January 27, 2023

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்த நாளின்று!

2002 ஆம் வருஷம் குஜராத் ஸ்டேட்டை நரேந்திரமோடி ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

அக்காலக் கட்டத்தில் குஜராத்தில் இருந்து அயோத்தி ராமர் கோயில் யாத்திரைக்கு விஷ்வ இந்து பரிஷித் என்கிற இந்து இயக்கத்தினர் சென்று விட்டு சபர்மதி அதிவிரைவு தொடர்வண்டியில் 1700 பேர் அகமதாபாத்க்கு திரும்பி வந்து கொண்டு இருந்தாங்க. இதே பிப்ரவரி 27ந்தேதி இரவு 8 மணியளவில் குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் தொடர்வண்டி வந்து நின்றது.

அப்போ அந்த ரயிலின் 4 பெட்டிகளை சுற்றி கூட்டமாக நூற்றுக்கணக்கானவர்கள் நின்று கொண்டு ஏதேதோ. கோஷமிட்டனர். அப்போ அந்த ரயிலின் எஸ்5 என்கிற ரயில் பெட்டி திடீரென தீ பிடித்து எரிஞ்சுது. அடுத்தடுத்து 3 பெட்டிகள் இருந்தன. அந்த பெட்டியில் கரசேவகர்கள் இருந்தனர். அந்த ரயிலை சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல் தீயை அணைக்காமல், அதிகரிக்க வைச்சுது. இதில் ரயிலுக்குள் இருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர். அதில் 14 குழந்தைகள், 27 பெண்கள் அடக்கம். இந்த படுகொலையால் இந்தியா மட்டுமல்ல உலகமே அதிர்ந்தது.

ரயிலுக்கு வைக்கப்பட்ட இந்த ‘தீ’க்கு காரணம் இஸ்லாமியர்கள் என்கிற தகவல் வேக வேகமாக குஜராத்துக்குள் பரப்பப்பட்டது. இந்தத் தகவல் தெரிந்தும் குஜராத் காவல்துறையின் கண்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மூடச்சொன்னாய்ங்க. அவர்களும் மூடிக்கொண்டார்கள்.

ஆனாலும் இந்த வன்முறை வெறியாட்டம் கோத்ராவில் தொடங்கி மாநிலம் முழுவதும் பரவ தொடங்கியது. அன்றிருந்து அடுத்த மூன்று மாதம் குஜராத் முழுவதும் ரத்தவாடை வீசியது. மே மாதம் இறுதியில் கலவரம் அடங்கிய பின் அரசு அறிவிப்பின்படி 790 முஸ்லிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். இதைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றனர் சமூக ஆர்வலர்கள்.

இந்த கலவரம் முடிஞ்ச பின்னாடி வழக்கம் போல், நூற்றுக்கணக்கான உண்மை அறிக்கைகள், விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்களின் நேரடி காட்சிகள் செய்திகளாகவும், ஆவணப்படங்க ளாகவும், சினிமாவாகவும், புத்தகமாகவும், நாவலாகவும் வெளிவந்துச்சு.. தமிழில் கூட சினிமாவா கூட காண்பிச்சாங்க.

அக்கோர தாண்டவத்தின் போது கர்ப்பினி பெண் ஒருவரின் வயிற்றை கிழித்து அவள் வயிற்றில் இருந்த சிசுவை வெளியே எடுத்து எரித்துக் கொன்றார்கள். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டாங்க. பல்வேறு பெண்களை கொலை செய்து வீசினார்கள். தடுக்க வந்த இஸ்லாமிய ஆண்களும் வெட்டி வீசப்பட்டார்கள். இப்படி எண்ணற்ற குரூரங்கள் இந்த கலவரங்களின் போது நிகழ்த்தி முடிக்கப்பட்டன.

இவை அனைத்துக்கும் அப்போது ஆட்சியில் இருந்த குஜராத் முதல்வரான நரேந்திரமோடி குற்றம்சாட்டப்பட்டார். அதோடு, இந்த கலவரத்தை திட்டமிட்டு உருவாக்கியது இந்துத்துவா அமைப்புகள் தான் என்பது அம்பலப்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் குஜராத் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, கட்டாய ஓய்வு பெற்றுக்கொண்ட பல உயர் அதிகாரிகள் இதனை வெளிப்படையாக கூறினார்கள்.

ஆனால் ரயில்வே துறை அமைத்த விசாரணை கமிஷன், கோத்ரா ரயில் எரிந்தது ஒரு விபத்து என்றது. காவல்துறையின் சிறப்பு புலனாய்வுத்துறை இது இஸ்லாமியர்களின் திட்டமிட்ட வன்முறை என்றது. நானாவதி கமிஷன், பானர்ஜி கமிஷன் போன்றவை வெவ்வேறு முடிவுகளைக் கூறின. இப்படி ஆளாளுக்கு ஒரு முடிவை அறிவித்து மக்களை குழப்பின.

அதே சமயம் வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு விசாரணையின் முடிவில் 2011 பிப்வரி 22ந்தேதி இந்த கோத்ரா கலவரத்துக்கு காரணமென 31 நபர்களை குற்றவாளிகளாக்கியது நீதிமன்றம். இவர்கள் சிறையில் சொகுசாக வாழ்ந்தார்கள். கலவரதைத் தடுக்காத அரசையும், அதன் நிர்வாகத்தையும் நீதிமன்றம் புனிதமாக்கியது.

இப்படி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் அதனைத் தொடர்ந்து குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் தாக்கமும் 15 ஆண்டுகளைக் கடந்து இன்றும் சிறுபான்மையின மக்கள் மனதில் இருப்பது மட்டுமல்லாது பெரும்பான்மை மக்களின் மனசாட்சியையும் உலுக்கிக்கொண்டே இருக்கின்றன என்பது மட்டுமே நிஜம்.

கட்டிங் கண்ணையா!