September 29, 2021

இந்தியாவில் ஒருவரின் தொழிலை முடிவு செய்வதில் அவர் சார்ந்த சாதிக்குதான் இன்னும் முக்கிய பங்கு!

நம் நாட்டில் சர்வதேச அளவில் யாராவது ஏதாவது ஒரு விளையாட்டில் கோல்ட் மெடல் வாங்கினால் உடனே அவர் என்ன ஜாதி என்று கூகுளில் தேடும் போக்கு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் ஒருவரின் தொழிலை முடிவு செய்வதில் அவர் சார்ந்த ஜாதி இன்னும் முக்கிய பங்கு வகிக்கிறது என்னும் அதிர்ச்சி தகவல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலமாக தெரியவந்துள்ளது. அதிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து அந்த சாதியுடன் தொடர்புபடுத்தப்படும் தொழிலையே செய்யும் அவலமும் இதில் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

நம் இந்தியாவின் முதல் குடிமகன் என்று சொல்லப்படும் ஜனாதிபதிக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ராணுவம் இந்த பாதுகாப்பு படையை சிறப்பு பயிற்சியுடன் தேர்வு செய்து வருகிறது. இந் நிலையில் இந்த பாதுகாவலர்களை தேர்வு செய்வதில் ஜாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு அண்மையில் எழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பாதுகாவலர் ஆக முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது கவுரவ் யாதவ் என்ற ஹரியானவை சேர்ந்த நபர் கடந்த 2014 செப்டம்பர் மாதம், குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலராக விண்ணப்பம் செய்திருந்தார். எல்லா விதமான தேர்வுகளிலும் வெற்றிபெற்ற இவர் நேர்முக தேர்விலும் வெற்றிபெற்றார். ஆனால் கடைசியில் இவர் தேர்வு செய்யப்படவில்லை. இவர் ரிஜெக்ட் ஆனதையொட்டி இவருக்கு மத்திய அரசு அளித்த விளக்கத்தில், மூன்று ஜாதியினர் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலர் ஆக முடியும். ஜாட், ராஜ்புட் , ஜாட் சீக்கியர்கள் ஆகிய மேல் ஜாதியினர் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலர் ஆக முடியும். மற்ற ஜாதியினர் இதில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து கவுரவ் யாதவ் டெல்லி ஹைகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடுத்தார். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. சட்ட பிரிவு 14,15,16 ஆகியவற்றிற்கு எதிரான நடைமுறை இது. சாதி, இனம், மொழியையே வைத்து இவர்கள் பாகுபாடு காட்ட கூடாது என்று கூறியுள்ளார். கேள்வி எழுப்பினர் இந்த நிலையில் டெல்லி ஹைகோர்ட் தற்போது இதுகுறித்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அதேபோல் குடியரசுத் தலைவர் அலுவலகம், இந்திய ராணுவம், ராணுவ தேர்வாணையம், பாதுகாப்பு துறை ஆகிய அமைப்புகளுக்கு இதில் பதில் அளிக்க வேண்டும் என்றும் சம்மன் அனுப்பி உள்ளது.

இது ஒரு புறமிருக்க அண்மையில் நடந்த ஒரு கணக்கெடுப்பின் மூலம் விவசாயம் அல்லாத தொழில்களில் அதிகம் விரும்பப் படும் உயர்மட்ட தொழில்களில், தனியார் துறையின் நிறுவன மேலாளர், நிர்வாகிகள் போன்ற பணிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அல்லாத சாதியினர் ஆதிக்கம் செலுத்தி வருகிறாரகள். அதில் 93%- க்கு அதிகமான பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களே உள்ளனர். அதுவே அரசுத்துறை பங்களிப்பு உள்ள ஆசிரியர் மற்றும் செவிலியர் அல்லாத சுகாதாரத்துறைகளின் உயர்பணிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் குறிப்பிடத் தகுந்த அளவு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

உயர்தொழில்கள் என கருதப்படுபவற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் ஆசிரியர் பணிகளில் 8.9%, சுகாதாரத்துறை பணிகளில் 9.3% இருப்பதும் தெரியவந்துள்ளது. விவசாயம் அல்லாத மொத்த தொழிலாளர்களில் 14% பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாக உள்ள நிலையில், உயர் பணிகளில் அவர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. அதேநேரம் பழங்குடியினருக்கு உயர் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் உள்ளது என தெரியவந்துள்ளது.

நடுத்தர பணியாக கருதப்படும் காவல்துறை சார்ந்த பணிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவர்கள் 13.7% , பழங்குடியினத்தவர் 9.3% என்ற அளவில் இருக்கின்றனர். இந்தத்துறை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதில் போதிய பிரதிநித்துவம் அளிக்கப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது. எனினும் மத்திய உணவு திட்டத்தின் கீழ் உள்ள சமையலர் பணிகளில் அதிக அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உள்ளனர்.

உடல் உழைப்பு அதிகம் உள்ள, மிகவும் குறைவான பணியிடங்களாக கருதப்படும் பணிகளிலேயே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடி வகுப்பினர் இருப்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. இதனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தோல் தொழில் மற்றும் துப்புரவு பணிகளில் தான் அதிக அளவில் இருக்கிறார்கள்.

உதாரணமாக உத்திரபிரதேசத்தில் 46,000 தோல் தொழிலாளர்களில் 41,000 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இதையடுத்து ராஜஸ்தானில், 76,000 துப்புரவு தொழிலாளர்களில் 52,000 பேர் துப்புரவு தொழிலுடன் தொடர்புபடுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.