November 30, 2021

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்! – தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவிப்பு!

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஒரு முறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லும் என விதி திருத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர் களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் இன்னும் சில மாதங்களில் காலாவதியாக உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் அடுத்த 7 ஆண்டுகளுக்கு மட்டும் தான் செல்லுபடியாகும். இதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்பது கட்டாயம்.

ஆகவே, 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் நிரந்தரமாக செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவிப்பது தான் அனைவருக்கும் நியாயமான தீர்வாக அமையும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.