வளர்வதற்கு உங்களது வறட்டுத்தனமான புரிதல்கள் தடையாக அமைந்துவிடும். தயவு செய்து ஃபேஸ் புக்கை தாண்டி கொஞ்சம் படியுங்கள் ..ஒவ்வொன்றிற்கும் பின்னே ஒரு வரலாறு இருக்கிறது.’’

நான் ஊடகத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்ற பிறகு பெரும் கனவுகளுடன் சென்னை வந்தேன். என்னுடன் பயின்ற பலரும் இன்று ஊடகத்துறையில் மிகச்சிறந்த இடங்களில் இருக்கிறார்கள். பத்திரிகை நடத்துவேன், பதிப்பகம் நடத்துவேன் என்றெல்லாம் நான் நினைத்ததுகூட இல்லை. பிறகு கடந்த பத்தாண்டுகளக காட்சி ஊடகத்துறையில் நெருக்கமாக புழங்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இந்தப் பத்தாண்டுகளில் ஊடகத்துறைக்கு வரும் இளைஞர்களை கவனிக்கிறேன். ஊடக நிறுவனங்கள் அவர்களை உருவாக்கும் விதத்தையும் பார்த்திருக்கிறேன்.

ஊடகத்துறை இன்று கவர்ச்சிகரமான ஒரு துறையாக மாறியிருக்கிறது. நிறைய வாய்ப்புகள் உருவாகியிருக்கிறன. குறுகிய காலத்தில் புகழ், ஓரளவு நல்ல சம்பளம் , சமூக அந்தஸ்து என பல விஷயங்கள் ஊடகத்துறையிலிருந்து கிடைப்பது சமீபத்திய கால நிகழ்வுகள். காட்சி ஊடகங்கள் விரிவடைந்து வந்திருக்கின்றன. ஆனால் இப்படி பணிக்கு வரும் இளைஞர்கள் அந்த நிறுவனங் களால் எந்த அளவு வார்த்தெடுக்கப்படுகிறார்கள் அல்லது தங்களைத் தாங்களே வார்த்துக் கொள்கிறார்கள் என்று பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

அவர்கள் எழுதும்போதும், பேசும்போதும் அவர்களது மிக பலவீனமான மொழி அறிவு மட்டுமல்ல, சமூக அறிவின் பலவீனமும் சேர்ந்தே வெளிப்படுகிறது. கடந்தகாலம் பற்றிய குறைந்த பட்ச பார்வைகூட இல்லாதது, கூகுளில் அல்லது சமூக வலைத் தளங்களில் கிடைக்கும் அரைகுறை தகவல்களையே ஆதாரமாக கொள்வது, துறை சார் வல்லுனர்கள் யாரிடமும் எந்தத் தொடர்பும் இல்லாதது என்பதே இளம் ஊடவியலாளர்களின் பொதுவான போக்காக இருக்கிறது. எங்கிருந்தோ கிடைத்த முன்முடிவுகளையே தங்கள் ஒட்டுமொத்த உலகப்பார்வையாக்கிகொள்ளும் போக்கைத் தவிர கற்றல் என்பது அரிதாகிவிட்டது. அடிப்படை அரசியல், பொருளாதார, வரலாற்று நூல்களைக் கூட அவர்கள் கேள்விப்பட்டதில்லை. அடிப்படை சட்டங்கள், ஜனநாயக வழிமுறைகள் பற்றிக்கூட பெரும்பாலானோருக்கு குழப்பமே இருக்கிறது. அவர்களுடனான சில உரையாடல் களை இங்கே பதிவு செய்தால் மனம் புண்பட்டுவிடுவார்கள். ஆனால் எதையுமே கற்றுக்கொள்ளாமல் ஒரு வெற்று அகங்காரமும் தன்னம்பிக்கையும் ஊடகத்துறை இளைஞர்கள்பலரிடமும் குடி கொண்டிருப்பதைக்காண முடிகிறது. எதையாவது சுட்டிகாட்டினால் குண்டுசி பட்ட பலூன்போல ஆகிவிடுகிறார்கள். தங்கள் மேலதிகாரிகளிடம் இருந்து தங்களுக்கு கிடைக்கும் சலுகைகளே தங்கள் தகுதி என்று நம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஊடக நிறுவனங்கள் பெரிய தொழிற்சாலைகளைப்போல வேலைப்பிரிவினையின் அடிப்படையில் செயல்படுகின்றன. ஒரு ஊடகவியலாளனின் பாத்திரம் சுருக்கப்பட்டு ஒரு அதிகார படிநிலைக் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அதில் ஒரு இளம் ஊடகவியலாளர் ஒரு கடையாணியைபோல பயன்படுத்தப்படுகிறார். அவர் தொடர்ந்து தான் செய்ததையே செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு அங்கே எந்த புதிய சவாலோ கற்றலுக்கான அவசியமோ இல்லை. இந்தக் கட்டமைப்பு ஒரு ஊடக வியலாலரை ஒரு ஆலைத்தொழிலாளரின் வரையறுக்கபட்ட நிலைக்குக்கு கொண்டு வந்து விட்டது. ஊடக நிறுவங்களுக்குள் நிலவும் உள் அரசியல் மற்றும் அதிகார கட்டமைப்பிற்குள் தங்களை தக்கவைத்துக்கொள்வதே பெரும்பாலான இளம் ஊடகவியலாளர்களின் போராட்டமாக மாறிவிட்டது. இது மிக மிக மோசமான ஒரு ஊடகவியல் சூழல்.

