October 5, 2022

இன்றைய தொழில்நுட்பம் மூலம் பயங்கரவாதம்! – கே. விஜயகுமார் தகவல்

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, பயங்கரவாத அமைப்புகளால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவது இந்தியாவில் மிக மிகக் குறைவுதான்.. ஆனாலும் சைபர் தொழில்நுட்ப உலகில் பயங்கரவாதம் புதிய வடிவம் பெற்றுள்ளது. இதைக் கட்டுப்படுத்த நாடுகளிடையேயான ஒருங்கிணைப்பு மிக அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகமுதுநிலை பாதுகாப்பு ஆலோசகர் கே.விஜயகுமார் கூறினார்.

dgp oct 27

“பயங்கரவாதத்தின் மீதான நிலைப்பாடு, உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கம் சென்னைப் பல்கலை. பாதுகாப்பு, திட்டத் துறை சார்பில்புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற கே.விஜயகுமார் பேசிய போது, “பயங்கராவதம் என்பது முந்தைய காலங்களில் இருந்ததுபோல் அல்லாமல், அதனுடைய வடிவம் வெகுவாக மாறிப்போயுள்ளது. இன்றைய சைபர் தொழில்நுட்ப உலகில், முக்கியமாக இளைஞர்கள் குறிவைத்து வெகு எளிதாக ஈர்க்கப்படுகின்றனர். உலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மையமாகக் கொண்டு, உலகம் முழுமைக்கும் பரவக்கூடிய வகையில் இன்றைய தொழில்நுட்பம் உதவுகிறது. அதாவது உலகின் எந்த மூலையில் இருந்தும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை ஈர்க்க முடிகிறது.

உதாரணமாக, அண்மையில் கேரளத்திலிருந்தும், தமிழகத்திலிருந்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ஒருவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி மூலம் அமைப்பில் இணைந்துள்ளார். மற்றொரு நபரைப் பொருத்தவரை, அவரை அமைப்புக்கு ஈர்த்தவர் எங்கிருக்கிறார் என்றே அவருக்குத் தெரியவில்லை. இதுதான் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.அதுமட்டுமின்றி, பயங்கரவாதத் தாக்குதல்களும், பயிற்சிகளும் விடியோவாக “யு-டியூப்’களில் பதிவேற்றப் படுகின்றன. இதனால், ஈர்க்கப்படும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க இன்றைக்கு குரு-, சிஷ்யன் முறையோ அல்லது ஒரு பல்கலைக்கழகம் மூலம் கற்பிக்க வேண்டிய அவசியமோ தேவையில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.

அதுபோல, பயங்கரவாதத் தாக்குதல் நடைமுறைகளும் வெவ்வேறு வடிவங்களைப் பெற்றுள்ளன. அதாவது, துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மூலமான பயங்ரவாதத் தாக்குதல்கள் என்ற நிலை மாறி, லாரிகளை மேலேற்றி மக்களைக் கொல்வது எனக் மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தும் வகையில் புதிய வடிவங்களை பயங்கரவாதம் பெற்றுள்ளது. குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இதுபோன்ற தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலுக்குத் தீர்வு காண்பது என்பது எளிதான காரியமல்ல. எந்த நாட்டில் எப்போது தாக்குதல் நடைபெறும் என்பதைக் கணிப்பது மிக மிகக் கடினம். இதற்கு நாடுகளிடையேயான ஒருங்கிணைப்பு மிக அவசியம். அப்போதுதான் இன்றைய சூழ்நிலையை எதிர்கொள்ள முடியும்.

இருந்தபோதும், உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, பயங்கரவாத அமைப்புகளால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவது இந்தியாவில் மிக மிகக் குறைவாகும். இதற்கு இயற்கையான சமூக அமைப்பே முக்கியக் காரணம். ஆனால், சிரியாவைப் பொருத்தவரை 3 இல் இரண்டு பங்கு இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இடம்பெற்றுள்ளனர் என்றார் அவர்.

கருத்தரங்கில் முன்னாள் டிஜிபி வி. வைகுந்த் பேசியதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் அரசியல் விருப்பு, வெறுப்பும் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். பாகிஸ்தானுக்கு சீன ஆதரவு அளித்துவரும் நிலையில், பாகிஸ்தானை முழுமையாகத் தனிமைப்படுத்துவது என்ற கொள்கையை மத்திய அரசு எடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்றார் அவர்.