September 27, 2021

எக்ஸ்க்யூஸ் மீ மோடிஜி – என் டவுட்டை எப்போ க்ளியர் பண்ணுவீங்க – கெளதமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து, கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்துக்கு, அவரின் மவுனம் பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக நடிகை கவுதமி மறுகடிதம் எழுதியுள்ளார். ஜெயலலிதாவின் திடீர் மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த முந்தைய கடிதத்துக்கு ஏன் பதிலளிக்கவில்லை என்று வினவியிருக்கிறார்    கெளதமி.

gowthami feb 5

கெளதமியின் கடிதம் இதோ

நமது முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவைக் குறித்து சில கேள்விகளை, இந்தியப் பிரதமர் மோடியிடம் திறந்த மடலின் வழியாகக் கேட்டிருந்தேன். அக்கடிதம் டிசம்பர் 8, 2016 அன்று என் வலைப்பக்கத்தில் வெளியானது. அது மோடியின் ட்விட்டர் பக்கத்துக்கும், பிரதமர் லுவலகத்துக்கும் அனுப்பப்பட்டது.

என்னுடைய கடிதத்தில் நான் வெளிப்படுத்தியிருந்த வலி மற்றும் சந்தேகம், நாடு முழுக்க எதிரொலித்ததுதான். அக்கேள்விகள் உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் மனதிலும் எழுந்தது. இந்தியா முழுக்க உள்ள தமிழ்நாட்டு மக்களின் வேதனையை நானும் எதிர்கொண்டேன். இந்த விவகாரத்தை பொது ஊடகத்தின் வழியே பிரதமரிடம் தெரிவித்திருந்தேன். கடிதத்தின் முக்கியத்துவத்தையும், அதில் பொதுமக்கள் சம்பந்தப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.

இன்றைய நவீன உலகை வரவேற்கும் அரசியல் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். குறிப்பாக நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சமூக ஊடகங்களை திறந்த மனதோடு ஆதரிப்பவர். தகவல் தொடர்பை விரைவாகவும், எளிதாகவும் மாற்ற டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்.

இந்தியாவின் சாமான்ய மக்களும் தொழில்நுட்பத்தையும், ஊடகங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிரதமர் வலியுறுத்தி வருகிறார். அவரின் முயற்சிகளை விளக்க ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன என்றாலும் எல்லோருக்கும் ஏற்கெனவே தெரிந்த விஷயத்தை நான் திரும்பத்திரும்பக் கூற விரும்பவில்லை.

இத்தனைக்குப் பிறகும், கடிதம் நேரடியாக அனுப்பட்டும், தேசிய ஊடகங்கள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் செய்தி பரவியிருந்தும், கடிதம் பிரதமர் அலுவலகத்தை அடையவில்லை. இதை நாம் எப்படி எதிர்கொள்வது? ஓர் அரசியல் தலைவராக, அவரது ‘மக்களின் குரலைக் கேட்பேன்’ என்று உறுதிமொழி அளித்த, உண்மையான மாற்றத்தைக் கொண்டு வருவதாகச் சொன்னவருக்கு, மக்களின் நியாயமான, சரியான கேள்வி கேட்கப்படவில்லை என்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நேர்மையான நோக்கத்தோடும், ஆழ்ந்த வருத்தத்தோடும் ஒரு குடிமகள் கேட்ட கேள்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லையா?

கடிதம் எழுதிய நாளில் இருந்து, நான் திடமாகவும், உறுதியாகவும் இருந்தேன். என் பிரதமர் மீதும், நாட்டு மக்களின் மீதான அவரின் பொறுப்பின் மீதும் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். ஒட்டுமொத்த நாடும் அவருக்கு ஒன்றுதான் என்ற அவரின் வார்த்தையின் மீது நம்பிக்கை இருந்தது. பிறகு ஏன் இந்த மறுப்பு?

