நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.2 இல் இருந்து 2.0 ஆக சரிவு!

நாட்டில் அனைத்து முக்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் அவர்களின் குழந்தை பெறும் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் குறிப்பிடப்பட்டு அதற்கான காரணத்தையும் கூறியுள்ளது.

கடந்த 1992-93ஆம் ஆண்டு முதல், நாட்டின் திட்டமிடலுக்கான கொள்கைகளை வகுப்பதற்காக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது. 2015-16இல் நான்காவது ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், கடந்த 2019-21 இடையே இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது ஆய்வு நடத்தி, அதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

இதில், நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.2 இல் இருந்து 2.0 ஆக சரிந்துள்ளது. இது, ஒரு பெண் சராசரியாக எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார் என்ற எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படுகிறது. கடந்த 1992-93 முதல் தற்போது வரை சராசரி கருவுறுதல் விகிதம் 40 சதவிகிதம் சரிந்துள்ளது. இது, 3.4 இல் இருந்து 2.0 ஆக குறைந்துள்ளது.

இதேபோல அனைத்து சமூகங்களிலும் பெண்கள் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதிகபட்சமாக முஸ்லிம் பெண்களின் கருவுறுதல் விகிதம் நான்காவது ஆய்வைக் காட்டிலும் 9.9 சதவிகிதம் சரிந்துள்ளது. அதாவது, 2.62 இல் இருந்த இந்த எண்ணிக்கை 2.36 ஆக குறைந்துள்ளது. ஆனாலும், சராசரி கருவுறுதல் விகிதத்தில் மற்ற சமூகங்களைக் காட்டிலும் முஸ்லிம்கள் தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 1992-93இல் இருந்து முஸ்லிம்களின் சராசரி கருவுறுதல் விகிதம் 46.5 சதவிகிதமும், இந்துக்கள் விகிதம் 41.2 சதவிகிதமாகவும் குறைந்து, முறையே முதல், இரண்டாம் இடத்தில் உள்ளனர். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர். சராசரி கருவுறுதல் விகிதம் சரிவுக்கு காரணம் பெண்கள் படிப்பறிவைப் பெறுவதைக் காட்டுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.