October 19, 2021

வரவிருக்கும் பட்ஜெட்டில் எல்லா டிரெயின் கட்டணமும் எகிறப் போகுதாம்!

கடந்த 10 ஆண்டுகளில் டீசல் விலை உயர்வு உட்பட பல்வேறு காரணங்களை காட்டி ரயில் கட்டணம் பலமுறை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இவை தவிர சூப்பர் பாஸ்ட் கட்டணம், சேவை வரி, கல்வி சேவை வரி, தூய்மை பாரத வரி, விவசாய நல வரி என மறைமுக கட்டண உயர்வுகள் தனி. போதாக்குறைக்கு, சில்லரை பிரச்னையை தீர்ப்பதற்காக என்று கூறி 1, 2, 3, 4, 6, 7, 8, 9 ரூபாய் வசூலிப்பது அகற்றப்பட்டு, கட்டணங்கள் 5 ரூபாய் மடங்காக நிர்ணயிக்கப்பட்டன. இந்நிலையில், சிறப்பு ரயில்கள் இயக்கும் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு பிரீமியம் சிறப்பு ரயில், தட்கல் பிரீமியம் சிறப்பு ரயில், தட்கல் சிறப்பு ரயில், சுவிதா சிறப்பு ரயில், சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் என பல மடங்கு கட்டண ரயில்கள்தான் சிறப்பு ரயில்கள் என்றாகிவிட்டன. இந்த ரயில்களில் ஒவ்வொரு 20 சதவீதத்திற்கும் கட்டணம் பல மடங்கு உயர்ந்து கொண்டே செல்லும். சிறப்பு ரயில்களே பல மடங்கு கட்டண ரயில்கள்தான் என்றான பிறகு வேறு வழியில்லாமல் பயணிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இப்படி எவ்வளவு கட்டணம் உயர்த்தினாலும் பயணிகள் பயன்படுத்தாமல் இருப்பதில்லை என்று கண்டுகொண்ட ரயில்வே நிர்வாகம், அடுத்தாண்டில் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்டில் ஆர்டினரி பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிகிறது.

rail nov 8

இது குறித்து ரயில்வே அமைச்சக வட்டாரத்தினர், “குறிப்பிட்ட சில ரயில் வழித்தடங்களில், சில சிறப்பு ரயில்களில், காலம், பயணிகளின் தேவை போன்ற அம்சங்களை வைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும், ‘பிரீமியம் கட்டண’ முறை அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், இத்திட்டத்தால், ரயில்வேத் துறையின் வருவாய் எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை.

ரயில் கட்டண விகிதம் மற்றும் ரயில் கட்டணத்தை திருப்பித் தருவது தொடர்பான விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அப்போதும் பயணிகள் ரயில் பிரிவில் ஏற்படும் இழப்புகளை குறைக்க முடியவில்லை. நடப்பு நிதியாண்டின், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் சரக்கு ரயில் போக்குவரத்து வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, சரக்கு ரயில் கட்டணத்தை இதற்கு மேலும் அதிகரிப்பது சரியாக இருக்காது என, ரயில்வே துறை கருதுகிறது.

இதனால், வருவாயை அதிகரிக்க, பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்துவதே சிறந்த வழியாக இருக்கும் என்ற முடிவுக்கு ரயில்வே வந்து உள்ளது. இதனால், அடுத்தாண்டு சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்டில், பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. வருவாயை அதிகரிக்க எல்லா ரயில்களிலும் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படும்”என்று தெரிவித்துள்ளன.