June 21, 2021

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் இந்திய அரசின் போக்கு மோசம்!- ரகுராம்ராஜன்!

‘‘இந்தியாவில் நடந்து முடிந்த சுதந்திரப் போராட்டத்துக்குப்பின் அந்நாடு சந்திக்கும் மிகப்பெரிய சவால் இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பல இடங்களில், பல்வேறு காரணங்களால் மக்களுக்கு அரசு உதவி செய்யவில்லை என்பதுதான் கசப்பான் உண்மை” என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன் தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். டெல்லியில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் கல்வி மையம் சார்பில் நடந்த காணொலி சந்திப்பில் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் , ‘‘கொரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவுக்கு கொடுத்துள்ள மிகவும் வேதனையான நேரமிது. சுதந்திரத்துக்குப்பின் இந்தியா சந்தி்க்கும் மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சமீபத்திய வாரங்களில் தினசரி 3 லட்சத்திற்கும் மேல் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பவர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கையை மகாராஷ்டிரா அரசு வழங்கியிருக்கிறது. ஆனால் பல இடங்களில் அரசுகள் இப்படி செயல்பட முடியாமல் இருந்திருக்கிறது.

கொரோனா முதல் அலை இந்தியாவில் தாக்கும்போது, போடப்பட்ட லாக்டவுனால் (பொது மக்கள்) பொருளாதாரத்தில் மிகப்பெரிய சவாலான சூழல் எழுந்தது. ஆனால், இப்போது பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் சவால்கள் எழுந்து உள்ளன. நாம் முன்னேறும் போது, சமூக ரீதியான பங்கும் இனி இருக்கும். கொரோனா வைரஸின் மிகப்பெரிய பாதிப்புகளில் ஒன்று, பல்வேறு இடங்களில், பல்வேறு காரணங்களுக்காக மக்களுக்கு உதவ அரசு இல்லாமல் இருந்ததைப் பார்க்க நேர்ந்தது. பல இடங்களில் அரசால் மக்களுக்கு உதவ முடியவில்லை, அரசு யந்திரம் வேலை செய்யவில்லை.

கொரோனா பெருந்தொற்று முடிந்தபின் நாம் சமூகத்தை நோக்கி கேள்வி கேட்காவிட்டால், மிகப்பெரிய சோகத்தை இந்த பெருந்தொற்று விட்டுவிட்டுச் செல்லும். இந்தப் பெருந்தொற்று கடந்து செல்லும்போது, அரசாங்கங்கள் கூட தோல்வி அடைந்து, நம்பிக்கையற்ற சூழலுக்கு செல்லும் என நான் நம்புகிறேன். இந்த பெருந்தொற்று காலம் நாம் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது, எந்த ஆணும், பெணும் தனித்து தீவில் விடப்படவில்லை. சீர்திருத்தம் என்பது மறைமுகமாக இருக்காமல், வெளிப்படையாக இருக்க வேண்டும். குறு,சிறு, நடுத்தர துறைகளுக்கு விரைவாக திவால் செயல்முறையை அரசு அறிவிக்க வேண்டும்” என்று சொன்னார்.