October 18, 2021

ஜி. எஸ்.டி. வரி லேட்டஸ்ட் லிஸ்ட்!

நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டுவரப்படுகிறது. ஜூலை 1-ந் தேதி முதல், இதை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. பொருட்கள் மீது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகையான ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்களை எந்த சதவீத வரிவிகிதத்தில் சேர்ப்பது என்று முடிவு எடுக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் தொடங்கியது.

அதில், 6 பொருட்களை தவிர, 1,205 பொருட்களுக் கான வரி விகிதம் முடிவு செய்யப்பட்டது. அதாவது பால், பருப்பு, பனை வெல்லத்திற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சோப்பு பேஸ்ட் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் 18 % வரிவிதிப்பு வரம்பிற்கு கீழ் கொண்டு வரப்பட உள்ளன. தற்போது 11.7 % உள்ள நிலக்கரிக்கு இனி 5 % மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். காலணிகள், பெல்ட் உள்ளிட்டவை 28 % வரி விதிப்பு வரம்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன.

சிறிய ரக பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் 28 % வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. மேலும் அத்தைகய சிறிய ரக பெட்ரோல் கார்களுக்கு 1 % செஸ் வரியும், டீசல் கார்களுக்கு 3 % செஸ் வரியும் நிர்ணயிக்கப்பட உள்ளன.

ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா, சுமார் 1,200 பொருட்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன என்றார்.

பொருட்களும் வரி விதிப்பு விவரமும்

பட்டியலிடப்பட்டுள்ள 1200 பொருட்களில் எத்தனை சதவீத பொருட்களுக்கு எந்த மாதிரியான வரி விதிப்பு என்பது குறித்த விவரம்

7% பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து வரி விலக்கு

14% பொருட்களுக்கு 5 % வரி

17 % பொருட்களுக்கு 12 % வரி

43% பொருட்களுக்கு 18 % வரி

19% பொருட்களுக்கு 28 % வரி

மொத்தத்தில் 81% பொருட்களுக்கு 18 % குறைவாகவே வரி

இந்த வரி விதிப்பு விகிதங்கள், தற்போதைய விவாதங்களின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த கூட்டத்தில் மேலும் விவாதிக்கப்பட்டு, தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நுகர்வோர் அதிகம் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் 18 % வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என வரி விதிப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.