கமலின் பிக் பாஸ் ஷோ வீட்டில் நடக்கும் அது இது எது? – எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்!

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவுக்குள் வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. வட இந்திய சேனல்களின் சூப்பர் சிங்கர், க்ரோர்பதி, ஜோடி, கலக்க போவது யாரு? நிகழ்ச்சிகளை தமிழ் சேனல்கள் காப்பி அடித்த போதே தமிழுக்கு இது செட்டாகுமா? என்ற சந்தேகத்துடன் தான் இதை விட்டு வைத்தார்கள். ஆனால் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு என்று மேற்கத்திய கலாசாரங்கள் சிறிது சிறிதாக பயணித்து சென்னையையும் ஆக்கிரமிக்க இங்கு உள்ளவர்களுக்கு பிக் பாசையும் ஏன் விட்டு வைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டுக்கு வந்தது. முதல் நிகழ்ச்சியில் ஓவியா, காயத்ரி ரகுராம், ஆரவ், ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, ரைசா வில்சன், பரணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஜல்லிக்கட்டு போராளி என்ற பெயரில் நுழைந்த ஜூலி யால் பரபரப்பு ஏற்பட்டது. பரணி நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் காட்சிகள் முதல் சர்ச்சை ஆனது. காரணம் இதேபோல் ஒரு சம்பவம் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நடந்ததை வீடியோ வுடன் சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். நிகழ்ச்சி முழுக்க திட்டமிட்டு செயல்படுத்தப் படும் நிகழ்ச்சியா என்ர சந்தேகம் ஏற்பட்டது. அடுத்து ஜூலியின் ஆடை சர்ச்சையானது. பின்னர் ஓவியாவின் கொக்கு நொட்ட பாடல், ஆரவ் – ஓவியா மருத்துவ முத்தம், ஜூலியின் 2 நிமிட வீடியோ காட்சி, ஓவியாவில் காதல் தோல்வி தற்கொலை முயற்சி என பிக் பாஸ் நிகழ்ச்சியை வைரலாகவே வைத்துக்கொண்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஒளிபரப்பானது. முதல் நிகழ்ச்சி அளவுக்கு சர்ச்சைகள் இல்லாவிட்டாலும் கூட ஏற்கனவே பஞ்சாயத்தில் இருந்த தாடி பாலாஜியையும் அவரது மனைவி நித்யா பாலாஜியையும் உள்ளே அனுப்பி சண்டை போட வைத்தனர். யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, மகத், ஷாரிக் என்று ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியை பார்க்கவே முடியாத அளவுக்கு ஆபாசமாக மாற்றினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியே முழுக்க காதல், ஆண் பெண் ரிலேஷன்ஷிப் கும்மாளத்துக்கான நிகழ்ச்சியாக மாறியது. ஓவியா – ஆரவ் காதலுக்கு கிடைத்த வரவேற்பு ஒருவேளை நிகழ்ச்சியை நடத்துபவர்களை இப்படி மாற்றி இருக்கலாம். ஆனால் இது தமிழ்நாட்டு இளைஞர்கள், இளைஞிகளிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பிக் பா ஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன்.23ந்தேதி தொடங்கிய நிலையில், கடந்த வாரம் வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்‌ஷி, அபிராமி என 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி தொடங்கி யது முதலே மற்றவர்களை கோர்த்து விடுவது, வம்பு இழுப்பது, சீண்டுவது என்று நிகழ்ச்சிக்கான கண்டெண்டுகளை சரியாக கொடுத்தவர் வனிதா விஜயகுமார். எல்லோரது வெறுப்பையும் சம்பாதித்தார். அதாவது கடந்த சீசன்களில் ஜூலி, காயத்ரி ரகுராம், ஐஸ்வர்யா தத்தா போன்றோர் செய்த வேலையை இவர் சரியாக செய்தார். இவர் வெளியேறிய பின்னர் நிகழ்ச்சி எந்த பிரச்சினை யும் இல்லாமல் சுமூகமாக சென்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். நிகழ்ச்சி சுமூகமாக சென்றால் அது டிஆர்பியை பாதிக்கும். பிக் பாஸ் வீட்டுக்குள் கலவரங்கள் வெடித்தால் தான் அது சமூகவலைதளங்களிலும் எதிரொலிக்கும். டிஆர்பியை அதிகரிக்கும். எனவே நிகழ்ச்சியில் நாடகங்கள் மிகவும் முக்கியம்.

இதை உணர்ந்தவர்கள் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற கஸ்தூரியை உள்ளே கொண்டு வந்தனர். அதுவும் பெரிதாக கிளிக் ஆகாததால் மீண்டும் வனிதாவை நிகழ்ச்சிக்குள் அழைத்து வந்தனர். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை சரியாக உணர்ந்த வனிதா தனது சிண்டுமுடி வேலையை தீவிரமாக்கினார். அதன் விளைவாக மதுமிதா தற்கொலை முயற்சி வரை சென்று வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தான் கமலை சுற்றி சர்ச்சைகள் சுழன்று அடிக்கின்றன. ஏற்கனவே சரவணன் வெளியேற்றப்பட்டதும் சர்ச்சையானது. பேருந்தில் பெண்களை உரசி இருக்கிறேன் என்று சரவணன் சொன்னபோதே கண்டிக்காத பிக் பாசும் கமல் ஹாசனும் அந்த விவகாரம் வெளியில் பெரிய பிரச்சினையான பின்னர் அவரை கண்டித்து வெளியில் அனுப்பினார்கள்.

