January 29, 2023

‘தி லெஜெண்ட்’-விமர்சனம்!

முன்னொரு நாள் நிஜ நடிகர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, “இப்போதெல்லாம் ஒருவர் உடனடியாக நடிகனாகி விட வேண்டும் என்று நினைப்பது அதிகமாகி வருகிறது. அதற்கான அடிப்படை தகுதிகளைக் கூட தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.. முதலில் நடிகனாக முதலில் நால்வகைக் குணங்களை விட்டு விட வேண்டும். அவை வெட்கம், மானம், சூடு, சுரணை என்பன.
இது நடிகனாவதற்கு மட்டும் அல்ல,சமூகத்தில் வெவ்வேறு துறைகளில் வெற்றியாளராக வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவருமே இந்த நான்கு வகை குணத்தை இழக்க வேண்டும். அப்பொழுது தான் துணிச்சல்,தைரியம்,வீரம் என நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் குணங்கள் நம்மிடம் வரும் என்பது தனிக் கதை. .

சரி,இனி நடிகனாக முக்கியத் தகுதிகள் என்னவென்று கேட்கிறீர்களா?:

1. முகபாவனை

2. உடல்மொழி

3. குரல் மாறுபாடு

4. கற்பனை வளம்

5. ஞாபக சக்தி

6. ஆரோக்கியமான உடல்

7. கலங்காத மனம்

8. படைப்பாற்றல் திறன்

9. எதையும் உள்வாங்கும் திறன்

என்ற ஒன்பது வகையான தகுதி உள்ளவர்களே உலகில் தலைசிறந்த நடிகராக வலம் வருகின்றனர் என்பதில் ஐயமில்லை. மேற்கண்ட ஒன்பது தலைப்புகளில் ஐந்து வகையிலாவது முறையான பயிற்சி செய்பவனே நடிகன் ஆவான்” என்று சொன்னது இன்னமும் நினைவில் இருக்கிறது. ஆனால் தற்போது கோடிக்கணக்கில் பணத்தை மட்டும் இன்வெஸ்ட் செய்து தன்னையும் ஒரு நடிகன் என்று நம்ப வைக்கும் விதத்தில் வந்திருக்கும் படமே ‘ லெஜெண்ட்’.

அதாவது இண்டர்நேஷனல் பேமஸ் சயிண்டுஸ்டான டாக்டர் சரவணனை(லெஜண்ட் சரவணன்) ஆன்டிபயாடிக்ஸ் துறையில் புரட்சி செய்தவர்,. தன் மக்களுக்காக கிராமத்தில் இருந்தே வாழ்க்கையை ஓட்டி வருகிறார். அச்சூழலில் சுகர் கம்பளையண்டில் அவதிப்பட்டு வந்த சரவணனின் நண்பர்(ரோபோ ஷங்கர்) இறந்துவிடவே, அந்த சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டிபிடிக்க முடிவு செய்கிறார். ஆனால் சரவணனின் முந்தைய ஆராய்ச்சிகளால் பாதிக்கப்பட்ட ஃபார்மா மாஃபியாவுக்கு இது பிடிக்கவில்லை. அதனால் சுமன், ராகுல் தேவ் உள்ளிட்டோரை வைத்து அவருக்கு தனிப்பட்ட முறையில் இழப்பை ஏற்படுத்தி சரவணனின் ஆராய்ச்சியை நாசம் செய்ய முடிவு செய்கிறார்கள். இதை எல்லாம் தாண்டி சரவணன் சாதித்தாரா என்பது தான் லெஜெண்ட் கதை.

நாயகனான அண்ணாச்சித் தாத்தா அருள் சரவணன் என்ற வயசாளிக்கு இது முதல் படம் என்பதால் பதற்றத்துடனே காணப்படுகிறார். சினிமாவுக்கான முகப்பாவனைகள் சுத்தமாக எடுபடவில்லை. சகல சீன்களுக்கும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வந்து போகிறார். படத்தில் இரண்டு கதாநாயகிகள் ஊர்வசி ராவ்டேலா, கீத்திகா, இவர்களை தவிர வரும் பிரபு, விவேக், ரோபோ ஷங்கர், யோகிபாபு உள்ளிட்ட அனைவருமே தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர். அதில் குறையில்லை, ஆனால் எந்தவொரு கதாப்பாத்திரமுமே மனதில் நிற்கவில்லை, வலுவாக இல்லாமல் என்னமோ ஆங்காங்கே தலையை காட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மோசலே மோசலு பாடல் ஹிட் ரகம். பின்னணி இசை படத்திற்கு பிளஸ். அதேபோல் அவரது டிரேட் மார்க் இசை ஆங்காங்கே படம் முழுவதும் பரவி உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஒரு பிரம்மாண்ட படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்துள்ளார். படம் முழுவதும் கலர்ஃபுல்லாக அமைந்து பார்ப்பவர்களுக்கு விருந்து படைத்துள்ளது.

இவ்வளவு பிரமாண்டாக அதிலும் உலகமெங்கும் விரவி பரவிக் கிடக்கும் சுகர் பிரச்னை தொடங்கி மெடிக்கல் மாபியா உள்ளிட்ட சமூகத்துக்கு தேவையான விழிப்புணர்வு கருத்தை கதைக் கருவாக கொண்டு உருவாக்கிய படத்தின் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அக்கறைக் காட்டி இருந்தால் இந்த லெஜெண்ட் பாஸ் மார்க் வாங்கி இருப்பான்..

பெட்டர் லக் – நெக்ஸ்ட் டைம் சரவணா!

மார்க் 3/5