February 6, 2023

முதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்!

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற விகிதத்தில் முன்னிலை பெற்றது. இந்த போட்டியில் தனது பெரிய பங்களிப்பை கொடுத்து இருந்தார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. 76 பந்துகளில் 92 ரன்களை குவித்தார் அவர். ஆட்ட நாயகன் விருதை பாண்ட்யா பெற்றார்.

ஆட்டநாயகன் விருதினை பெற்ற பின் பேசிய பாண்ட்யா, இந்தியாவுக்காக விளையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அணியின் பந்துவீச்சாளர் நடராஜன் எளிமையான பின்புலத்தில் இருந்து வந்தவர். அவரது கதை அனைவருக்குமே ஒரு முன் மாதிரி .ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது ஆட்டத்தில் வெற்றி பெற அதிக சிரத்தை எடுக்க வேண்டி இருக்கும்” என கூறினார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி கிராமம் தான் நடராஜனின் சொந்த ஊர்.. நடராஜனின் பெற்றோர்கள் இருவருமே தினக்கூலி தொழிலாளிகள். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மேல் அதீத ஆர்வம் கொண்ட அவர், ஜெயப்பிரகாஷ் என்பவரின் வழிகாட்டுதலுடன், சென்னைக்கு கிளம்புகிறார். கிளப் மேட்ச், டிவிஷன் மேட்ச்சில் சிறப்பாக விளையாடிய நடராஜன், தனது வாழ்க்கை இலட்சியமான ரஞ்சி டிராபிக்கும் தேர்வானார். பிறகு TNPL-ல் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இவருக்கு ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிட்டியது.

இப்படி ஒவ்வொரு படியாக மேலே ஏறி வந்த நடராஜன், தனக்கு கிடைத்த சம்பாத்தியம் மூலம், சொந்தமாக கான்க்ரீட் வீடு கட்டியுள்ளார். அதோடு தனது கிராமத்தில் கிரிக்கெட் கனவோடு இருக்கும், இளைஞர்களுக்காக கிரிக்கெட் அகாடமி ஒன்றையும் கடந்த 2017ஆம் ஆண்டு நிறுவி நடத்தி வருகிறார். இதுகுறித்து பேசும் நடராஜன், எனது யார்க்கர் சீக்ரெட் எல்லாம், டென்னிஸ் பால் தானே தவிர வேறு எதுவுமில்லை என அலட்டிக்கொள்ளாமல் பதில் அளிக்கிறார்.

இந்நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் தங்கராசு நடராஜன் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று அறிமுகமானார். சர்வதேச போட்டிகளில் முதன் முதலாக இந்திய அணிக்காக களமிறங்கியுள்ள நட்ராஜன், சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் தன் வசம் திருப்பியுள்ளார். கடந்த இரண்டு ஆட்டங்களாக முதல் 25 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய ஓப்பனர்களின் விக்கெட்டை வீழ்த்தாமல் இருந்த இந்திய பவுலர்களுக்கு இடையில், அதற்கு தீர்வு கொடுக்கும் விதமாக இந்தப் போட்டியில் ஆறாவது ஓவரில் லபுஷேன் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்.இது நடராஜனின் முதல் சர்வதேச விக்கெட் ஆகும். அதனை தொடர்ந்து 48-வது ஓவரில் ஆஸ்டன் அகர் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் இன்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜனுக்கு தமிழகத்தில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

நாம் வாழ்க்கையில் முன்னேறி செல்வதற்கு திறமை மட்டுமே போதுமானது, என்பதற்கு சேலத்து சிங்கத்தின் வாழ்க்கை ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.. இக்காரணத்தால் நடராஜனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பல்வேறு தமிழக தலைவர்களும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.