February 7, 2023

திராவிடத்தை கீழிறக்கி, சனாதன இந்துக் கட்சியை மேலேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை!

திமுகவின் தொடக்க வாழ்க்கை, வசை பாடுதலில் தொடங்கியது. காமராசரை, தன் முதல் எதிரியாக வைத்து, சகட்டு மேனிக்கு அவரை ஆபாசமாக விமர்சித்து, அன்றைய கரை வேட்டி கட்டியவர்களை மக்கள் கிஞ்சித்தும் மதிக்காமல் செய்து கொண்டது. முதன்முதலில் பொதுக் கூட்டங்களில் கெட்ட வார்த்தைகளை உபயோகித்த கட்சியும் திமுகவேதான். வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், வண்ணை ஸ்டெல்லா போன்றவர்களின் ஆபாசப் பேச்சுகளை திமுக உறுப்பினர்கள் இரவெல்லாம் பொதுக் கூட்டங்களில் கேட்டு மகிழ்வார்கள்.

சினிமா எனும் ஊடகம் அவர்களை பெரிதாக வளர்த்து விட்டது. அண்ணா, கருணாநிதி போன்றோர் ஆட்சியைக் குறி வைத்து காய்களை நகர்த்தினர். எம்ஜிஆர், எஸ்எஸ்ஆர் போன்றோரின் சினிமா கவர்ச்சியை, நன்கு பயன்படுத்திக் கொண்டனர். போதாக் குறைக்கு 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரில் ரயில் நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை தார் பூசி அழித்தார்கள். இத்தனை மாயைகளினால் திராவிடம் என்னும் தமிழுக்கு எந்த ஒரு பந்தமும் இல்லாத நேர்ரேட்டிவ்வை உருவாக்கி, 1967 இல் ஆட்சியைப் பிடித்தார்கள்.

ஆட்சி கைக்குள் வந்ததும், ஒன்றியம்,வட்டம், மாவட்டம் எனப் பேயாட்டம் ஆடினார்கள். எந்த ஒரு அரசு அலுவலரையும் தங்கள் காலடிக்குள் வைக்கலாம் என்று நடத்திக் காட்டினார்கள். ரௌடியிசம் வளர்த்தார்கள். கள், சாராயம் குடியை அறிமுகப் படுத்தினார்கள். பொய்யான தேர்தல் வாக்குறுதிகளைத் தந்து மக்களை வழக்கம் போல ஏமாற்றினார்கள்.

பிராமண எதிர்ப்பை முன் நிறுத்தினார்கள். திக வின் பூணூல் அறுப்பை அனுமதித்தார்கள். ஊழல் செய்தார்கள். 1972 தேர்தலிலும் வென்ற போது மமதை தலைக்கேறி, திராவிடம் என்ற நேர்ரேட்டிவ் சொல்லை பல விதங்களிலும் புகுத்தினார்கள். ‘நீராரும் கடலுடுத்த’ எனும் மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலை கவனமாக எடிட் செய்து அதில் வந்த ‘ஆரியம், திராவிடம்’ என்ற வரிகளில் இருந்து ஆரியம் எனும் வார்த்தையை அழித்து எழுதி ‘இதுதான் தமிழ்த்தாய் வாழ்த்து’ என்று திணித்தார்கள்.

ஊழல் வளர்ந்து, எம்ஜிஆரைப் பகைத்து, பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் போயும் கூட புத்தி வரவில்லை திமுகவிற்கு. 1989 தேர்தலில் எம்ஜிஆர் இல்லாத மாநிலத்தில், பிரிந்து கிடந்த அதிமுகவிற்கு எதிராக வென்று, அடங்கா ஊழலில் திளைத்து 1991 இல் ஆட்சி கலைக்கப் பட்டு பதவி இழந்தார்கள். மீண்டும் ஒரு பார்ப்பனப் பெண்ணால் பதவி பறி போய் மாறி மாறித்தான் ஐந்தாண்டு ஆட்சியைப் பிடிக்க முடிந்தது!

