அதென்ன காரணமோ தெரியவில்லை.. கடந்த நாலைந்து ஆண்டுகளாக கோலிவுட் நாயகர்களில் பலர் விவசாயத்தில் ஆர்வம் காட்டுவது அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இப்போதைய மார்கெட்டில் ட்ரெண்டிங்-கில் இருக்கும் கார்த்தி, விஜய் சேதுபதி தொடங்கி இடுப்பழகி ரம்யா பாண்டியன் வரை பல இளம் நடிக, நடிகைகள் நேரடியாக விவசாயத்தில் ஈடுப்பட்டுவருவதாக பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம். மேலும் சில டாப் ஹீரோ இயற்கை விவசாயத்தில் ஆர்வமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது, விவசாயிகள் குறித்து பக்கம் பக்கமாக வசனங்கள் பேசுவது, விவசாயிகள் கடன் பிரச்னை குறித்த வசனங்கள் இடம்பெறுவது, விவசாயக் குடும்பமாக ஹீரோவின் குடும்பத்தைக் காட்டுவது… எனப் பல படங்கள் விவசாயி சீன்களை காட்டி அப்ளாஸ் வாங்குவதும் வாடிக்கையாகி விட்டது. அதனால்தானோ என்னவோ இப்போது எண்ட்ரி ஆகும் புதுமுக நாயகர்கள் கூட விவசாயம் குறித்து கொஞ்சம் நீண்ட வசனம் பேசும் படங்களிலாவது நடிக்க்க அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் சீமான் & நியூ ஹீரோ வசி என்பவர் மூலம் இதே விவசாய நிலங்களின் பின்னணியை வைத்து இரட்டை இயக்குநர்களான ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன் வழங்கி இருப்பதுதான்’ தவம்’.

படத்தின் கதை என்னவென்றால் ‘அன்னை வயல்’ என்னும் பேர் கொண்ட முப்போகம் நெல் விளையும் கிராமம் ஒன்றில் சகலருக்கும் வேண்டியவனாக, நாயகன் வசியின் தந்தையாகவும் வலம் வருகிறார் சீமான். அந்த கிராமத்திலுள்ள முதியவர்களுக்கு பட்டறிவு, படிப்பறிவு சொல்லிக் கொடுத்தப்படி விவசாயமும் செய்து வருகிறார். அதே கிராமத்தில் சீமானுக்கு உறவினர் போஸ் வெங்கட், ஒரு அரசு ஊழியராக பணி செய்யும் அவருக்கு பணச்சிக்கல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில், அதே ஊரைச் சேர்ந்த எம்.எல்.ஏ அவருக்கு ஓரு வழி காட்டுகிறார். அதாவது மொத்தமாக நூறு ஏக்கர் நிலம் வாங்க ஜெர்மனி தொழிலதிபர் ஒருவர் வந்திருப்பதாகவும். இந்த அன்னை வயல் கிராமத்தில்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதாகவும் கூறுகிறார். நூறு ஏக்கம் நிலம் வாங்கித் தந்தால் ஏராளமான பணம் கொடுப்பதாக வாக்கு தருகிறார். ஆனால், சீமான் அனுமதி இல்லாமல் நிலத்தை யாரும் கொடுக்க முன்வர மாட்டார்கள் என்பதை அறிந்து, அவரிடம் ஜெர்மன் தொழிலதிபர் நூறு ஏக்கரில் முழுக்க பண்ணைத் தொழில் செய்யப் போகிறார். அதனால் நம் மக்களுக்கு வேலை கொடுக்கப் போகிறார். நம் மக்கள் செழிப்பாக இருக்க, நானும் வாக்குறுதி கொடுத்துவிட்டேன். நீங்கள் அனுமதித்தால் பத்திரப்பதிவு முடித்துவிடலாம் என்று சீமானிடம் அனுமதி கேட்கிறார். சீமானும் ஒத்துக்கொள்கிறார். ஆனால், ஒருக் கட்டத்தில் போஸ்வெங்கட் & எம்.எல்.ஏ-வின் மோசடி திட்டம் சீமானுக்கு தெரிய வர, அவர் ஊர்மக்களை அலெர்ட் செய்து நிலத்தை விற்க முடியாமல் தடுத்து நிறுத்துகிறார். இதனால். எம்.எல்.ஏ, கூட்டாளிகள் சேர்ந்து சீமானை அவர் மகம் வசி கண் முன்னாலேயே கொலை செய்கிறார்கள். சீமான், நம் தமிழ் சினிமா இலக்கணப்படி சாகும் தருவாயில் தன் மகனிடம் ஒரு சத்யம் வாங்குகிறார். அந்தச் சத்தியத்தை மகன் எப்படி நிறைவேற்றினார் என்பதுதான் தவம் படக்கதை.

அறிமுக நாயகான வசி சண்டைக்காட்சி, நடனக் காட்சி, காதல் காட்சி என அனைத்திலும் தனது முழு திறமையையும் காண்பித்திருப்பவர், நடிப்பில் விஜய்காந்த் உள்ளிட்ட வேறு சில நடிகர்களையும் நினைவிற்கு கொண்டு வந்துவிடுவதால் ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கி தப்பித்து விடுகிறார். பூஜாஸ்ரீ, நாயகிக்கான நடிப்பு மட்டும் இன்றி, கமர்ஷியல் நாயகிக்கு உண்டான அம்சத்தோடு வலம் வருகிறார். வெறுமனே காதலுக்காக மட்டும் பயணிக்காமல் கதையுடனும் பயணித்திருக்கும் இவரும் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். மெயின் ரோலில் வரும் சீமான் படத்திற்காக தன்னை மாற்றிக் கொள்ளாமல் கேஷூவலாக வந்து போய் ஒட்டு மொத்த படத்தை தூக்கி நிறுத்துகிறார். வேல்முருகனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது.

எம் ஜி ஆர் காலத்து கதை-யை கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்து திரைக்கதை அமைத்த இரட்டை இயக்குநர்கள் இன்னும் கொஞ்சம் யோசித்து செம்மைப்படுத்தி இருக்கலாம் .

மொத்தத்தில் தவம் – மோசமில்லை.

மார்க் 2.5 / 5