நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7–ந்தேதி வெளியாகும்!
மருத்துவ இளநிலை படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7–ந்தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17ல் நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வை எழுதினார்கள். நாடு முழுவதும் 497 நகரங்களில் நடந்த நீட் தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயித்து 341 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 95% பேர் தேர்வை எழுதினர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உட்பட 18 நகரங்களில் நடந்த நீட் தேர்வை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இம்மாதம் 21ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.தற்போது நீட் தேர்வு முடிவு வரும் செப்டம்பர் 7–ந்தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விடைக்குறிப்புகள் ஆகஸ்ட் 30–ந்தேதி வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் 7–ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து 2 நாட்களுக்குப் பிறகு என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நீட் தேர்வை நாடு முழுவதும் 15.44 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் 8.70 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றனர்.