கிளாசிக்கல் கமர்சியல் படைப்பாக உருவாகியிருக்கும் ‘போலாமா ஊர்கோலம்’

கிளாசிக்கல் கமர்சியல் படைப்பாக உருவாகியிருக்கும் ‘போலாமா ஊர்கோலம்’

ஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ போலாமா ஊர்கோலம்’. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபுஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சக்தி மகேந்திரா நடித்திருக்கிறார். இவர்களுடன் மதுசூதன், ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபீக் ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். வைசாலி சுப்பிரமணியன், டேவிட் பாஸ்கர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷமந்த் நாக் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை கே. எம். ரயான் மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தின் இசை ட்ரெய்லர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் கே ராஜன், பேரரசு ஆகியோர் வெளியிட, மூத்த கால்பந்து வீரர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான பிரபுஜித் பேசுகையில், ” நானும் என்னுடன் படித்தவர்களும், பணியாற்றியவர்களும் என 31 நண்பர்கள் முதலீடு செய்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். என் மீதும், என்னுடைய திரைத்துறை மீதான ஈடுபாட்டிலும் நம்பிக்கை வைத்து முதலீடு செய்த இவர்களுக்கு மனமார்ந்த நன்றியை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நானும் இயக்குநரும் ஐந்து ஆண்டு கால நண்பர்கள். இருவரும் சினிமா மீதான காதலை உணர்வுபூர்வமாகக் கொண்டவர்கள். அவருடைய திறமை மீது எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. தரமான படைப்பை வழங்கியிருக்கிறார் என உறுதியாகச் சொல்வேன். இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருக்கும் நடிகை சக்தி மகேந்திரா, எதிர்காலத்தில் நிச்சயமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெறுவார். இந்தப் படத்தில் பணியாற்றிய 20க்கும் மேற்பட்ட முன்னாள் கால்பந்து வீரர்களுக்கும், அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பிற்கும் நன்றி. படப்பிடிப்புத் தளத்தில் அவர்களுடன் பணியாற்றிய நாட்களில் நிறைய விசயங்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். முன்னாள் வீரர்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை உருவாக்கி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.

இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் பேசுகையில், ” திரைத் துறையில் உதவி இயக்குநராக 15 ஆண்டுகாலம் பணியாற்றிய அனுபவம் உண்டு. ஒரு காலகட்டத்தில் சினிமா வேண்டாம் என்று தீர்மானித்து, வேறு துறையில் பணியாற்ற நேர்காணலுக்குச் சென்றேன். அந்தத் தருணத்தில் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் தயாரிப்பாளரும், நடிகருமான பிரபுஜித் அவர்களைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் தான் இந்த திரைப்படத்தின் முதல் புள்ளி தொடங்கியது. ஐந்தாண்டுகளுக்கு முன் அவரிடம் சொன்ன கதையை தற்போது படமாக உருவாக்கப் போகிறோம் என்றார்.

எனக்கும், தயாரிப்பாளர் பிரபுஜித்துக்கும் இடையே பல தருணங்களில் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டதுண்டு. அந்தச் சமயங்களில் படத்தில் நடித்த நடிகர் மதுசூதன் எங்களைச் சமாதானப்படுத்தி படத் தயாரிப்பை முன்னெடுத்துச் செல்வார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மதுசூதன், கால்பந்து விளையாடும் காட்சிகளில் நிஜ விளையாட்டு வீரர்களைப் போல் சாகசம் செய்து நடித்திருக்கிறார். படத்தில் நடித்த 20 மூத்த முன்னாள் விளையாட்டு வீரர்களும், படப்பிடிப்பின்போது சோர்வடையாமல் எங்களுடைய படக்குழுவின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஒத்துழைப்பு அளித்தனர்.

‘போலாமா ஊர்கோலம்’ என் நண்பனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை தழுவி திரைக்கதையாக எழுதி உருவாக்கி இருக்கிறேன். இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு எந்த இடத்திலும் சோர்வு தராது. இரண்டு மணி நேரம் ஓடும் கிளாசிக்கல் வித் கமர்சியல் படைப்பாக உருவாகி இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறும்போது ஃபீல் குட் மூவியாக இருக்கும். ” என்றார்.

முத்தாய்ப்பாக படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் கே ராஜன், பேரரசு ஆகியோர் வெளியிட, மூத்த கால்பந்து வீரர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இவ் விழாவில் இந்தியாவிற்காக விளையாடிய சர்வதேச கால்பந்து வீரர் அப்துல் ஷம்சத் , கேரம் அசோசியேசன் தலைவர் கே எம் மார்ட்டின், நடிகர் மேஜர் கௌதம் , படத்தின் நாயகி சக்தி மகேந்திரா, நடிகர்கள் மதுசூதன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!