புதுவை முதல்வர் தர்ணா தற்காலிகமாக ஒத்தி வைப்பு!
யார் யாரிடம் மோதுவது? என்ற ஈகோ பிரச்னையில் இருந்த புதுவை கவர்னர் கிரண் பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி இடையே ஏற்பட்ட நான்கரை மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் ரோட்டில் அமர்ந்து நான்கைந்து நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளார் நாராயணசாமி.
மாநில அரசுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் கவர்னர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும், 39 மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டுமென வலியுறுத்தி புதுச்சேரியில் நேற்று 6வது நாளாக முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டம் தீவிரம் அடைந்ததால், டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துபு துச்சேரி திரும்பிய கிரண்பேடி, முதல்வர் மற்றும் அமைச்சர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். தலைமை செயலகத்தில்பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாராயனசாமி கூறினார். அதனை கிரண் பேடி ஏற்கவில்லை. எனவே, அமைச்சர்களுடன் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார். இதில் ஒருசில நிபந்தனைகளை தளர்த்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இத்தகவல் ராஜ்நிவாசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் கவர்னர் மாளிகைக்குள் பேச்சுவார்த்தைக்காக சென்றனர். சரியாக 5.05 மணிக்கு பேச்சு வார்த்தை தொடங்கியது. இதில் அனைத்து செயலர்கள், தலைமை செயலர்கள் மற்றும் கவர்னரின் செயலர், முதல்வரின் செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர். கவர்னரின் ஆலோசகர் தேவநீதிதாசும் கூட்டத்தில் கலந்து கொண்டார். கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை இரவு 9.30 மணியளவில் நிறைவடைந்தது.
அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நாராயணசாமி, “ஏஎப்டி, சுதேசி, பாரதி மில்களுக்கு அமைச்சரவை எடுத்த முடிவின்படி தொழிலாளர்களுக்கு தன் விருப்ப ஓய்வு திட்டத்தை நிறைவேற்றுவது, ஏஎப்டி மில் சி யூனிட்டை நடத்துவது போன்றவற்றை கவர்னர் ஏற்றுக் கொண்டார். முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவித்தொகைகள் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.அரிசியின் விலை அடிக்கடி மாறுவதால் பணமாக கொடுப்பதற்கு பதிலாக அரிசியாக வழங்க வேண்டும் என்பதையும் பரிசீலனை செய்வதாக அறிவித்தார். கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருக்கு ஏலம் விட்டு கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையும், தொழிலாளர்களுக்கு சம்பளமும் வழங்க பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். துணைநிலை ஆளுநரின் அதிகாரம் குறித்து தெளிவாக பதில் அளிக்காததால் மக்கள் மன்றத்தில் வைப்பது என நானும், அமைச்சர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் அமர்ந்து பேசினோம். இதில் ஒருமித்த கருத்தாக தற்காலிகமாக இந்த தர்ணா போராட்டத்தை ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டது”என்று நாராயனசாமி தெரிவித்து உள்ளார்