September 24, 2021

பார்பி டால் முதன் முறையாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட தினம்!

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பொம்மை உலகில் புகழின் உச்சத்தில் இருந்தது பார்பி பொம்மை. அப்பேர்பட்ட பார்பி பொம்மை அமெரிக்காவின் பொம்மை கண்காட்சியில் இடம்பெற்ற தினம் இன்று. ரூத் ஹேண்டிலர் என்ற பெண்மணிதான் இந்த பார்பி டாலை உருவாக்கியவர். சிறுவயது குழந்தைகளின் விருப்பங்களை தன் மகள் மூலமாகக் கேட்டறிந்து இந்த பொம்மையை தான் உருவாக்கியதாக கூறி இருந்தார் ரூத். இது பத்தி கொஞ்சம் டீடெய்லா தெரிய ஆசையா?

இதோ பார்பி வரலாறு:

ரூத் ஹேண்ட்லர் தன்னோட மகள் காகித பொம்மைகளுடன் அடிக்கடி விளையாடுவதைக் கவனிச்சார். அவற்றுக்கு அவள் பெரியவர்களின் பாத்திரங்களைக் கொடுத்து மகிழ்வதையும் கவனிச்சா. அந்தச் சமயத்தில் குழந்தைகளுக்கான பொம்மைகள் எல்லாம் அநேகமாக சின்னஞ்சிறு குழந்தை வடிவங்களைப் பிரதிபலிப்பதாகவே இருந்தன. பொம்மைகளுக்கான சந்தையில் ஒரு இடைவெளி இருக்கக்கூடும் என்பதை உணர்ந்த ஹேண்ட்லர் வளர்ந்த, பருவமடைந்த ஒரு உடலை பொம்மையாக வடிக்கும் யோசனையைத் தம் கணவர் எலியட்டிடம் சொன்னார்.

இத்தனிக்கும் அவர்தான் மேட்டல் பொம்மை நிறுவனத்தின் இணை நிறுவனர். அவர் அந்த யோசனையில் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை. மேட்டலின் மற்ற இயக்குநர்களும் அப்படித்தான் இருந்தனர்.

அதே சமயம் 1956வது வருடம் தம் குழந்தைகள் பார்பரா மற்றும் கென்னத் ஆகியோருடன் ஐரோப்பாவிற்கு ஒரு சுற்றுலா சென்றபோது, ருத் ஹெண்ட்லர் பில்ட் லில்லி என்றழைக்கப்பட்ட ஒரு ஜெர்மன் பொம்மையைப் பார்த்தார். வளர்ந்த மனித உருவம் கொண்டிருந்த அந்த பொம்மைதான் ஹேண்ட்லரின் மனதில் இருந்த வடிவம் ஆகும். அவர் அந்த பொம்மைகளில் மூன்றை வாங்கினார். தன் மகளிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, மற்றவற்றை மேட்டலுக்குக் கொண்டு சென்றார். சித்திரப் புத்தகம் ஒன்றில் வரும் பிரபலமான கதாபாத்திரத்தை ஒட்டி லில்லி பொம்மை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது டை பில்ட் ஜியுடுங் என்னும் செய்தித்தாளுக்காக ரெய்ன்ஹார்ட் ப்யூடின் என்பவர் வரைஞ்சதாம்.

லில்லி வேலைக்குச் செல்லும் ஒரு பெண். தனக்கு என்ன வேண்டும் என்பதை அவள் அறிவாள். அதை அடைவதற்கு அவள் ஆண்களையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை. 1955ம் ஆண்டு முதன் முதலாக ஜெர்மனியில் லில்லி பொம்மை விற்பனையானது. முதலில் பெரியவர்களுக்காக அது விற்கப்பட்டாலும், பிறகு அது குழந்தைகளிடம் பிரபலமாகிவிட்டது. அவர்கள் அதற்கென்றே தனியாகக் கிடைக்கும் ஆடைகளை அணிவித்து மகிழ்ந்தார்கள்.