இன்று எல்லா ஊடகங்களிலும் தலைசிறந்த ஊடகவியலாளர்கள், சமூக பொறுப்பு மிக்கவர்கள் தலைமைப்பொறுப்புகளில் இருக்கிறார்கள். அவர்களால் சிறந்த ஊடகவியலாளர்களை இனம் கண்டு வளர்த்தெடுக்க முடியும். அவர்கள் இளம் ஊடக வியலாலர்களாக பணியாற்றியபோது அவர்கள் வேலை செய்த நிறுவனங்கள் அவர்களை எப்படி உருவாக்கின என்பதைச் சிந்திக்க வேண்டும். தாங்கள் பெற்றதை அடுத்த தலைமுறைக்கு அவர்கள் திருப்பி அளிக்க வேண்டும். தங்களுக்கு கீழ் பணியாற்றும் இளம் ஊடகவியலாளர்களுடன் தங்கள் அதிகார படிநிலைகளைக் கடந்து தொடர்ந்து உரையாட முன்வரவேண்டும். தங்களது கட்டமைப்பிற்குள் ஒரு அறிவுசார் சூழலை உருவாக்க வேண்டும். வாசிப்ப்பழக்கத்தை ஊக்குவித்தல், அரசியல் , சமூகம், இலக்கியம் சார்ந்த தொடர் பயிலரங்குகள் என பல விஷயங்களைச் செய்ய முடியும். மேலும் ஆர்வமுள்ள இளம் ஊடகவியலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தங்களைத்தாங்களே வார்த்துக்கொள்ள நிறைய சந்தர்ப்பங்களை அளிக்கவேண்டும்.

இளம் ஊடகவியளார்கள் தங்கள் மேலதிகாரிகளின் குட் புக்கில் இடம் பெறுவதற்கான் காரியங்களிலேயே கவனம் செலுத்துவதற்குப் பதில், எங்கிருந்து எங்கே போனால் கொஞ்சம் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று எப்போதும் சிந்திப்பதற்குப்பதில் ஒரு ஊடகவியலாளனாக தன்னை முழுமையாக உருவாக்கி கொள்ளும் வெறி அவர்களுக்கு இருக்கவேண்டும். அப்படி வெறிகொண்ட இளைஞர்களை இப்போதும் காண்கிறேன். ஆனால் அவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. அப்படியே சிலர் இருந்தாலும் அவர்கள் ஊடக நிறுவன உள் அரசியலில் கருகிப் போகிறார்கள். ஊடகத்துறை வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் அது செறிவான ஊடகவிய லாளர்களை உருவாக்காவிட்டால் அது சமூகத்திற்கு தேவையற்ற ஒரு சுமையாக மாறிவிடும்.

மனுஷ்ய புத்திரன்