March 25, 2023

அடுத்த பத்து வருஷத்துலே இந்திய பொருளாதாரம் ஆஹா.. ஓஹோ-தானாம்!

உலகின் முன்னணி நிதி சேவைகள் அளிக்கும் Morgan Stanley அமைப்பு உலக நாடுகளின் பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலை குறித்த தனது அறிக்கையை தற்போது இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.இதில் உலக நாடுகளுள் ஏற்கெனவே வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்ந்து வரும் இந்தியா, சமீபத்திய ரொக்கம் சார்ந்த பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கியது மற்றும் பழங்கால வரி முறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் ஆகிய இரண்டு முக்கிய துவக்க முயற்சிகள் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பெரும் வளர்ச்சியை அடையும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த Morgan Stanley அமைப்பின் பங்குச்சந்தை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ரிதம் தேசாய், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) டிஜிட்டல் மயமாக்கம் 50 முதல் 75 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது என்றும் 2026-27ஆம் ஆண்டுவாக்கில் இந்தியா உயர் நடுத்தர வருவாய் கொண்ட நாடு எனும் அந்தஸ்தை அடையும் என்றும் கூறினார்.

GDP வளர்ச்சி மட்டுமல்லாது 2028ஆம் ஆண்டில் இந்திய சென்செக்ஸ் 1 லட்சம் புள்ளிகள் என்ற அளவை கடக்கும் என்றும் தெரிவித்தார். 6.1 டிரில்லியன் டாலர்கள் மூலதனத்துடன் உலகின் டாப்-5 பங்குச்சந்தைகளுள் ஒன்றாக இந்தியா திகழும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசு தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு ஊக்கமளித்து வருகிறது, அடுத்த சில ஆண்டுகளில் மொபைல் மூலம் இணைய இணைப்பை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 915 மில்லியன் என்ற அளவை எட்டும், இதன் மூலம் நிதி சேவை பெருவது அதிகரிப்பதோடு, ஒளிவுமறைவற்ற பொருளாதாரம் சாத்தியம் ஆவதும் குறிப்பிடப்பட்டு கூறப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் சிறந்த செயல்பாடுமிக்க சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும் அந்த அமைப்பு மதிப்பிடுவதாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சமீபகாலமாக இந்தியப் பொருளாதாரம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த அறிக்கை நேர்மறையான கருத்துகளை தாங்கி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.