December 7, 2022

கண்ணீர் விட்டுக் கதறும் இந்த நாடகத்திற்குப் பின்னால் தேர்தல் என்ற மிகப் பெரிய அரசியல்!

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு…!

இரண்டு நாட்களாய் உங்கள் கட்சிக்காரர்கள் உங்கள் மீது திடீர் பாசத்தையும் உங்களுக்காக தடாலடி போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.. நீங்கள் கூட நா தழுதழுக்க பேசியதாகக் கேள்விப்பட்டோம்..காரணம் அறிந்து நாங்களும் வேதனைப் போட்டோம்..யாரொருவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் தனிமனித தாக்குதலையோ பெண்களை ஆபாசமாக பேசுவதையோ எங்களைப் போன்றவர்கள் உடனடியாக கண்டித்து வந்திருக்கிறோோம்.ன் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். இனியும் அத்தகைய பேச்சுகளை அனுமதிக்கப் போவதில்லை என்பதும் உறுதி.

அதுபோலத்தான் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ. ராசா பேச்சையும் நாங்கள் கண்டிக்கிறோம்…. இப்படியான பேச்சுக்கள் ஆரோக்கியமான அரசியல் பேச்சு அல்ல என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன். அதேநேரத்தில் உங்களுக்கு ஒரு சில விஷயங்களை நான் நினைவுபடுத்தவும் கடமைப்பட்டிருக்கிறேன்… கடந்த சில மாதங்களுக்கு நீங்கள் காவடி தூக்கி கொண்டிருக்கின்ற பிஜேபி தலைமை பீடத்தின் ஆர் எஸ் எஸ் தலைவர் ஆடிட்டர் குருமூர்த்தி  உங்களையும் உங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களையும் ஆண்மை அற்றவர்கள் என்று ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.. இன்றைக்கு தடாலடி ஆர்ப்பாட்டம் நடத்தும் உங்கள் கட்சிக்காரர்கள் இதுவரை ஒரு சிறு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை என்பதை முதலில் நினைவூட்டுகிறேன். வாய்க்கு பெரிய பூட்டாய் போட்டு சாவியை குருமூர்த்தியிடமே கொடுத்து விட்டீர்கள்.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் இப்போது நீங்கள் தேர்தல் உடன்பாடு கண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் , அவரது மகன் அன்புமணி இருவரும் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் உங்களையும் உங்கள் கட்சியையும் பேசிய பேச்சு கொஞ்சமா நஞ்சமா? பாட்டாளி மக்கள் கட்சியின் அன்றைய தலைவர் காடுவெட்டி குரு அவர்கள் உங்கள் கட்சியின் தலைவி ’’அம்மா’’ ஜெயலலிதா அவர்களை பற்றிப் பேசிய வீடியோ ஆடியோவை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். கேட்டுப்பாருங்கள்.. அப்போவெல்லாம் பொங்கி எழுந்து போராட்டம் நடத்த மறந்து விட்டீர்கள் போலும்,! தற்போது உங்கள் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பேச்சுக்களையும் அனுப்பி வைக்கிறேன் உங்கள் கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டி உட்கார்ந்து அந்த அரசியல் அறிவுபூர்வமான பேச்சுக்களை கேட்டுப்பாருங்கள்..

சில நாட்களுக்கு முன்பு உங்கள் அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் பெண் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உங்கள் அமைச்சரவை சக அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அவர்கள் நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் உங்கள் கண்ணாடி அழகாய் இருக்கிறது என்று தரம் கெட்டுப் பதில் சொன்னபோது ஒரு வார்த்தை கூட நீங்கள் உங்கள் அமைச்சரைக் கண்டிக்கவில்லை. தமிழகத்தின் கவர்னர் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பெண் பத்திரிக்கையாளர் கண்ணத்தை தட்டிப் பேசினார்.. அந்த பெண் பத்திரிக்கையாளர் உடனே தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.. தமிழகத்தின் முதலமைச்சரான நீங்கள் அந்த பத்திரிக்கையாளருக்குஆதரவாக நிற்கவில்லை..

இன்னும் இப்படி பல சம்பவங்களை சொல்லிக் கொண்டே போக முடியும் இந்தியாவையே உலுக்கிய பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு அதில் உங்கள் கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டப்பட்டது உங்களுக்கும் தெரியும் ஊருக்கும் தெரியும்.. இச்சம்பவத்தை கண்டித்து எங்காவது ஒரு போராட்டத்தை எதிர்ப்பை கண்டனத்தை நீங்கள் பதிவு செய்து உண்டா? குற்றவாளிகளைக் கைது செய்யஒரு துரும்பையாவது அசைத்தீர்களா?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறைகள் அன்றாட நிகழ்வாகி உள்ளதை நாடே அறியும். பொறுப்புள்ள முதல்வராக இந்த பெண்மையைப் பழிக்கும் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்து எந்த இடத்திலாவது உங்கள் குரல் உயர்ந்தது உண்டா?

உங்கள் கூட்டணிக் கட்சியான பிஜேபியின் பிரச்சார பீரங்கி எஸ் வி சேகர் ஒரு கூட்டத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பதவிகள் பெறுவதற்காக உயரதிகாரிகளின் படுக்கை அறையை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று சொன்னதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தீர்கள்…

இதேபோல கருத்துரிமைக்கு ஆதரவாக பேச்சுரிமைக்கு ஆதரவாக ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை, விளிம்பு நிலை அபலைகளுக்கு ஆதரவாக களம் இறங்கிய பெண் செயல்பாட்டாளர்கள் மீது சமூக ஊடகங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் உங்களுக்கு தெரியாது என்று கூறி தப்பிக்க முடியாது! ஏன் என்றால் காவல்துறையே உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

இது போல கடந்த ஆண்டுகளில் பெண்களை இழிவுபடுத்துவதும் ஆபாசமாக பேசுவதும் பெண்கள் குழந்தைகள் மீதான கொடூர பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்த போதும் மிகத் தெளிவாக அமைதியாக இருந்த நீங்களும் உங்கள் கட்சியும், ராசா அவர்களின் பேச்சிற்கு வேகவேகமாய் ஆர்ப்பாட்டம் நடத்தும் ஆங்காங்கே கண்ணீர் விட்டுக் கதறும் இந்த நாடகத்திற்குப் பின்னால் தேர்தல் என்ற மிகப் பெரிய அரசியல் இருக்கிறது என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்வார்கள்..
தேர்தல் ஆதாயத்திற்காக கண்ணியமற்ற நேர்மையற்ற அரசியல் நாடகத்தை நடத்துவதும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பக்குவம் இல்லாமல் யாரோ சொல்லித் தருவதையும் எழுதித் தருவதையும் பேசி மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்காமல் அரசியல் அறத்தை சிறிதேனும் கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்..

–அ.ராதிகா கோவை