September 27, 2021

வஞ்சிர மீன்கள் மீதான காதலும் சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்களும்!

பெண்ணியம், ஆணியம் வரிசையில் இந்தக் கட்டுரையைப் பதிவிடக் கேட்டவர்களுக்காக மீண்டும் ஒருமுறை. புலம்பல் தொனியிலோ அறிவு சொல்லும் தொனியிலோ எழுதவேகூடாது எனத் திட்டமிட்டு எழுதியது. புரிதல் கோளாறுகள் இருந்தால் சின்னப் பையன் என மன்னித்துக் கடந்து விடுங்கள். இப்போது சொல்லும் விஷயத்தை நீங்கள் நேரிடையாகவும் புரிந்து கொள்ளலாம். மறைமுகமாகவும் பொருள் கொள்ளலாம் நண்பர்களே! அது உங்கள் விருப்பம் சார்ந்தது. கடந்த ஆறேழு வருடங்களாக ‘FISHIN’ என்ற பெயரில் கடை ஒன்று நடத்தி வருகிறேன். அங்கே சொல்லி வைத்தாற்போல வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்புவது வஞ்சிரம் மீனைத்தான். இத்தனைக்கும் பாரம்பரியக் கடலோடிகள் இந்த மீனைச் சக்கை என்று சொல்லி ஒதுக்கி விடுவார்கள். அவர்கள் சத்தானதாகவும் சுவையானதாகவும் கருதுபவை சிறிய மீன்களான அயிலா, சங்கரா, மத்தி, பாறை, வவ்வால், சூரை போன்றவற்றையே. நமக்கு எப்போதும் எல்லா விஷயங்களிலும் எல்லாமே பெரியதாக இருக்க வேண்டும். நோகாமல் நொங்கு தின்ன வேண்டும். நொங்கு தின்னலாம். நோகாமல் மீன் சாப்பிட விரும்பினால் எப்படி?

ஒருமுறை ஆங்கிலத்தில் வெளியாகும் நவநாகரீக பெண்கள் பத்திரிகை ஒன்றின் ‘பாவமன்னிப்பு’ பகுதியில் பெண் ஒருவர் கடிதமொன்றை எழுதியிருந்தார். அதில், ‘என்னுடைய கணவர் பெரிய மார்பகங்கள் குறித்த பித்துப் பிடித்து அலைகிறார். சிறிய மார்பகங்களைக் கொண்ட எனக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார். இந்தியர்களின் பொதுவான மனநிலையே பெரிதாக இருப்பதையும் விரைப்பாக இருப்பவற்றையும் எளிதாக விரும்பத் துவங்குகிறது. இங்கு எல்லா விஷயங்களையும் இந்த இரண்டிற்குள் அடக்கி விடலாம்.தோசை மொறுமொறுவென்று இருக்க வேண்டும். அயர்ன் செய்த சட்டை மொட மொடப்பாக இருக்க வேண்டும். மொறுமொறுவென்று உளுந்த வடை இருக்க வேண்டும், அப்படியே அது தயிரில் கிடக்கிறது என்றாலும் மொறு மொறுக்கென்று காராப் பூந்தி இருக்க வேண்டும்.

பிங்கர் ப்ரை நீளமாக நறுகென்று கடிக்கிற மாதிரி மொறுமொறுவென இருக்க வேண்டும். மொறுமொறுவென்கிற கேஎப்சி சிக்கனுக்கு அடிமை. சாண்ட்விச்சாகவே இருந்தாலும் க்ரிஸ்பியாக கடிக்கும் போது க்ரக் என சத்தம் வரும்படியாக டோஸ்ட் செய்திருக்க வேண்டும்… என பொதுவாகவே ‘விரைப்பாக இருக்கும்’ விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி எதிர்பார்க்கிறோம்.இந்த விரைப்பு மற்றும் பெரியதாக இருப்பதன் மீதான காதல் எந்தளவிற்கு அதன் எல்லைகளை விரித்திருக்கிறது என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது.