மத்திய அரசின் கவனத்தைப் பெற, தென்னிந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு தகுதி இல்லையா? ஆமாம், மத்திய அரசு அதிகாரிகளும், மற்ற உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ‘அம்மா’ மருத்துவமனையில் இருந்தபோது வந்து பார்த்தனர். ஆனால் எங்களின், தமிழக மக்களின் முறையீடுகளுக்குப் பதில் கிடைத்ததா? எங்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுப்பதும், ‘அம்மா’வுக்கான நியாயத்தை மறுப்பதும் தமிழ்நாட்டையே வஞ்சிப்பது, மறுப்பதாகும். உங்களின் அக்கறையின்மையை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வற்புறுத்தப்பட வேண்டும்?

கடந்த பல மாதங்களாக என்னுடைய மாநிலம் முன்னெப்போதும் இல்லாத வகையில், காயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘அம்மா’வின் ஆழ்ந்த துக்ககரமான மறைவு எங்களிடத்தில் அழிக்கமுடியாத வடுவை ஏற்படுத்திச் சென்றுள்ளது. ‘வார்தா’ புயல் எங்களைப் புரட்டிப் போட்டது. ஒவ்வோர் இயற்கைச் சீற்றத்தின்போதும், தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறோம். ஆதித் தமிழ்க் கலாச்சாரமான ஜல்லிக்கட்டுக்காக, உத்வேகம் அளிக்கும் வகையில், அமைதியாகவும் சரியான முறையிலும் தமிழக மக்களால் போராட்டம் நடத்தப்பட்டது. இதை ஒட்டுமொத்த உலகமும் உற்றுக்கவனித்தது. தங்களின் அழுகைக்குரல் கேட்கப்படாமல் போகிறதே என்று கவலையில் விவசாயிகள் தங்களின் வாழ்க்கையையே முடித்துக்கொள்ளும் அவலமும் தொடர்ந்து நடக்கிறது.

இத்தைகைய பேரழிவுகளிலும், நிகழ்வுகளிலும் நாங்கள் காத்துக்கொண்டே இருக்கிறோம். மத்திய அரசிடம் இருந்து உரிய பதில் மற்றும் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கிடக்கிறோம். அரசு மற்றும் அரசியலின் உள் செயல்பாடுகளை மதிக்கிறோம். ஆனால், எல்லாவற்றைக் காட்டிலும் நேரம் முக்கியம் அல்லவா?

ஜனநாயக நாட்டின் அடிப்படை மீதும், அதன் குடிமக்களின் அக்கறை மற்றும் பாதுகாப்பிலும் ஏனிந்த கனத்த மவுனம்? நாட்டின் முக்கிய அரசியல் தலைவரும், இந்தியாவின் முதல் முக்கிய மாநில முதலமைச்சருமான ஜெயலலிதா பதவியில் இருக்கும்போதே மரணம் அடைந்ததில் மறைக்கப்பட்ட ரகசியமும், தெளிவற்ற தன்மையும் எதைக் காட்டுகிறது? தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் குடிமகன்களாக இந்த விவரங்களை அறிந்துகொள்வதில் முழு உரிமையும் எங்களுக்கு இருக்கிறது.

ஒரு ஜனநாயக அரசு அதன் மக்களுக்கு அளிக்க வேண்டியது, தார்மீக நம்பிக்கையும் பாதுகாப்புமே. கோடிக்கணக்கான மக்கள் நேசித்த, மரியாதை செலுத்திய தலைவர் ‘அம்மா’. எங்களின் வேதனைக்கும் வலிக்கும் மரியாதை அளிக்க வேண்டும். பதில்கள் அளிக்கப்பட வேண்டும். உண்மை உரைக்கப்பட வேண்டும்.

நம்முடைய அரசாங்கங்கள் நம்மைக் காது கொடுத்துக் கேட்க என்ன செய்ய வேண்டும்? அவர்கள் எப்போது நமக்குப் பதிலளிப்பார்கள்? அவர்களின் கவனத்தை ஈர்க்க மாநிலத்தின் தெருக்களில் ஒவ்வொரு குடிமகனும் கூடவேண்டுமா? சரியான வழிமுறையை மேற்கொள்ள போராட்டங்களை அரசுகள் பார்க்க வேண்டுமா? எந்த மனிதத்தின் அடிப்படையில்?

ஜெய் ஹிந்த்!

கவுதமி.