ஐக்கிய அமெரிக்காவுக்குத் திரும்ப வந்தவுடன், (ஜேக் ரையான் என்ற டெக்னிஷியன் உதவியுடன்) ஹேண்ட்லர் அந்தப் பொம்மையை மீண்டும் வடிவமைத்து அதற்கு பார்பி என்ற ஒரு புதிய பெயரைச் சூட்டினார். இந்தப் பெயர் அவரது மகள் பார்பராவின் பெயரிலிருந்து வந்துச்சாம்.

1959வது வருடம் இதே மார்ச் 9ம் தேதி நியூயார்க் நகரில், அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் இந்தப் பொம்மை முதன் முதலாக வெளியானது.

இந்தத் தேதி பார்பியின் அதிகாரப் பூர்வமான பிறந்த நாள் என்றும் பயன்படுத்தப்படுகிறது.

பில்ட் லில்லி பொம்மைக்கான காப்புரிமைகளை மேட்டல் 1964ம் வருடம் பெற்றது. ஆனா லில்லி பொம்மைகளின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

முதன் முதலாக வந்த பார்பி பொம்மை கருப்பும், வெள்ளையும் கலந்த ஒரு வரிக்குதிரை நீச்சல் உடை மற்றும், அதன் பிரத்யேக அடையாளமான உச்சந்தலையில் முடியப்பட்ட ஒரு போனி டெயில் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இது ஒரு பிளாண்ட் அல்லது ப்ருநெட் வடிவங்களில் கிடைக்கப்பெற்றது.

“பதின் வயது நவ நாகரிக மாடல்” என்ற பெயரில் இந்த பொம்மை வர்த்தகப்படுத்தப்பட்டது. இதன் உடைகளை மேட்டலின் நாகரிக உடை வடிவமைப்பாளர் சார்லட் ஜான்சன் அமைத்திருந்தார்.

ஆரம்பத்தில் வந்த பார்பி பொம்மைகள் ஜப்பான் நாட்டில் தயாராயின. அவற்றின் உடைகள் ஜப்பான் நாட்டு வீட்டுத் தொழிலாளர்களால் கைகளால் தைக்கப்பட்டிருந்தன. உற்பத்தி தொடங்கிய முதல் வருஷம் 350,000 பார்பி பொம்மைகள் விற்பனையாகின.

இதுக்கிடையிலே பார்பி ஒரு பருவப் பெண்ணின் உருவம் பெற்றிருப்பது அவசியம் என்று ருத் ஹேண்ட்லர் நம்பினார். ஆரம்ப கட்டங்களில் சந்தை ஆராய்ச்சி செய்தபோது, இந்தப் பொம்மையின் வெளிப்படையான மார்பகங்களை சில பெற்றோர்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துச்சு. அதுனாலே பார்பியின் தோற்றம் பல முறை மாற்றப்பட்டுள்ளது.

இவற்றில் முக்கியமானது 1971ம் ஆண்டு பொம்மையின் கண்கள், ஆரம்பத்தில் பக்க வாட்டில் பார்த்து அடக்கமாக இருந்ததைப் போல அல்லாமல், நேருக்கு நேராகப் பார்க்கும் வகையில் மாற்றப்பட்டதுதான்.

மேலும் மிகப் பெரும் அளவில் தொலைக் காட்சி விளம்பரம் செய்வதன் மூலம் விற்பனை உத்திகளை வகுத்துக் கொண்ட பொம்மைகளில் பார்பி முதலாவதானது. இதை பெருமளவில் மற்ற பொம்மைகளும் பின்பற்றத் துவங்கி விட்டன. உலகெங்கும் 150 நாடுகளில் ஒரு பில்லியனுக்கும் மேலான பார்பி பொம்மைகள் விற்பதாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு விநாடியும் மூன்று பார்பி பொம்மைகள் விற்பனையாவதாக சொன்னாய்ங்க

ஆனாக்க இப்போதைய நவீன காலத்து குழந்தைகளின் கைகளில் செல்போன்களும், டேப்லட் கணிணிகளும் வந்து விட்டதால், பார்பி டாலின் தாக்கம் குறைந்து போச்சு. ஆனாலும் பார்பி பர்த் டே- யை மறக்க முடியுமா?