ஆண்களின் உளச்சிக்கல் பெண்களையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கு ஓராயிரம் உதாரணங்களைக் காட்ட முடியும். ஏற்கனவே நாயுடு ஹால்களில் பிராவிலேயே சிங்கிள், டபுள் ‘பேடுக’ளை வைத்தது போதாதென்று இப்போது ஜாக்கெட் தைக்கும் போதும் ‘பேடு’ வைத்துத் தைக்கத் துவங்கி விட்டார்கள். அப்படி தைத்துத் தருகிற டெய்லர்களுக்கு மார்கெட்டில் பயங்கர டிமாண்ட் என்பதும் ஆச்சர்யகரமான உண்மை.

இத்தனைக்கும் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்ணிற்கு இறுக்கமான பிரா அணிந்து கொண்டு இருப்பதால், எப்போதும் முதுகுவலி இருந்து கொண்டே இருக்கும். மாதவிடாய் காலங்கள் வலி மிகுந்ததாக இருக்கும். டிஷர்ட் போடுவதற்கு தர்மசங்கடமாக இருக்கும். பிரா இல்லாமல் இருப்பது சுகமான அனுபவமாக இருக்கும். ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி இருக்க முடியாதே? ஓடுவது என்பதைக் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. பிகினி அணிவது என்பது கனவில் மட்டுமே நினைத்துப் பார்க்கிற விஷயமாக இருக்கும். எப்போதும் பிறர் கண்ணை உறுத்துகிற மாதிரியே இருக்கும். திறந்த முதுகுடைய உடைகளை அணியவே முடியாது. துப்பட்டா கொண்டு மார்பை மார்பு காம்புகளை மறைப்பதே முழுநேர வேலையாக இருக்கும். அவர்களுக்குச் சரியான பிராவைத் தேர்ந்தெடுக்க கடைகடையாய் ஏறி இறங்க வேண்டியிருக்கும். பெரிய மார்பகம் மட்டுமே சுற்றத்தாரால் அவர்களது அடையாளமாய்ச் சுட்டப்படும் என பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களின் சிக்கல்களைக் கேட்டால், அதன் மீது பித்துக் கொண்டிருப்பவர்கள் பேடைக் கழற்றி எறிந்து விடுவார்கள். ஆனால் கேட்டால்தானே?

கொஞ்சம் இணைய வெளிகளில் அலைந்து பார்த்தால் இந்தவகை உளச்சிக்கல் வேறு என்னென்ன வகைகளிலெல்லாம் வெளிப்படுகிறது என்பதை நெருக்கத்தில் பார்க்கலாம். பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களைத் தேடுவதென்கென்றே பக்கங்கள் இருக்கின்றன. அது ஆங்கிலமாக இருந்தால், ‘பிக் பூப்ஸ்’, ‘பிக் டைட்ஸ்’ என்று தேடுகிறார்கள். மலையாளமாக இருந்தாலும் இவர்களின் எப்போதைய சாய்ஸும் ஷகிலா டைப்பாகத்தான் இருக்கிறது. கோயில் சிற்பங்களைக் கொஞ்சம் அண்ணாந்து பாருங்கள். பழங்கால இலக்கியங்களில் மார்பகங்களின் வகைகள் என ஒரு பெரிய லிஸ்ட்டையே போட்டிருக்கிறார்கள். சிலைகளில் பாருங்கள். அங்கும் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்ணிற்குத்தான் மிக முக்கியமான இடத்தைத் தந்திருக்கிறார்கள். சிறிய மார்பகங்கள் கொண்ட அரசியோ, அழகியோ இருந்திருக்கவே இல்லை என்கிற முடிவைத்தான் சிற்பங்களைப் பார்க்கும் போது எட்ட முடிகிறது.