சரவணன் விஷயத்திலாவது காரணம் வெளியில் தெரிந்தது. ஆனால் மதுமிதா விஷயத்தில் காரணமே தெரியவில்லை. இவர் ஓகே ஓகே உள்பட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர்.
நிகழ்ச்சியின் விதியை மீறி தனக்கு தானே தீங்கு விளைவிக்கும் விதமாக நடந்துக் கொண்ட மதுமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பாட்டார். மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மதுமிதா கையில் கட்டுடன் கமல்ஹாசனை சந்திக்கும் காட்சிகள் வெளியாகின. நடிகர் சேரனும், “ நடிகை மதுமிதாவின் இந்த செயல் தவறான எண்ணம். அவர் எடுத்த முடிவு தவறான முடிவு” என்று ஆவேசமாக சொன்னார். கமல்ஹாசன் மதுமிதாவிடம் உங்களுடைய தியாகம் அஹிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மதுமிதா தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன?

பிக் பாஸ் வீட்டில் கேப்டன்ஸி டாஸ்க்கில் வெற்றி பெற்று கேப்டன் ஆன மதுமிதா, தனியார் ஆப்-டாஸ்கில் நடந்த விவாதத்தில் பேசிய வார்த்தைகளை வைத்து ஹவுஸ்மேட்ஸ் அவரை டார்கெட் செய்து, இழிவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார். கோபத்தின் உச்சத்தில் மதுமிதா எடுத்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்தாலும், பிக் பாஸ் வீட்டின் விதியை மீறி தனக்கு தானே தீங்கு விளைவித்துக் கொள்ளும் விதமாக நடந்துக் கொண்ட மதுமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட காட்சிகள் எதுவும் காட்டப்படவில்லை.

தனது கருத்தை ஆழமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இப்படி ஓர் முடிவை ஏற்க நேர்ந்ததாக மதுமிதா கூறினாலும், இது பார்வையாளர்களுக்கும், மதுமிதாவை ஆதரிப்பவர்களுக்கும் தவறான முன்னுதாரணமாக அமைந்ததாக கமல்ஹாசன் தெரிவித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மதுமிதா, ஹவுஸ்மேட்ஸை சந்திக்க விருப்பமா என்றதற்கு ஆம் என்றார். பின்னர் அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸை சந்தித்த மதுமிதா, சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர மற்றவர்களின் முகத்தை பார்க்கக் கூட விரும்பவில்லை என்றார். இந்த வீட்டில் டைட்டில் வின்னராகும் தகுதி இந்த இருவருக்கு மட்டுமே இருப்பதாகவும், தனது கோபத் தினை வெளிப்படுத்தினார். பின்னர் கமல் மேடைக்கு வந்த உடனே மதுமிதாவை அழைத்தார். அவரும் கையில் கட்டுடன் வந்து கமலின் காலில் விழுந்து வணங்கிவிட்டு, அவர் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போதும் மதுமிதா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு போனது ஏன் என தெளிவாக விளக்கப்படவில்லை.

சக போட்டியாளர்கள் தன்னை அவமானப்படுத்தியதாகவும், கேப்டன் பதவிக்கு தான் தகுதியான வள் அல்ல என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் மதுமிதா கூறினார். தன்னை நிரூபிக்க வேறு வழியே இல்லாமல் தான், தன்னை தானே வருத்திக்கொள்ளும் அளவுக்கு சென்றதாகவும் மது தெரிவித்தார்.

தான் சிறுவயதில் இருந்து ஆசைப்பட்ட விசயம் குறித்து அந்த டாஸ்க்கில் பேசியதாகவும், ஆனால் அதற்கு சக போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார். எனவே, தான் பேசியதை நிரூபிக்க வேண்டி, இந்த தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு எதுவும் புரியவில்லை. அப்படி என்ன மதுமிதா பேசினார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்தது. இந்நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கான முக்கிய காரணம் என்ன என்பதை, நடிகை நளினியின் மகள் கூறியதாக ஒரு பதிவு இணையத்தில் வைரலானது. அதில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவரிடம் மது தொலைப்பேசியில் பேசியதாகவும், அப்போது மது தெரிவித்த கருத்துகள் தான் இவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, அந்த டாஸ்கில் பேசிய மதுமிதா, “வருண பகவான் கூட கர்நாடககாரரோ. கொஞ்சம் கருணை காட்டி இங்கேயும் மழை கொடுக்கலாமே”, எனும் கருத்து கூறியதாக நளினி மகள் தெரிவித்துள்ளார். இதை கூறியதற்காகத் தான் சக போட்டியாளர்கள் மதுவை மிக மோசமாக நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை முயற்சி பற்றி மதுமிதா கூறுவது என்ன?

