அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தையின் வளர்ப்புத் தந்தை மீண்டும் கைது

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தையின் வளர்ப்புத் தந்தை மீண்டும் கைது

கேரளாவை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர்களான வெஸ்லி மேத்யூ, அவரது மனைவி சினி மேத்யூ, கடந்த ஆண்டு கேரளாவில் ஒரு 3 வயது சிறுமியை தத்தெடுத்து அமெரிக்கா அழைத்து சென்றனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஷெரின் எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தை கடந்த 7ம் தேதி இரவு திடீரென காணாமல் போனதாக குழந்தையின் வளர்ப்பு தந்தை வெஸ்லி மேத்யூ காவல்துறையில் புகார் செய்தார். ஷெரின் இரவில் பால் குடிக்க மறுத்ததால் அவளை வீட்டுக்கு வெளியே நிற்க சொன்னதாக கூறிய மேத்யூ,சிறிது நேரம் கழித்து வெளியே சென்று பார்த்தப்போது சிறுமியை காணவில்லை என்று புகாரில் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரிச்சர்ட்சன் காவல்துறையினர் வெஸ்லி மேத்யூ மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் அபராதம் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார். காணாமல் போன குழந்தையை கடந்த இரு வாரமாக காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று மேத்யூவின் வீட்டில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் உள்ள ஒரு கால்வாயில் குழந்தையின் பிணம் ஒன்று மீட்கப்பட்டது. அந்த பிணம் மாயமான இந்திய சிறுமி ஷெரின் மேத்யூவின் உடலா என்பதை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் வெஸ்லி மேத்யூ திங்கட்கிழமை அன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ரிச்சர்ட்சன் காவல்துறை பேச்சாளர் சார்ஜண்ட் கெவின் பெர்லிச் வெளியிட்ட செய்தியில் ‘‘வெஸ்லி மேத்யூ தன் வழக்கறிஞருடன் காவல்நிலையம் வந்து குழந்தை காணாமல் போனது தொடர்பாக புதிய வாக்குமூலம் அளித்தார். அதை தொடர்ந்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்’’ என தெரிவித்தார்.

மேத்யூ அளித்த புதிய வாக்குமூலம் தொடர்பாக ரிச்சர்ட்சன் காவல்துறையினர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. வெஸ்லி மேத்யூ மீது குழந்தைக்கு காயம் ஏற்படுத்தியதாக குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமெரிக்க சட்டப்படி மேத்யூவுக்கு ஆயுள் தண்டனை அல்லது 5 முதல் 99 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Related Posts

error: Content is protected !!