இந்தப் படம் தியேட்டரில் ஓடாது. – குரங்கு பொம்மை விதார்த் சோகம்!

இந்தப் படம் தியேட்டரில் ஓடாது. – குரங்கு பொம்மை விதார்த் சோகம்!

நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய குரங்கு பொம்மை திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று (செப்டம்பர் 7) சென்னையில் நடைபெற்றது. இதில் விதார்த், பாரதிராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் விதார்த் பேசும் போது, “படத்தின் வெற்றி எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. இதற்கு முன் வெளியான என்னுடைய ‘குற்றமே தண்டனை’ படம் நன்றாக இருந்தாலும், அதற்கு விளம்பரங்கள் என்னால் செய்ய முடியவில்லை. ஆனால், இந்த குரங்கு பொம்மை படத்துக்கு நல்ல புரோமோஷன் இருந்தது. படம் நன்றாக உள்ளது என பாராட்டுகள் தொடர்ந்தாலும் நாளை நிறைய படங்கள் வெளியாகவுள்ளதால் இந்தப் படம் தியேட்டரில் ஓடாது. அதுதான் வருத்தமாக உள்ளது. நல்ல படங்களுக்கு தியேட்டர்காரர்களும் ஆதரவு தர வேண்டும். அதை பத்திரிகையாளர்கள் நீங்களும் வலியுறுத்த வேண்டும்” என்று பேசினார்.

மேலும், உணர்ச்சிவசப்பட்டு பேசிய விதார்த், இதற்குமுன் தான் தயாரித்த படங்களினால் ஏற்பட்ட நட்டத்தை அடைக்க தனது காரைக்கூட விற்றதையும், பாரதிராஜா தனது அடுத்த படத்தில் தன்னை நடிக்க ஒப்பந்தம் செய்து கொடுத்த சம்பளத்தில் தான் கடனை அடைத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்..

இதைத்தொடர்ந்து பேசவந்த பாரதிராஜா, “விதார்த் இந்த மாதிரி மேடையில ஒப்பனா பேசாதப்பா.. நமக்குள் இருக்கும்  பொருளாதார கஷ்டங்களை வெளியில் காட்டாத வரைக்கும் தான் இந்த உலகம் நம்மை மதிக்கும்.. அதனால் எப்போது உள்ளங்கையை மூடி வைத்ததுபோல நிறைய விஷயங்களை வெளியில் சொல்லாமலேயே இருந்துவிடு” என அறிவுரை கூறினார். மேலும் பேசிய அவர், “”இயக்குநராக இருந்த நான், இப்போது நடிகனாக மாறியிருக்கிறேன். நான் நடித்த ஓம், படைவீரன் படங்கள் சீக்கிரமே வரயிருக்கிறது. இப்போது வந்துள்ள குரங்கு பொம்மை படத்தில் விதார்த் தந்தையாக நடித்துள்ளேன். இந்தப் படத்தை நித்திலன் மிகவும் எதார்த்தமாக எடுத்திருக்கிறார்.

அதனால் ரசிகர்களால் பாராட்டப்பட்டதோடு அவர்களின் ஆதரவினால் அரங்கு நிறைந்த காட்சிகளாக இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் புதிய படங்கள் வருவதால் குரங்கு பொம்மை படத்தை சில தியேட்டர்களில் இருந்து தூக்கி விட்டார்கள் என்றும், சில தியேட்டர்களில் காட்சிகளைக் குறைத்து விட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிற ஒரு படத்தை நிறுத்துவது, தூக்குவது அநாகரீகமான செயல். இது போன்ற விஷயங்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கவனம் செலுத்த வேண்டும்

இப்போதுள்ள இளைஞர்கள் திறமைசாலிகள், தொழில் நுட்ப அறிவோடு வந்து சினிமாவில் சாதிக்கிறார்கள். அவர்களோடு போட்டி போடுவதற்காக; என்னை நான் ‘அப் டேட்’ செய்து கொள்கிறேன். நான் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவன். நான் இந்த துறைக்கு வந்து நாற்பதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நான் வந்த போது இருந்த சினிமா வேறு மாதிரி இருந்தது. இப்போது வேறுமாதிரி சினிமா இருக்கிறது. அப்போது இந்தளவுக்கு தொழில் நுட்ப வளர்ச்சி இல்லை. அதைப் புரிந்து கொள்வதற்கான பக்குவமும் அப்போதில்லை. ஆகவே, எனது முதல் படமான ’16வயதினிலே’வில் எடிட்டிங்கில் சிறு சிறு குறைகள் இருந்தது” என்றார்.

error: Content is protected !!