October 16, 2021

நீளமான கொட்டாவி விடறவங்க அதீத புத்திசாலியாம்!- லேட்டஸ்ட் ஆய்வு முடிவு!

லொக்,,லொக்-ன்னு இருமலோ, ஹச்..ஹச்-சுப்பு தும்மலோ, அல்லது விக்கலெல்லாம் திடீரென்று நிகழும் உடலியல் நிகழ்வுகளுக்கு அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு. ஆனால், இந்த லிஸ்ட்டுலே சேர வேண்டிய , கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனாலும் ஒருவர் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார் என்பது காலத்தை பொறுத்து மாறுகிறது என்றும், சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கண்டறிந்த நிலையில் கோட்டாவி பற்றிய லேட்டஸ்ட் ஆய்வு முடிவைக் கேட்டால், கொட்டாவி வருவதை கொஞ்சம் பெருமையா ஃபீல் தோன்றும்.

brain oct 14

இந்த கொட்டாவி ஏன் ஏற்படுகிறது? கொட்டாவியின் உயிரியல் பொருள் என்ன என்பது குறித்து ஒரு பத்திருபது ஆய்வாளர்கள் தற்போதும் ஆய்வு செய்துகொண்டிருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு கருத்து இன்னும் எட்டப்படவில்லை. உதாரணமாக, வெப்ப நெறிமுறை கோட்பாட்டின்படி மூளையின் வெப்ப அளவு அதிகரிக்கும்போது கொட்டாவி தூண்டப்பட்டு மூளையானது குளிர்விக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. மேலும், கொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும்போது குளிரான காற்று உஸ்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப்படுகிறது என்கிறார்கள்.

இதுக்கிடையிலே நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆண்ட்ரூ காலப் உள்ளிட்டோர் நடத்திவரும் ‘பயாலஜி லெட்டர்’ எனும் ஆய்விதழில் சமீபத்தில் இதுபற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது. யூடியூபில் பதிவுசெய்யப்பட்டுள்ள வீடியோவில் எலி, பூனை, யானை, குரங்கு, சிம்பன்ஸி, மனிதன் உள்ளிட்ட 29 விலங்குகளின் கொட்டாவிக் காட்சிகள் உள்ளன. இதை ஆராய்ந்தபோது, மனிதக் குரங்கு, சிம்பன்ஸி போன்ற மனிதச் சாயல் விலங்குகள் ஏனைய விலங்குகளைவிடக் கூடுதல் நேரம் கொட்டாவி விடுவது தெரியவந்தது.

மனிதனின் கொட்டாவி சுமார் 6 நொடிகள் நீள்கின்றன என்றால், மிகச் சிறிய மூளையுடைய எலியின் கொட்டாவி 1.5 நொடிகள்கூட நீடிப்பதில்லை. அதேநேரத்தில், மனித மூளையின் எடைக்குச் சமமான மூளையைக் கொண்ட ஆப்பிரிக்க யானையின் கொட்டாவி, மனிதனைவிடச் சற்றே குறைவாக இருந்தது. கொரில்லா, ஒட்டகம், சிங்கம், குதிரை, ஆப்பிரிக்க யானை எல்லாம் மனிதனைவிடக் குறைவான காலமே கொட்டாவிவிட்டன.

ஆக, மூளையின் மேலே உயர்சிந்தனைப் பகுதி எனக் கருதப்படும் ‘கார்டெக்ஸ்’ பகுதியில் உள்ள மூளை செல்களின் எண்ணிக்கைக்கும் கொட்டாவியின் கால நேரத்துக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. 1,200 கோடி கார்டெக்ஸ் நியூரான் கொண்டுள்ள உடல் அளவு, கபாலம் அல்லது கீழ்த்தாடை அளவுகளுக்கும் கொட்டாவி விடும் காலத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் ஆராய்ந்தார்கள். ஆனால், அப்படி எந்தத் தொடர்பும் இல்லை. ஆக, சிக்கல் மிகுந்த சிந்தனையின் பிறப்பிடம் எனக் கருதப்படும் கார்டெக்ஸ் பகுதி நியூரான் எண்ணிக்கைக்கும் கொட்டாவி விடும் கால அளவுக்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்னரே சொன்னது போல் பொதுவாக, கூடுதல் வேலையின்போது மூளை வெப்பமடையும், அதனை குளிர்விக்கத்தான் கொட்டாவி வருகிறது எனும் கருத்து உடலியல் ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கிறது. வாயை அகலமாகத் திறந்து காற்றை உள்ளே இழுக்கும்போது, குளிர்ந்த ரத்த ஓட்டம் மூளைக்குப் பாயும் என்று அவர்கள் சொன்னார்கள். அதுவும் இந்த ஆய்வு முடிவுடன் இயைந்துபோகிறது. ஆக, கொட்டாவி விடுபவர்களை சிந்தனைச் சிற்பிகள் என்று சொல்லணுமாக்கும்!