அவ்வளவு ஏன்?இப்போதைய சினிமா கனவு நாயகிகளை லிஸ்ட் போட்டுப் பாருங்கள். அதில் பத்து பேரில் எட்டு பேருக்கு மேல் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்ணாக இருப்பார்கள். பழம் இலக்கியங்களில் பெரிய மார்பகங்கள் இப்படியெல்லாம் வெளிப்படையாக வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் இதை எழுதுவதே மிகப் பெரிய புரட்சி நடவடிக்கை போல புரிந்து கொள்ளப்படுவதை என்னவென்று சொல்வது? இந்த வகையான பெரிய மார்பகம் குறித்த பித்தால் அவதிப்பட்ட துறவி ஒருத்தரின் கதையை இந்தயிடத்தில் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

இடிந்தகரை நியாபகம் இருக்கிறதா உங்களுக்கு? அணு உலைக்கெதிரான போராட்டங்களெல்லாம் நடந்தனவே. மக்கள் கூட்டம் கூட்டமாக உண்ணா விரதமெல்லாம் இருந்தார்களே? அதே ஊர்தான். இந்தியாவிலேயே அங்கு மட்டும்தான் விசுவாமித்திரரருக்கு கோயில் இருக்கிறது. விசுவாமித்திரனின் தவத்தைக் கலைத்த மேனகை ஒரு பரதவ குலப் பெண் என்றும் ஒரு வாய்வழிக் கதை இருக்கிறது. சிறுவயதிலிருந்தே பால் சுறா மீன்களை உண்டு வளரும் பரதவ குலப் பெண்களுக்கு இயல்பிலேயே பெரிய மார்பகங்கள் அமைகின்றன. ஆக விசுவாமித்திரருக்கும்கூட இந்த பெரிய வகை மார்பகங்கள் குறித்த பித்துப் பிடித்திருக்கிறது என்ற முடிவிற்கு இதன் மூலம் வரலாம்.

விசுவாமித்திரரை மயக்கிய மேனகை எங்கள் பரதவகுலப் பெண்ணா என யாரும் போர்க்கொடி பிடித்துவிட வேண்டாம். அப்புறம் ஏன் இந்தியாவிலேயே இங்கு மட்டும் அவருக்குத் தனிக் கோயில் இருக்கிறது என்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.இந்தப் பித்து தற்காலம் வரை நீடிப்பதுதான் பிரச்னைக்கும் காரணம். இது போல கட்டுரைகள் எழுதப்படுவதற்கும் காரணம். மாருதி ஸ்விப்ட் வண்டியை உலகத்தில் எந்த இடத்திலும் சீந்தக்கூட இல்லை. ஆனால் இந்தியாவில் அந்த வண்டி பம்பர் ஹிட். காரணம் வேறொன்றுமில்லை. அதன் பின்புறம் பருத்து பெரியதாக இருக்கும் என்பதுதான் காரணம். நண்பர் ஒருத்தர் விரட்டி விரட்டி பலான படங்களைப் பார்ப்பவர். ஒருமுறை, எஃப் டிவியை பிடிபிடியென பிடித்துக் கொண்டிருந்தார். என்ன காரணமென்று அவரிடம் கேட்ட போது, “என்ன எழவோ. இவள்களெல்லாம் சாப்பிடுவாளுகளா இல்லையா? நெஞ்சே இல்லாம அலைஞ்சுக்கிட்டிருக்காளுக” என்றார். உலகளாவிய டிரெண்ட் இதுதான் என்பதை அவருக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது? அவர் ‘W’ என்று படம் வரைந்தால்கூட அதைக் குண்டாக வரையும் மரபணு கொண்டவர்களிடம் பேசிப் பயனில்லை என்பதால் நகர்ந்து விட்டேன்.

