September 20, 2021

ஜல்லிக்கட்டு விவகாரம் : மெரினா உள்பட தமிழகமெங்கும் தொடரும் பதட்டம்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு சுப்ரீம் கோர்ட் வரை போய் தடை வாங்கியது. கடந்த 2014ல் வாங்கப்பட்ட இந்தத் தடையால் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. நடப்பாண்டில் எப்படியும் சுப்ரீம் கோர்ட் தடையை நீக்காவிட்டாலும், மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அனுமதி வழங்குவார்கள் என்று இறுதி நேரம் வரை காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர் ஜல்லிக்கட்டு ஆரவலர்கள்.இதனிடையே சுப்ரீம் கோர்ட் சுப்ரீம் கோர்ட் தடையை மீறி சில இடங்களில் காளைகள் கடந்த நான்கு நாட்களாக அவிழ்த்து விடப்பட்டது.

jallikattu merina jan 17

மேலும் முறைப்படி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் குவிந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் மாணவர்களும், இளைஞர்களும் குவிந்தனர். தொடர்ந்து இன்று காலை வரை 21 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளி மாவட்டங்களில் வந்திருந்த இளைஞர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளை உள்ளூர் மதுரை மக்கள் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.இதையடுத்து இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மணடபத்தில் அடைக்கப்பட்டனர்.

உடனே தங்கள் உரிமைக்காக போராடிய அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இன்று காலை முதல் மெரீனா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் குவிந்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், பல இளைஞர்கள் திருமண மண்டபத்தில் உள்ளனர். இவர்கள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தங்களது உண்ணாவிரதத்தை கைவிட்டு உணவருந்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனிடையே மெரினா அருகே ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி நடிகர்கள் மயில்சாமி, டி.ராஜேந்தர் ஆகியோர் போராட்டக் களத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களுடன் இணைந்து தொடர் முழுக்கங்களை எழுப்பினர். ஃபேச்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் விடுக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் பலர் பங்கேற்றுள்ளனர்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். ஆனால் எந்த தலைவரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று அரசியலாக்க வேண்டாம் என்று இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து ஸ்டாலின் போராட்டக் களத்திலிருந்து திரும்பி விட்டார்.

இதனிடையே காவல்துறையினர் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக அரசு குழு ஒன்றை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று போராட்டம் நடத்துபவர்கள் கூறியுள்ளனர். மெரினாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள், இளைஞர்கள் செல்போனில் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக இளைஞர்கள் கூறுகையில், ”ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினத்தை கருப்பு குடியரசு தினமாக அனுசரிப்போம். தேசியக் கொடிக்குப் பதிலாக கருப்புக் கொடி ஏற்றுவோம். கருப்புச் சட்டை அணிவோம்.ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் நோட்டாவுக்கே எங்கள் ஓட்டு என்று தெளிவாகப் பதிவு செய்வோம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்காத எந்தக் கட்சியையும் ஆதரிக்க மாட்டோம்” என்று கூறினர். இதனால் கடற்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.