August 17, 2022

தள்ளிப் போகாதே – விமர்சனம்!

ந்தக் காதல் இருக்கிறதே.. காதல் – அதற்கு இலக்கணமோ, எல்லையோ கிடையாது.. இது எல்லையில்லா ஏகாந்தப் பெருவெளி.. எப்படி வானத்தை நம்மால் எங்கிருக்கிறது என்று சுட்டிக் காட்ட முடியாதோ.. அது போலத்தான் காதலும்.. இதுதான் காதலின் உச்சம் என்று எதையுமே நம்மால் சொல்ல முடியாது. காதலில் இதைதான் செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்று எதுவும் கிடையாது. அந்த உணர்வை அப்பட்டமாக சொல்லும் படமே ‘தள்ளிப் போகாதே’. தெலுங்கில் நானி, ஆதி, நிவேதா தாமஸ் நடித்து 2017ம் ஆண்டு வெளிவந்த ‘நின்னுக்கோரி’ என்ற வெற்றிப் படத்தின் ரீமேக்காகவே இப்படத்தை உருவாக்கி அதையும் ரசிக்கும்படியே கொடுத்திருக்கிறார்.

கதை என்னவென்றால் காதலர்களாக இருந்த அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இருவரும் காலத்தின் கட்டாயத்தால் ஒரு கட்டத்தில் பிரிந்து போய் விடுகிறார்கள். இதை அடுத்து அனுபமாவிற்கு அமிதாஷுடன் திருமணம் நடக்கிறது. கொஞ்ச கால இடைவெளிக்குப் பிறகு அதர்வாவும், அனுபமாவும் மீண்டும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது ‘நீ இன்னும் என்னை மறக்கவில்லை; என்று அனுபமாவிடம் கேஷூவலாக அதர்வா கூற, அதற்கு அவர் மறுக்க, இருவருக்கும் விவாதம் ஏற்படுகிறது. இந்த விவாதத்தின் முடிவில் அனுபமா வீட்டிற்கே அதர்வா 10 நாட்கள் தங்க முடிவு செய்கிறார் . அதற்கு அனுபமா கணவர் அமிதாஷும் சம்மதிக்கிறார். இச்சுழலில் தன் மீதான காதலை மறக்க முடியாமல் அனுபமா இருக்கிறார் என்பதை உணர்ந்து விட்டால் தன்னுடன் வர வேண்டும் என அதர்வா அனுபமாவிற்கு சவால் விடுக்கிறார். இந்த சவாலில் அதர்வா வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே கதை.

நாயகனாக வரும் அதர்வா ஆராய்சி மஆணவனாக இளமை துள்ளலுடன் தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். நாயகி அனுபமா, அதர்வாவைக் காதலிக்கும் போது ரசிக்க வைக்கிறார். காதலனா, கணவனா என இருவருக்கும் இடையில் தவிக்கும் காட்சியில் ஸ்கோர் செய்திருக்கிறார். அனுபமாவின் கணவராக வரும் அமிதாஷ் பிரதான் தன் ரோல் என்னவோ அதை எல்லைமீறாமல் செய்து கவன் பெறுகிறார். ஆடுகளம் நரேன் அடடே சொல்ல வைக்கிறார், காளி வெங்கட் ஆகியோர் ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

கோபி சுந்தர் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சண்முக சுந்தராமின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம் சேர்க்கிறது.

ஆர் கண்ணன் நின்னு கோரியின் ரீமேக்கை தன் பாணியில் வழங்கி கவர முயன்றிருக்கிறார். குறிப்பாக காதலி மற்றும் மனைவி கணவன் ஆகியோருக்கு இடையே உள்ள நுட்பமான உறவையும், உணர்வுப்பூர்வமான வெளிப்படுத்தி ஸ்மைலியை ஏற்படுத்துகிறார்

மொத்தத்தில்,தள்ளிப்போகாதே பழையக் காதலியின் நினைவுகளை கிளறும் படம்

மார்க் 2.75 / 5