அதிமுக ஆட்சி காலத்தில் தெய்வ நிந்தனைகள் இல்லை. திக வீரமணி உட்பட கறுப்புச் சட்டைகள் அடங்கி ஒடுங்கியே நின்றன. அரசுப் பணியாளர்கள் ஆசிரியர்கள் தங்களது திமுக அபிமானத்தை வெளிக்காட்ட முடியாமல் அழுத்தி வைத்திருந்தார் அம்மையார்! ஆனால் இடைப்பட்ட காலத்தில் இரு தலைமுறைகள் மாறியதை திமுக கவனிக்கவில்லை. தகவல் தொழில் நுட்பம் மாறியதை திமுக கவனிக்கவில்லை. சமூக வலைத்தளங்கள் அரசியலைத் தீர்மானிப்பதை கவனிக்கவில்லை. இந்த இரண்டு தலைமுறை இடைவெளியில் என்ன நடந்தது?

மக்களுக்கு இறைவனின் பால் பெரு நாட்டம் தோன்றியது. முதல்வரின் வீட்டிலேயே ஒரு ஆன்மீகம் வளர்ந்தது. மக்கள் கோவில்களுக்குக் கூட்டம் கூட்டமாய்க் குவிந்தார்கள். உண்டியலில் காசு கொட்டியது. ஏன் இந்தி படிக்கக் கூடாது என்ற கேள்வியை விட, ஏன் படிக்க விடாமல் தடுக்கிறீர்கள் என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். பதவி என்பது உங்கள் குடும்பத்திற்கு மட்டும்தானா, கட்சியில் வேறு யாரும் தகுதியானவர் இல்லையா எனக் கேட்கத் தொடங்கி விட்டனர். திமுகவின் தோழமைக் கைத்தடிகள் கோவில் சிற்பங்களை ஆபாச பொம்மைகள் என்று வர்ணித்த போதும், ஆண்டாளை அவமதித்தபோதும், கோவில்களை உடைப்போம் என்ற போதும், திருப்பதி தெய்வத்தை விமர்சித்த போதும் பொங்கி எழுந்தார்கள். ‘அவள் ஒரு படி தாண்டா பத்தினியுமல்ல, நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல’ என்று ஆபாசமாகப் பேசியத் தலைவனை ஏன் தலையில் வைத்துக் கொண்டாடுகிறீர்கள் எனக் கேட்கிறது இன்றைய தலைமுறை!

சுபவீ செட்டியார் போன்ற கொண்டையை மறைக்க முடியாத சாதி வெறியர்கள் பார்ப்பணன் பூணூலை அறுப்பதை எழுத்தாளர் பிரபாகரன் தேவர் போன்றவர்கள் ‘பூணூல் மேல் கை வைத்துப் பார., உன் மீசையை வெ*ட்டுகிறேன்’ என பகிரங்கமாக சவால் விடும் அளவிற்கு இந்தத் தலைமுறை திராவிட அரசியலைத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளது. வருடத்திற்கு 4000 படங்கள் வெளியாகும் இந்நாட்டில், திரௌபதி, RRR, சீதாராமம், காந்தாரா, பாஹுபலி, பொ.செ. போன்ற இந்து மதம் சார்ந்த திரைப் படங்கள் மெகா வெற்றி பெறுகின்றன. இப்படங்களின் அடி நாதம் இந்து மதக் கோட்பாடுகள்.

இது போன்ற இன்னும்சில படங்கள் வந்தாலே போதும். திராவிடம் தூக்கி எறியப்படும். காரணம், பல்லாயிரம் காலங்களாக மக்கள் இறை மீது கொண்டுள்ள நம்பிக்கையிலேயே திமுக கை வைக்கிறது. காலம் மாறி விட்டதை திமுக உணரவில்லை. சில்லறை கூட்டணிக் கட்சிகளால் திமுகவிற்கு தீராத கறை படிந்துள்ளதை திமுக கவனிக்க மறுக்கிறது. எந்த சினிமா ஏணி இந்த சமுதாயத்தை இரண்டு தலைமுறைகள் முன் திராவிடக் கட்சிகளை ஏற்றி விட்டதோ, அதே ஏணி திராவிடத்தை கீழிறக்கி, சனாதன இந்துக் கட்சியை மேலேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை!