October 18, 2021

ஆங்காங்கே கொஞ்சம் சேதாரம், சீன் குறைபாடுகள் இருந்தாலும் – தங்க ரதம் – விமர்சனம்!

பலருக்கு பெயரளவில் தெரிந்த அதே சமயம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத காய்கறி மார்க்கெட் மற்றும் அங்குள்ள லோடுவேன் டிரைவர்கள் இருவர் வாழ்க்கை முறையும் அவர்களுக்கிடையான காதல், கோபம் , விரக்தி, தியாகம்தான் “தங்க ரதம் ” படம்.கதையென்னவோ பழசுதான்.. அதை புது களத்தில் கொஞ்சம் புது முகங்களை வைத்து வெறுப்பேற்றாமல் படத்தை காட்டி இருக்கிறார் இயக்குநர்.

கொஞ்சம் டீடெய்லா சொல்ல வேண்டுமென்றால் -தமிழகத்தில் மூன்றாவது பெரிய மார்க்கெட்டான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து, போட்டி போட்டுக் கொண்டு காய்கறி லோடு அடிக்கும் ஒரே ஊரைச் சேர்ந்த டெம்போ வேன் டிரைவர்கள் செல்வாவும் , பரமனும் .இதில் பரமனின் டெம்போ அவருக்கு சொந்தமானது .செல்வாவின் டெம்போ வேனுக்கு அவரது ஒன்று விட்ட சித்தப்பா உரிமையாளர். தொழில் போட்டி யால் பகையாளியாக திரியும் பரமனின் தங்கையை செல்வா ., பரமனின் தங்கை அவர்., என்பது தெரிவதற்கு முன்பிருந்தே உயிருக்கு உயிராக காதலிக்கிறார். கதை புரிந்திருக்குமே? அப்படியான காதல் என்னாச்சு?! என்பதுதான் மீதிக் கதை

‘தங்க ரதம்’ லோடுவேனின் டிரைவர் செல்வாவாக வரும்  வெற்றி ஓ கே – அம்புட்டுத்தான் .பெரும்பாலான நேரங்களில் விரைப்பான பார்வைக் கொண்ட அவர் நடிப்பில் கீ கொடுத்த ரோபோத்தனம்தான் தெரிகிறது. ஆனால் கிராமத்து கதாநாயகியாக வரும் அதிதி கிருஷ்ணா காதலனுக்கும் அண்ணனுக்கும் ,இடையில் நடக்கும் ஈகோ மோதலில் சிக்கித் தவிக்கும் நடிப்பை வெளிப்படுத்துவது அச்சா ஹை..வில்லன் ரேஞ்சில் வரும் சவுந்தர்ராஜன் தனி ஸ்கோர் செய்திருக்கிறார்.

சக மீடியா மேன் சரவணன் சவடமுத்து சொன்னது போல ஆடுகளம்’ நரேன்தான் படத்தில் அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறார். கச்சிதமான, மிகையில்லாத நடிப்பு. வெற்றியின் அப்பாவை மருத்துவனைக்குத் தூக்கிவந்து சேர்ப்பித்துவிட்டு வெற்றியிடம் பாசத்துடன் பேசுகின்ற காட்சியிலும், டெம்போ வேனை வெற்றியின் பெயரிலேயே எழுதி வைத்துவிட்டதை வீட்டுக்கு வந்து தயகத்துடன் சொல்லும் காட்சியிலும் ‘சபாஷ்’ என்று சொல்ல வைத்திருக்கிறார் நரேன். ! ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு ஒரு மொக்கை கேரக்டர். அவருடைய வீட்டில் நடக்கும் கேபிள் டிவி சமாச்சாரம் உவ்வே. ஆனால் அதனை ஆபாசமாக்காமல் வார்த்தைகளிலேயே சாமரசம் வீசுவதை போல காமெடியாக்கி வைத்திருப்பதற்கு இயக்குநருக்கு நமது நன்றிகள்..!

யாருங்க அது ‘வெள்ளப்புறா’ என்னும் பாண்டியன்….? அந்தக் குள்ளமான உருவத்தோடு மனிதர் அலட்டிக் கொள்ளாமல் பேசும் பல வசனங்கள் மனதில் அப்படியே நிற்கின்றன. வெள்ளந்தியாக அவர் பேசுவதும், செயல்படுவதும் படத்திற்கு ஒரு வித்தியாசமான கலரைக் காட்டியிருக்கிறது.

பிறகென்ன சுரேஷ் அர்ஷின் படத்தொகுப்பு பாராட்டிற்குரிய பக்கா தொகுப்பு .ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவில் திண்டுக்கல் ,பழனி , ஒட்டன்சத்திரம் பகுதிகளின் கிராமிய எழில் கொஞ்சும் அழகு ரசனை .டோனி பிரிட்டோவின் இசையில் “அடி ஆத்தி புரியாத பனிக்கட்டி ஆனேனே … ” உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் சுப ராகம்.

பாலமுருகன் எழுத்து , இயக்கத்தில் ., வந்துள்ள தங்க ரதத்தில் ஆங்காங்கே கொஞ்சம் சேதாரம், சீன் குறைபாடுகள் இருந்தாலும் முழு படமும் முகத்தை சுழிக்க வைக்காமல் காட்டி அசத்தியிருக்கிறார்