பிக் பாஸ் 2வது சீசனிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது நான் இன்னொரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. பிறகு மூன்றாவது சீசனில் அழைக்கும்போது இந்த முறை வாய்ப்பை இழக்க வேண்டாம் என நினைத்து சம்மதித்துவிட்டேன். பிக் பாஸ் வீட்டில் எனக்கு முதன் முதலில் பிரச்சினை ஏற்பட்டது ஷெரீனுடன் தான். நாம் தமிழ் ரசிகர்களுக்காக தான் நிகழ்ச்சி நடத்துகிறோம். ஆனால் ஷெரீன், அபிராமி என யாருமே தமிழ் பேசவில்லை. உடைகளும் நமது கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி அணியவில்லை. இதை தான் நான் கேட்டேன். ஆனால் அதை எனக்கே திருப்பிவிட்டனர். கவின் யாரையும் மதிக்கமாட்டார். பெண்களுடன் மட்டும் தான் சுத்துவார். ஒரு அக்கா மாதிரி இருந்து அவனுக்கு புத்திமதி சொன்னேன். ஆனால் அவன் அதை கேட்கவே இல்லை. எனக்கு குள்ளச்சி என பெயர் வைத்தது கவின் தான். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. சாண்டி விவகாரத்திலும் எனக்கு அது தான் நடந்தது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நியாயமான மனிதர் சேரன் மட்டும் தான். லாஸ்லியாவை அவர் மகளாக தான் நினைக்கிறார். ஆனால் லாஸ்லியா சேரனை அப்படி பார்க்கவில்லை. முதலில் அவள் நன்றாக தான் இருந்தாள். ஆனால் கவினுடன் சேர்ந்த பிறகு அவளது மனம் மாறிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் ஆண், பெண் பேதம் இருக்கிறது. அங்கு உள்ள ஆண்கள், பெண்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். கடந்த 55 நாட்களாக இதுதான் தொடர்கிறது. அபிராமி சிறைக்கு சென்ற விவகாரத்திலும் இது தான் நடந்தது. அதை நான் தட்டி கேட்டதற்காக தான் என்னிடம் சண்டைக்கு வந்தனர்.

கடந்த வியாழக்கிழமை தனியார் ஆப் டாஸ்கில் நான் என்னுடைய கருத்தை சொன்னேன். வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் தான் போலிருக்கு. நமக்கு மழையே கொடுக்க மாட்டேங்கிறார். தயது செய்து வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று கூறினேன். இதற்கு ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கும் போது எப்படி நீ இப்படி ஒரு கருத்தை கூறலாம். இது ஒன்றும் உன்னுடைய சமூக வலைதளம் கிடையாது என ஷெரீன் கத்தினார். இதற்கு நானும் பதில் அளித்தேன். தனியார் ஆப் ஒரு சமூக வலைதளம் தானே. அதில் என்னுடைய கருத்தை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டேன். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. நீ என்ன எப்ப பார்த்தாலும் தமிழ் பெண் என சொல்ற. தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டனர். அதனால் தான் நான் எனது கையை அறுத்துக்கொண்டு எனது வாதத்தை நிரூபித்தேன். நான் கையை அறுத்துக்கொண்ட போது எனக்கு ஆதரவாக இருந்தது சேரனும், கஸ்தூரியும் தான். வேறு யாரும் என்னிடம் வரவில்லை. இனி பிக் பாஸ் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டேன்’. இவ்வாறு மதுமிதா தெரிவித்துள்ளார்.

மதுமிதா மீது வழக்கு

மதுமிதாவின் இந்த பேட்டி மூலம் தமிழகத்துக்கு ஆதரவாகவும் கர்நாடகா தண்ணீர் தரவேண்டும் என்று பேசியதே சர்ச்சைகளுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இது அரசியல் விவகாரம் என்று டிவி சேனல் காட்டவில்லை. ஆனால் வெளியில் வந்த மதுமிதா மீது தற்கொலை மிரட்டல் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தமிழ் நாட்டு மக்களிடம் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. டிஆர்பிக்காக நிகழ்ச்சியில் சண்டையை மூட்டி விடுவது, கலாசாரத்துக்கு சற்றும் பொருந்தாத வகையில் திட்டமிட்டு நிகழ்ச்சியை நடத்துவது என பிக் பாஸ் மீது பல்வேறு புகார்களை முன்வைக்கிறார்கள்.

தமிழ்நாட்டு ஆட்சியை பிடிக்க விரும்பும் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்களை சென்று அடையும் ஒரு சாதனமாக பார்க்கிறார். ஆனால் அது அவருக்கு பாதகமாக மாறிவிடுமோ என்ற பரிதாப நிலை தான் ஏற்பட்டுள்ளது.

-ஆர். கிருத்திகா