கஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு இழிவான பிரச்சாரப் படம் என்று போட்டு உடைத்தற்காக நன்றிகள் நாதவ் லாபிட்!
பன்னாட்டு திரைப்பட விழா (IFFI) கோவாவில் நடந்து வந்தது. அதில் சிறப்புப் பிரிவு வரிசையில் திரையிடப்பட்ட 15 படங்களை பரிசீலனைக் கமிட்டி பார்த்திருக்கிறது. பார்த்ததும் அக்கமிட்டியின் தலைவர் இஸ்ரேலை சேர்ந்த படைப்பாளி நாதவ் லாபிட் அவை குறித்துப் பேசி இருக்கிறார். ‘அவற்றில் பதினான்கு படங்கள் நன்றாக இருந்தன. பதினைந்தாவது படம் கஷ்மீர் ஃபைல்ஸ் பார்த்து கமிட்டி உறுப்பினர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டோம். அது ஒரு இழிவான பிரச்சாரப் படம் போலத்தான் இருந்தது. (propagandist vulgar film) பெருமைமிகு திரைப்பட விழாவுக்கு சற்றும் தகுதியற்றதான இந்தப் படம் எப்படி உள்ளே நுழைந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது,’ என்று கூறி இருக்கிறார். இது சர்ச்சையாகி விட்டது.
அதன் விளைவாக இஸ்ரேலிய தூதுவர் நாதவ் லாபிட்டை விமர்சித்து இருக்கிறார். அவருக்கு அனுப்பிய கடிதத்தில் ‘நீ இஸ்ரேலில் இருந்து கொண்டு இஸ்ரேல் குறித்து என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். ஆனால் இந்தியாவுக்கு விருந்தினனாக வந்து இந்தியா பற்றி விமர்சனம் செய்வது தவறு,’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
எனக்குப் புரியவில்லை. நாதவ் லாபிட் இந்தியா பற்றி எதுவுமே சொல்லவில்லை. இந்தியா ஒரு மோசமான நாடு. இங்கே டிராஃபிக் சரியில்லை. சாப்பாடு சரியில்லை, இந்தியர்கள் மேல் ஒருவித துர்நாற்றம் வருகிறது என்றெல்லாம் ஏதாவது சொல்லி இருந்தால் தூதுவருக்கு வருத்தம் ஏற்படுவதில் நியாயம் இருக்கிறது. அவர் பேசியது ஒரு திரைப்படத்தைப் பற்றி. அவர் வந்ததே அதற்குதான். தாஜ்மகாலை சுற்றிப் பார்ப்பதற்கு அல்ல.
திரைப்படத்தைப் பார்த்து அதை விமர்சனம் செய்ய கூட்டி வரப்பட்டவரை ‘நீ ஏன் படத்தை எல்லாம் பார்த்து விமர்சனம் பண்ணறே?’ என்று திட்டி இருக்கிறார்கள். அதே கடிதத்தில் கஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் படத்துடன் ஒப்பிட்டு இருக்கிறார்கள். இந்த ஒப்பீடு விவேக் அக்னிஹோத்ரிக்கே அதிர்ச்சியை கொடுத்திருக்கும்!
🦉#IFFI Jury says they were “disturbed and shocked” to see #NationalFilmAward winning #KashmirFiles, “a propoganda, vulgar movie” in the competition section of a prestigious festival— organised by the Govt of India. #IFFIGoa2022 pic.twitter.com/2S9oYOf2vQ
— Àanthai Répørter™ 👀🦉 (@aanthaireporter) November 28, 2022
அப்புறம் ‘சொல்ல வேண்டியதை எல்லாம் இஸ்ரேல் போய் சொல்லிக்கோ,’ என்றால் என்ன அர்த்தம்? இந்தியாவில் எதையும் ஓபனாக சொல்லக் கூடாது என்பதுதானே? திரைப்பட பரிசீலனைக்காக கூட்டி வந்தவரைக் கூட திரைப்படங்கள் பற்றி பேசக் கூடாது என்று சொல்லும் அளவு மூடத்தனமும் வெறியும் மக்களிடமும் கூடிப் போயிருக்கிறது.
கடைசியாக, கஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு இழிவான பிரச்சாரப் படம் என்று போட்டு உடைத்தற்காக நன்றிகள் நாதவ் லாபிட்! தூதரகத்தின் திட்டுக்காக கவலைப்படாதீர்கள். உங்கள் ஊருக்கு பாதுகாப்பாக திரும்பிப் போனதும் அந்தப் படம் பற்றி இன்னும் நிறைய பேசுங்கள். மதவெறி எப்படியெல்லாம் மக்களை மூடர்களாக ஆக்கி, அவர்கள் ரசனைத்தன்மையை நாசம் செய்கிறது என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும்.