பொருளாதார உலகில்கூட சிறியதாக இருப்பதே சிறப்பு என வலியுறுத் துகிறார்கள்.இப்போது வஞ்சிர மீனையே எடுத்துக் கொள்வோம். மேகி நூடுல்ஸ் சர்ச்சையில் சொல்லிக் கொண்டிருந்த, ‘லெட் கண்டண்ட்’ என்பது பெரிய வகை மீன்களில் அதிகமாக இருப்பதாக லேட்டஸ்ட் ஆய்வுகள் சொல்கின்றன. சிறிய வகை மீன்களில் இந்த வகை பாதிப்புகள் குறைவாக இருப்பதால், மருத்துவர்கள் சிறிய வகை மீன்களையே அதிகம் சாப்பிடச் சொல்கிறார்கள். பெரியதாக இருப்பவற்றால் சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதைச் சொல்வதற்காக இந்த உதாரணத்தைச் சொல்கிறேன். பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் பலர் இறுக்கமான பிரா அணிவதால், தீராத முதுகு வலியால் அவதிப்படுவதை ஏற்கனவே முன்பே சொல்லியிருக்கிறேன். தவிர இன்னபிற சிக்கல்களையும் சொல்லிக் கேட்டு அதையும் சொல்லியிருக்கிறேன். ஆனால் தங்களது கணவன், தன்னைச் சுற்றியிருக்கிற பார்வையாள உலகத்திற்காக பெரியதாக இருப்பதை விரும்புவதாகச் சொன்ன அவர் அடுத்துச் சொன்னதுதான் அதிர்ச்சி ரகம்.

கடவுள் பூமிக்கு இறங்கி வந்து உன்னுடைய உடலில் ஒரு உறுப்பை கூட்டிக் குறைக்க வரம் தருகிறேன் என்று கேட்டால் என்ன சொல்லுவேன் தெரியுமா என்றார். என்ன என்று கேட்ட போது, “என்னுடைய மார்பகங்களை சிறியதாக வடிவமைக்கச் சொல்வேன்” என்றார். இதில் உள்ள உளச்சிக்கலைப் புரிந்துகொள்வதற்கு நாம் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்ணாக இருக்க வேண்டும். எனவே தயவுசெய்து நண்பர்களே வஞ்சிரம், பாறை என பெரிய வகை மீன்களை விரும்புவதை விட்டுவிட்டு மத்தி, சங்கரா போன்ற சிறியரக மீன்களையும் விரும்புங்கள். உண்மையில் அவைதான் உணவிற்குத் தகுந்தவை. சுவையிலும் அதை அடித்துக் கொள்ள வேறெதுவும் கிடையாது. தவிர எந்த விதத்திலும் அது உங்களுக்கு போரடித்துவிடாது. கைக்கு அடக்கமாக எப்போதும் ருசியைத் தூண்டும் மீன்களாக அவை இருக்கும் என்பது அனுபவப் பாடம்.

பெரியவை குறித்த பித்தும் விரைப்புத்தன்மை குறித்த கவலையும் உங்களை மட்டும் பாதிப்பதில்லை. இந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் அவை பாதிக்கின்றன என்பதையும் நினைவில் நிறுத்துங்கள். அதற்காக பெரிய மார்பகங்களே தேவையில்லை என்பதில்லை. இயல்பாய் அது இருந்துவிட்டுப் போகட்டும். அதன் மேல் உங்கள் கற்பனைகளையோ எதிர்பார்ப்புகளையே ஏற்றாதீர்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

உங்களது தேவையில்லாத மனச்சிக்கல்களுக்காக கண்ணகி போல் அதை பிய்த்து எறிந்து கொண்டிருக்க முடியாதல்லவா? புற்றுநோய் உள்ளிட்ட இன்னபிற நோய்க் காரணங்களுக்காக மார்பகங்கள் அகற்றப்பட்ட பெண்கள் மீதும் மையல் கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. ஒருவேளை வஞ்சிர மீன்கூட கடலுக்குள் இதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டி ருக்கலாம்.இலக்கியங்கள் தத்துவங்கள் எல்லாம்கூட இதையேதான் வேறுவேறு மொழியில் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்கிற வரிகளை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். நான் சொன்னதன் அர்த்தம் புரியும். விரைப்புத்தன்மை குறித்துப் பேசிக் கொண்டிருந்ததை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டோமே? சிறிய ரக அயிலா மீன்களைச் சாப்பிடுங்கள் சிறப்பாய் இருக்கும்.

சரவணன் சந்திரன்